எங்கள் அண்ணாக்கள் அக்காக்கள் எங்கே…???!

உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி
வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!

களப்பலியாய் போனவர் போகட்டும்
அவர்களெம் மாவீரச் செல்வங்களாய்
எம்மோடு வாழ்வது உறுதி..!
ஆனால்..
சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்
உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!

ltte_fighting_puthukudiyiruppu_outகவிபாடும் தமிழ் சொல்லாலே
புலியெனப் பாய்ந்த
புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!

“ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு” என்ற சொல்லை வகுத்து
ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து
புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன்
பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!

திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி
அவன் பொன்னமான் தம்பி
தமிழீழ அரசியல் தத்துவஞானி
எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங்கே..??!

இளம்பிறையாய் யாழ் வீதி எங்கும் ஓடோடி
அரசியல் கருத்துரைத்து
இளைய நெஞ்சங்களில் இடம்பிடித்த
அந்த இளம்பரிதி அண்ணன் எங்கே..??!

தெந்தமிழீழம் தந்த களத்தளபதி
இராணுவப் பேச்சாளன்
உலக ஊடகங்களின் கவனக் கவர்வான்
இளந்திரையன் அண்ணன் அவன் எங்கே..??!

தமிழீழத் தலைநகராம்
திருமலையின் நிர்வாகி
எழில் மிகு நகரின் தளபதி
எழிலன் அண்ணன் எங்கே…??!

இப்படி எத்தனையோ அண்ணாக்கள்
நேற்று வரை எம்மோடு உறவாடிய
எங்கள் பாச உறவுகள் எங்கே..??!
இனிய தமிழ் பேசி எம் இதயங்களில் வாழ்ந்த
தமிழினிய அக்காக்கள் எங்கே..??!

சிங்களச் சிறை சென்றாரோ
புத்த மைந்தன் மகிந்தவின்
சித்திரவதைக்கு இரையாகிப் போனாரோ..??!

சொந்தங்களை
விலைமதிப்பில்லா அந்தச் செல்வங்களை
தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்
எங்கள் உறவுகள் எங்கே..??!

கண்டவர் சொல்வரோ
காட்டிக் கொடுத்தோர் இரங்குவரோ..??!
இன்றேல்
மண் வாரி வசை பாடுவரோ
கல் வாரி என் தலை மீது விட்டு எறிவரோ…??!
எனக்குக் கவலை இல்லை..!
என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!

காலமே பதில் சொல்
நான் அவர்களை உயிரோடு
காண வேண்டும்
என் சுதந்திர தேசத்தின்
தேச பிதாக்களை
தரிசிக்க வேண்டும்..!

அவர்கள் மூச்சாய் வாழும்
தமிழீழக் காற்றே
தேடி வந்து ஒரு சேதி சொல்
என் சொந்தங்களைக்
கண்டதாய்.. உயிரற்ற உடலாய் அன்றி
உயிரோடு கண்டதாய் சொல்..!
காத்திருக்கிறேன்..
விழி எங்கும் நீர் நிறைய…!!!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.