தமிழீழத்தால் பெற்றெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்காக?

நேற்று பாராளுமன்றத்தில் எதிரணிகளின் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணி அங்குராற்பண வைபவம் இடம்பெற்றது. இதில் 12 கட்சிகள் பங்கெடுத்து கொண்டுள்ளன. இந்த எதிரணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச கட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அணி திரண்டுள்ள எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முன்னணி என்பது குறிப்பிடதக்கது.

tnatamileelamquestionஇந்த கூட்டு முன்னணியின் நோக்கம் பலம் இழந்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சியும்  மகிந்த எதிர்ப்பாளர்களும் கூட்டிய  கூட்டமைப்பு. ஆனால் இதில் சிறுபான்மை இனங்கள் பற்றிய சிந்தனை எதுவுமே இல்லை.

இந்த கூட்டு முன்னணியில் பேசிய மனோ கணேசன் ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் சமத்துவமாக வாழ கூட்டு முன்னணி உழைக்கும் என குறிப்பிட்டார்.

இந்த கருத்திற்கும் மகிந்த இப்போது செய்வதற்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் இணைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது சம்பந்தமான முடிவு  நாளை தெரியவரும் என அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியிருப்பதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதிய கூட்டு முன்னணியில் இணைவது என தமிழ்த்தேசிய கட்சியின் சார்பில் கொள்கையளவில் முடிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

உண்மையில் எதிரணியினரின் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பினை பாவித்து தமக்கு வாக்குகளை பெறும் நோக்கில் தான் செயற்படப்போகின்றது. மகிந்த மீதான தமிழ் மக்களின் அதிருப்தியினை வைத்து அந்த வாக்குகளை தாம் பெறலாம் அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினை பயன்படுத்தலாம் என ரணில் திட்டம் போட்டிருக்கின்றார்.

இதற்கிடையே விடுதலைப்புலிகளின் எஞ்சியுள்ளவர்களுடனும் ஐக்கிய தேசிய கட்சி கதைக்க விரும்புவதாகவும் ஒரு தகவல். விடுதலைப்புலிகளையும், புலம்பெயர் தமிழர்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தம்முடன் இணைவதற்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்பதற்காக பல ஐக்கிய தேசிய கட்சியின் முகவர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு வந்துள்ளனர் என்பது இதனை மெய்ப்பிப்பதாய் அமைகின்றது.

ஆகவே மகிந்தவினை அகற்றுவது என்ற எதிரணியினருக்கு முண்டு கொடுப்பது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கமா அல்லது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தான் நோக்கமா? யாருக்காக த.தே.கூ.

எதிரணி தேர்தலில் வெல்ல கூடிய சாத்தியம் இருந்தால் கூட பரவாயில்லை வென்றபின் மக்களிற்கான நலன்கள் பற்றி ஏதாவது பேச முடியும் ஆனால் அதற்கும் சாத்தியம் இல்லை எனவே ஏன் இந்த கொள்கை மாற்றம்?

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.