மீழ் குடியேற்றப்பட்ட இடங்களில் தொண்டு நிறுவனங்கள் வேலை செய்ய தடை – ஐ. நா அதிருப்தி

மீள்குடியேற்றம் செய்யப்பட்டுக்கொண் டிருக்கும் அகதிகள் மத்தியில் முழுநேர சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை இலங்கை அரசு மனிதாபிமானப் பணியாளர்களுக்கு வழங்காமல் இருக்கின்றது என்று ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தியும் கவலையும் வெளியிட்டுள்ளது.

unஇலங்கை முகாம்களில் உள்ள அகதிகள் அண்மைய நாள்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றமை குறித்து “ரொய்ட்டர்’ செய்திச் சேவைக்கு ஐ. நா  அலுவலகத்தின் தலைவர் சொலா டொவெல் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அப் பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:  இலங்கை அரசு முகாம்களிலுள்ள அகதிகளை அண்மைய நாட்களில் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புகின்றது.

ஆனால் இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றவர்கள் மத்தியில் முழுநேர சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை அரசு மனிதாபிமான நிறுவனங்களுக்கு வழங்கவேயில்லை. அகதிகள் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றபோது அவர்களுக்கு உணவு வசதி, தண்ணீர் வசதி, மலசலகூட வசதி ஆகியன முறையாக ஏற்பாடு செய்துகொடுக்கப்படுகின்றமை அவசியமாகும். மனிதாபிமான நிறுவனங்கள் முழுநேரமும் இம்மக்கள் மத்தியில் நின்று கடமையாற்றும் போதுதான் அவர்களின் குறைகளைக் கண்டறிந்து பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும்.

ஆனால் இம்மக்களுடன் முழு நேரமும் களத்தில் நின்று சேவையாற்றுவதற்கான அனுமதியை இலங்கை அரசு மனிதாபிமான நிறுவனங்களுக்கு வழங்கவில்லை. அரசினால் முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பப்படும் மக்கள் அவர்களின் சொந்த வீடுகளில் உடனடியாகக் குடியேற முடியாத நிலையில் உள்ளார்கள்.  இதனால் இந்த அகதிகள் பாடசாலைகள், ஆலயங்கள், சனசமூக நிலையங்கள் போன்ற பொது இடங்களில் தற்போது தங்கியுள்ளார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.