சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு வழங்க அமரிக்க சட்ட நிபுணர்களின் ஆதரவு திரட்டல்

அமெரிக்க அதிகாரிகளின் விசாரணைகளைச் சந்திக்கவுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு வழங்குவதற்காக அந்நாட்டிலுள்ள முன்னணி சட்ட நிபுணர்கள் அங்குள்ள  ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமய கட்சியின் ஆதரவாளர்கள் இணைந்து தயார்ப்படுத்தியிருப்பதாக வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

question-mark2aஅமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் சரத் பொன்சேக்காவிற்கு சட்டவல்லுநர் குழுவொன்றை வழங்கியுள்ள போதிலும், அதுகுறித்து திருப்தியடைய முடியாது எனத் தெரிவித்து, குறித்த குழுவினர் வேறு சில சட்டத்தரணிகளின் உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் முனைப்புகளை மேற்கொண்டுள்ளன.
 
இலங்கைத் தூதரகத்தினால் வழங்கப்பட்ட சட்ட வல்லுனர் குழுவிற்கு மேலதிகமாக மற்றுமொரு பிரசித்திபெற்ற சட்ட வல்லுநர் குழுவின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சரத் பொன்சேக்கா எதிர்பார்த்திருந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசத் தரப்பினால், ஜெனரல் சரத் பொன்சேக்காவை அமெரிக்காவில் சிக்க வைக்க சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. தனது குறுகிய கால விடுமுறையை தமது பிள்ளைகளுடன் கழிப்பதற்காக பொன்சேக்கா அமெரிக்காவிற்குச் சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.