தமிழருக்கு தகரம் சிங்களவருக்கு இரயில்

இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டத் தமிழர்கள் ‘விடுவிக்கப்பட்டு’ தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது அவர்கள் வீடு கட்டிக் கொள்ள 2,600 டன் மின் முலாம் பூசப்பட்ட துத்தநாகத் தகடுகள் (Galvanized corrugated sheets) அனுப்பி வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Waterqueஇது 2.65 மில்லியன் டாலர் மதிப்புடைய நிவாரண உதவி என்றும், இதே மதிப்பிற்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல் தவணையாக 2,600 மெட்ரிக் டன் அளவிற்கு துத்தநாதத் தகடுகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கொழும்புவிலிருந்து வெளியிடப்பட்ட தூதரக அறிக்கை தெரிவிக்கிறது.

இதுமட்டுமின்றி, தங்கள் வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படும் தமிழர்கள் தாங்கள் மேற்கொண்டு வந்த விவசாயத் தொழில் செய்ய 50,000 குடும்பங்களுக்கு உழவுக் கருவிகளும் அனுப்பப்படும் என்றும், ஏற்கனவே இதேபோன்று 20,000 குடும்பங்களுக்கு உழவுக் கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அத்தோடு அந்த அறிக்கை நின்றிருந்தால் இந்திய அரசுக்கு தமிழர்களின் நலனில் அக்கறை இருப்பதாகக் கூட புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களர் பகுதிகளின் மேம்பாட்டிற்கும் நிதியுதவி செய்யும் விவரமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

இலங்கையின் தென் பகுதியில் உள்ள மாத்தரையிலிருந்து கொழும்புவிற்கு – 100 கி.மீ. தூர இரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு மேலும் 67.4 மில்லியன் டாலர் கடன் அளிக்க இந்திய அரசு முன்வந்துள்ளதாகவும் கூறியுள்ள தூதரக அறிக்கை, ஒரு முக்கிய விவரத்தையும் தருகிறது.

கொழும்பு – மாத்தரை இரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு ஏற்கனவே இந்திய அரசு 100 மில்லியன் டாலர்கள் (ரூ.500 கோடி) அளித்துள்ளது என்பதுதான் அந்தத் தகவல்!

இந்த நிதியுதவி Line of Credit என்ற வசதியின் கீழ் அளிக்கப்பட்டதாகவும், அதோடு கூடுதலாக இப்போது மேலும் 67.4 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Line of Credit என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட கடன் தொகையை தனது வாடிக்கையாளருக்கு வங்கி ஒதுக்கும். அந்த தொகையை அவர் எப்போது பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறாரோ அப்போது அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வசதி என்னவென்றால், அதனை வாங்கி பயன்படுத்தும்போதுதான் அதற்கு வட்டி கணக்கிடப்படும். அந்த அடிப்படையில் சிறிலங்க அரசிற்கு இந்தியா நிதியுதவி செய்கிறது. அதிலிருந்துதான் 100 மில்லியன் டாலர் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடன் தொகை எவ்வளவு என்பதும், அதன் கீழ் எப்போதெல்லாம் கொடுக்கப்பட்டது என்பதும் இங்குள்ள மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இந்தியத் தூதரக அறிக்கைக் கூட கொழும்பு ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டதுதானே தவிர, இந்திய ஊடகங்களுக்கு அல்ல. இதனை விக்ரமாதித்தன் பத்திரிக்கை விவரமாக வெளியிட நாம் அறிந்துகொள்ள முடிந்தது!

உலக நாடுகள் எதனிடமும் கடன் கேட்க தகுதியற்ற நிலையை எட்டியுள்ள சிறிலங்க அரசிற்கு, ‘நீ கொடுக்கவில்லையென்றால் நாங்கள் கொடுப்போம்’ என்று மிரட்டி, பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து 2.6 பில்லியன் கடன் பெற்றுக் கொடுத்த இந்தியா, அந்நாட்டின் சிங்களப் பகுதிகளின் மேம்பாட்டிற்கு அள்ளி அள்ளி வீசுகிறது. இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை!

அப்படி எந்த எதிர்ப்பும் வரக்கூடாது என்பதற்குத்தானே தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் சென்று வன்னி முகாம்களைப் பார்வையிட்டுவிட்டு அறிக்கை கொடுத்தனர்.
அவர்கள் அறிக்கை அளித்த இரண்டு நாட்களிலேயே உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சென்னை வந்து தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தார். சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், “இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்கு எப்படியெல்லாம் உதவுவது என்று விவாதித்தோம்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

அதனடிப்படையில்தான் ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களில் குடியமர்த்தப்படும்போது வீடு கட்டிக்கொள்ள துத்தநாகத் தகடுகளை இந்திய அரசு அளிக்கப்போகிறது! உழவுக் கருவிகளை அளித்தது, இனியும் அளிக்கப்போகிறது.

தமிழர்கள் மறு குடியமர்விற்கு உதவ துத்தநாகத் தகடுகள்! இதுதான் அவர்கள் மறுவாழ்வு பெற இந்தியா செய்யும் உதவி!

ஆனால், ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசிற்கும், சிங்கள பகுதிகளின் மேம்பாட்டிற்கு முடிந்தவரை உதவப் போகிறது. இதுதான் தமிழக நாடாளுமன்றக் குழு சென்று வந்ததால் சிறிலங்க அரசிற்கு கிடைக்கும், கிடைக்கப்போகும் பலன்.

இந்தியாவிடமிருந்து கிடைக்கும் தடையற்ற, எதிர்ப்பற்ற இந்த உதவியை சாத்தியமாக்கியது நாடாளுமன்றக் குழுவின் பயணமே என்று நாம் சொல்லத் தேவையில்லை. இதோ தமிழக நாடாளுமன்றக் குழு தமிழகம் திரும்பியதும் சிறிலங்க அரசின் ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா கூறியது:

“இதுவரை சர்வதேச நாடுகளையும், அமைப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இலங்கைக்கு பயணம் செய்து நலன்புரி நிலையங்களில் (வொன்னி முகாம்களைத் தான் இப்படிக் கூறுகிறார்) தங்கியுள்ள மக்களைப் பார்வையிட்டுள்ளனர். முகாம்களைப் பற்றிய மதிப்பீடுகளை மேற்கொண்டப் பின்னர் தங்கள் நாடுகளுக்குச் சென்று பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டனர். சிலர் விரைவான மீள் குடியேற்றம் குறித்து அழுத்தங்களை (சிறிலங்க அரசிற்கு) அளித்தனர். சிலர் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இடம் பெயர்ந்த மக்களின் விவகாரத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக அணுகிய தமிழக எம்.பி.க்கள், அகதிகளுக்கு சிறிலங்க அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை மதிப்பிட்டு திருப்தி வெளியிட்டனர். சிறந்த செய்தியொன்றை சர்வதேச சமூகத்திற்கு விடுத்துள்ளனர். இதுவரை சிறிலங்க வந்தவர்களிலேயே தமிழக எம்.பி.க்கள் சிறிப்பான அணுகுமுறையை மேற்கொண்டனர். அவர்கள் எந்த விடயம் குறித்தும் பெரிய அழுத்தத்தை வெளியிடவில்லை. நிலைமையை புரிந்துகொண்டுள்ளனர். சிறிலங்காவிற்கான இந்தியாவின் உதவிகள் அதிகரிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும்”

இப்போது புரிகிறதா… ஏன் நாடாளுமன்றக் குழு அளித்த அறிக்கையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.