எம் மீது விசாரணை நடத்த நீங்கள் யார் – அமெரிக்கா மீது இலங்கை கடும் சீற்றம்

இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு எனவும் வன்னி இராணுவ நடவடிக்கை செயற்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆராய அமெரிக்க அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் இல்லையென்பதால் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்காவிடம் விசாரணை நடத்த அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புத் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக விலக்கிக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

srilanka-governmentஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 67 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில்கூட வன்னி இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் உண்மையில் இடம்பெற்றனவா என்ற தீர்மானத்திற்கு வரமுடியாது என்பதுடன் அதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், இறையாண்மையுள்ள நாடொன்றின் இராணுவத் தலைவரிடம் விசாரணை நடத்துவதானது நாட்டின் உள்விவகாரங்களில் பாரதூரமாக தலையிடும் நடவடிக்கையாகும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
அத்துடன், வெள்ளைக்கொடிகளைத் தாங்கிவந்த புலிகளைக் கொலை செய்தமை தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி எவ்விதக் கருத்துக்களையும் வெளியிடவில்லையென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் சரத் பொன்சேக்காவிடம் விசாரணை நடத்த தீர்மானிக்க முன்னர், இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான இயன் கெலி, கருத்து வெளியிட்டிருந்தார். வன்னி இராணுவ நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிந்துகொள்ளும் தேவை அமெரிக்காவிற்கு இருப்பதாக இயன் கெலி கூறியிருந்ததாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறியிருந்தார்.
 
இதேவேளை, அமெரிக்காவின் இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு இலங்கை நேற்று அறிவித்துள்ளது. இலங்கை போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தோல்வியடைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் அமெரிக்க அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அதிகாரங்களை ஒருதலைப் பட்சமாக பயன்படுத்தத் தயாராவது முற்றுமுழுதான சட்டவிரோத நடவடிக்கையென அரசாங்கம் கூறியுள்ளது.
 
அதேவேளை, விடுதலைப் புலிகளின் பிரதான சட்ட ஆலோசகரான விஸ்வநாதன் ருத்திரகுமாரிடம் பயங்கரவாதத்திற்கு உதவியமை குறித்து இதுவரை அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைகள் எதனையும் நடத்தவில்லையெனத் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.