நெதர்லாந்திலிருந்து திருப்பி அனுப்பப்படவிருக்கும் தமிழ் அகதிகளைக்காப்பாற்ற நடைபெற்ற அவசரஒன்றுகூடல்

நெதர்லாந்துத் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பிலுள்ள பல தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் (31.10.2009) சனியன்று உத்ரெக் நகரில் அவசரமாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் நெதர்லாந்தில் தற்போது அரசியல் அடைக்கலம் நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவிற்குத் திருப்பிஅனுப்புவதற்காக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை திருப்பி அனுப்பினால் தாயகத்தில் சிங்கள அரசினால் இவர்களிற்கு ஏற்படவிருக்கும் உயிராபத்துக்களையும் சித்திரவதைகளையும் நெதர்லாந்தின் அரசிற்குத் தெரியப்படுத்தி இவர்களை திருப்பிஅனுப்புவதை தடுக்கும் வழிமுறைகள்பற்றி கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலின் முடிவில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்க்கு முடிவெடுக்கப்பட்டது.

முதலாவதாக, உடனடியாக நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளைச் சந்தித்து, தமிழ்மக்களிற்கெதிராக மனிதஉரிமைமீறல்களிலும் போர்க்குற்றங்களிலும் தொடர்ச்சியாக ஈடுபடும் சிங்கள அரசினால், இங்கிருந்து தமிழர்களைத் திருப்பி அனுப்பினால் ஏற்படவிருக்கும் உயிர்ஆபத்துகள்பற்றி எடுத்துரைப்பது.

இரண்டாவதாக, நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைப்பதற்காக, இவர்களைத் திருப்பிஅனுப்பினால் ஏற்படும் ஆபத்துக்களை உறுதிப்படுத்தி நெதர்லாந்துவாழ் தமிழர்களிடம் கையெழுத்து சேகரித்தல்

மூன்றாவதாக, டென் காக் நகரிலுள்ள வெளிவிவகார அமைச்சை நோக்கி தமிழ்மக்கள் அமைதியாக ஊர்வலமாகச்சென்று இக்கையெழுத்துக்களையும் மகஜரையும் கையளித்தல்.

மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை விரைவாகச் செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டு மாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இக்கலந்துரையாடல் இரவு 10 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.