இலங்கை பயங்கரவாதிகளால் கே.பி. கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரும், முன்னாள் சர்வதேசத் தொடர்பாளருமான கே.பி. என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் இலங்கைப் புலனாய்வுப்பரிவினரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி லங்கா கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

kpசரியான தகவல்களை அவரிடமிருந்து பெறும் நோக்கில் அவர் மீது கடும் சித்திரவதைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. 

கொழும்புக்கு வெளியே உள்ள பனாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் அங்கு வைத்தே பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப்பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.  

விசாரணைகளின் போது விசாரணைக்கு ஒத்துழைக்காத அவர் பெருமளவுக்கு மௌனத்தையே கடைப்பிடித்து வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரின் சித்திரவதையின் போது ஒரு சமயம் அவர் மூச்செடுக்க முடியாமல் மயங்கி விழுந்ததாகவும், மயக்கத்தைத் தெளிவிக்க இராணுவ மருத்துவப் பிரிவினரை அழைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. 

கே.பியை கோத்தபாய ராஜபக்ச சந்தித்ததாக சொல்லப்படும் சந்தர்ப்பத்தில் கூட அந்தச் சந்திப்பு ஒரு சில நிமிடங்களே நீடித்ததாகவும், அச்சந்திப்பில் கூட கே.பி. பிடிவாதமாக மௌனத்தையே கடைப்பிடித்ததாகவும், அவ்விடத்தை விட்டகன்ற கோத்தபாய சிங்கள மொழியில் மோசமான வார்த்தைகளால் கே.பியை திட்டியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தக்காரணங்களாலேயே இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கே.பியை விசாரிப்பதற்கு  இது வரை இலங்கை அரசு இடம் கொடுக்கவில்லை என்றும், அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தின் போது தான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டது குறித்து வெளிப்படுத்தி விடக் கூடும் என்று இலங்கை அரசு அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை கே.பிக்கு இருதய நோயும், நீரிழிவு நோயும் உள்ளது என்பதும் அவர் அவற்றால் ஏற்கெனவே கடும் சிரமங்களுக்குள்ளாகி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் கடுமையான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பி. சட்டஆலோசனை பெறவோ, இது தொடர்பாக தொடர்புடைய ஐநா அமைப்புக்கள் அவரைப் பார்வையிடவோ இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
 
கே.பி. கடந்த ஜுலை ஆரம்பத்தில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.