பத்திரிகை ஆசிரியர் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதாக குற்றம்சாட்டப்படுவது தவறு

rsfபத்திரிகை ஆசிரியர் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதாக குற்றம்சாட்டப்படுவது தவறென்று சொல்கிறது எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்புகடந்த 20ஆம் திகதி விடுதலைப் புலிப் போராளிகள் நடாத்திய தமது விமானமூலம் நடாத்திய தற்கொலைத் தாக்குதலுக்கு உதயன் சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியர் என். வித்தியாதரன் உதவியதாக அரசாங்கம் சொல்வதைக் கேட்டு எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தவறென்று நிரூபிக்கும் வகையில் கடந்த ஒக்ரோபரில் வித்தியாதரனைக் கொழும்பில் சந்தித்த அதன் ஆசியப்பிராந்தியப் பொறுப்பாளர் வின்சென்ற் புறொசெல்  அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது 2008ஒக்ரோபர் 28 அன்று இரவு விடுதலைப் புலிகள் தலைநகரில் விமானத் தாக்குதல் நடாத்திய போது தான் கொழும்பின் மத்தியில் வித்தியாதரனுடன் அவருடைய பத்திரிகையின் நிலைமை தொடர்பாக உரையாடிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த விமானத் தாக்குதலாலும் இலங்கை அரச படைகளின் எதிர்விமானத் தாக்குதலாலும் அப்போது வித்தியாதரன் அதிர்ச்சி அடைந்தவராகவும் பயவுணர்வு ஆட்கொண்டவராகவும் காணப்பட்டார். அந்தத்தருணத்தில் அவர் யாருக்கும் தொலைபேசி எடுக்கவுமில்லை. அவருக்கு எந்தத் தொலைபேசி அழைப்பும் வரவுமில்லை அத்தோடு அவர் எந்தச் சைகையையும் வெளிப்படுத்தவுமில்லை.  

அரசாங்க அமைச்சர்களும் அரசு சார்பான பல ஊடகங்களும் கடந்த 20ஆம் திகதி நடந்த விமானத்தாக்குதலுக்கு வித்தியாதரன் உதவியதாக காவற்துறையினர் சந்தேகப் படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

வன்னியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு மிகுந்த நகைப்புக்கிடமானது என்றும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்புத் தெரிவித்துள்ளது.

ஒரு சிறந்த பத்திரிகையாளருடைய பண்பு மோதலில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் தொடர்பு கொண்டு விடயங்களை அறிக்கையிடுவதாகும். அத்தோடு அவருக்கு ஏதாவது தொலைபேசி அழைப்பு வந்திருக்குமாயின் அது கூட ஊடகவியலாளர் என்ற வகையில் மக்கள் அவருக்கு தகவல்கள் எதையாவது வழங்குவதற்காக தொடர்பு கொண்டிருக்ககூடும். அவ்வாறான தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

எவ்வாறாயினும் வித்தியாதரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஊடக அமைச்சரைக் கேட்டுக் கொள்வதோடு அவருடைய பாதுகாப்புக் குறித்து கூடிய கவனம் கொள்வதோடு அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

அவர் கைதின் போது காயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருவதாகவும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.