கோத்தபாயாவை அமெரிக்கா விசாரணை செய்தமையை வெளிப்படுத்தியமை குறித்து விமல் மீது ஜனாதிபதி ஆத்திரம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் சம்பந்தமாக அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளமை குறித்த தகவலை நாட்டிற்கு வெளிப்படுத்திய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மீது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆத்திரமடைந்துள்ளார்.

mahinda_srilankaஇந்தத் தகவலை வெளியிட்டமைக்காக அவரை ஜனாதிபதி கடுமையாக திட்டியிருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிகாரிகளினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசாரிக்கப்பட்ட விடயம் நாட்டு மக்களுக்கு மறைக்கப்பட்டிருந்ததுடன், அமெரிக்க செல்லும் வரை கூட்டுப் படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்காவும் அதுகுறித்து அறிந்திருக்கவில்லை.
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த போது அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் அவரிடம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர் என கடந்த 2ம் திகதி வீரவங்ச நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தகவல் வெளியிட்டிருந்தார். கோதாபய ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் இலங்கையின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்ததுடன், இந்தச் சந்தர்ப்பத்தின் போது அவரிம் வாக்குமூலம் பெறப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் வீரவங்ச குறிப்பிட்டிருந்தார்.
 
எவ்வாறாயினும், வீரவங்சவினால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டதன் பின்னர்  கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தான் தப்பிக்கொள்வதற்காக ஜெனரல் சரத் பொன்சேக்காவைக் காட்டிக்கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். சரத் பொன்சேக்காவை கைதுசெய்ய அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
 
இதேவேளை, நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி லக்ஸ்மன் கிரியெல்ல, இதற்கு முன்னர் கோதாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றிருந்த போது, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது எனவும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே சரத் பொன்சேக்காவிம் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும், இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சரத் பொன்சேக்காவை அறிவுறுத்தாத நிலையில் அவர் அமெரிக்காவில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.