தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றமற்றவர்கள் ‐ நீதிமன்றம் அறிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றமற்றவர்கள் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

tnaஅரசாங்கத்திற்கும், படையினருக்கும் எதிரான வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
குறிப்பாக அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எஸ்.கஜேந்திரன், பீ.அரியநேத்திரன், கே.சிவாஜிலிங்கம் மற்றும் எஸ்.ஜெயனந்தமூர்த்தி ஆகியோர் குற்றமற்றவர்கள் என கொழும்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை குற்றமற்றவர்கள் என அறிவிக்கத் தீர்மானித்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும் பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தவராசா நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.