ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது

வாகனங்களுக்கு கல்லெறிந்தார் என்று பம்பலப்பிட்டி கடலில் வைத்து இளைஞர் ஒருவர் காவற்துறையினரினால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

09_01_07_colombo_pande_03_59660_435கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று நண்பகல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.

காவற்துறையினரின் கண்மூடித்தனமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அதனைக் கண்டிக்கும் வகையிலும் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், சமய தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவற்துறையினருக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் குற்றமிழைத்த காவற்துறையினருக்கு தகுந்த தண்டனை வழங்கும்படியும் கோஷமிட்டனர்.
 
இதேவேளை புதிய காவற்துறை மா அதிபராக கடமையேற்றுள்ள மஹிந்த பாலசூரிய இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பம்பலப்பிட்டி கடலில் இடம்பெற்ற இந்த படு பாதகமான சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், இதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
 
முன்னாள் காவற்துறை மா அதிபரின் காலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு அவரால் தகுந்த நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் போய்விட்டது, எனினும் புதிய காவற்துறை மா அதிபராக கடமையேற்றுள்ள மஹிந்த பாலசூரிய மக்களுடன் சிநேகபூர்வமாகவும் ஒத்துழைப்புடனும் செயற்பட போவதாக தெரிவித்திருந்தார்.
 
அப்படி அவர் செயற்படுவாராயின்  இந்த சம்பவத்திற்கான விசாரணைகள் உரியமுறையில் நடைபெற்ற குற்றவாளிக்கு உரிய தண்டனைப்பெற்றுக் கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
 
இந்த சம்வம் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி மிகவும் அர்ப்பணிப்புடனும், அவதானத்துடனும் செயற்படுவதாக தெரிவித்த அவர், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை காவற்துறையினர் கைது செய்கிறார்களா? என்று தான் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.