ஜே.வி.பி, த.தே கூட்டணி ஆகியோர் சம்மதித்தால் சரத் பொன்சேகாவை பொது வேட்பளராக நிறுத்த ரணில் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதில் எனக்கு பிரச்சினை இல்லை ஆனால் இதற்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இணங்கவேண்டும் என ரணில் விக்கிரம சிங்க கூறியுள்ளார். நேற்று உதயன் ஆசிரியர் வித்தி அவர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

2103ranil-jஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமானால் பொது வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் பொது வேட்பாளர் ஒருவரை எதிரணி சார்பில் ஏகமனதான நிறுத்தும் திட்டத்துக்கு ஒத்துழைக்க தாம் தயார்.அதற்கு முன்னர் அடிப்படையான சில விடயங்களில் இணக்கம் காணப்படவேண்டும். பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டாலும் அத்திட்டத்தை ஏற்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் அப்படி சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதாயின் அத்திட்டத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவு மட்டுமன்றி ஜே.வி.பி மற்றும் தமிழ்க் கூட்டமைப்பின் ஏக மனதான ஆதரவு அவசியம்.

தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவை அதற்குப் பெறுவதாயின் சரத் பொன்சேகா தொடர்பில் தமிழ் மக்களுக்கு உள்ள சில கேள்விகளுக்கு  விடயங்களுக்கு தகுந்த பதிலை அவர் அளிக்கவேண்டும். அவை ஏற்புடையவை எனத் தமிழ் மக்கள் கருதுவார்கள் எனத் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிக்குமானால், பொன் சேகாவை பொது வேட்பாளராக ஏற்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.

இவ்விடயத்தில் ஜே.வி.பியும் தமிழ்க் கூட்டமைப்பும் கூட ஓர் இணக்கத்துக்கு வரவேண்டியிருக்கும்.சில வாக்குறுதிகளை அவ்வாறு பொன் சேகாவை பொது வேட்பாளராக ஏற்பதாயின் அவர் வேறு சில விடயங்களை நிறைவு செய்ய வேண்டியிருக்கும்; சில வாக்குறுதிகளை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

அதாவது;

  • தாம் ஜனாதிபதியாகி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறை அறவே ஒழிப்பார் என அறிவிக்க வேண்டும்.
  • இடம்பெயர்ந்துள்ள அகதிகளின் மீள்குடியேற்றம் பற்றிய தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக பிரகடனப்படுத்த வேண்டும்.
  • தாம் ஜனாதிபதியானதும் உடனடியாக காபந்து அரசு ஒன்றை ஸ்தாபிப்பார் என்றும், அதன் பிரதமராக என்னை நியமிப்பார் என்றும், அந்தக் காபந்து அரசின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்கள் ஜே.வி.பியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவிக்கவேண்டும்.
  • அந்தக் காபந்து அரசு உடனடியாக அவசரகாலச் சட்டத்தை நீக்கி அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்குத் தாம் முழு ஒத்துழைப்புத்தருவார் என அவர் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கவேண்டும்.
  • குறுகிய காலத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு முழு அதிகாரத்துடன் தோற்றுவிக்கப்படும் நாடாளுமன்றம் அமைதி, சமாதானம், தீர்வு ஆகியவை எட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தவேண்டும்.

இப்படி தமது நிபந்தனைகளை அடுக்கினார் ரணில் விக்கிரமசிங்க.
இத்தகைய உடன்பாடு எதிரணி இடையே எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன என நம்பிக்கையும் வெளியிட்டார் அவர்.

இந்த சூழ்நிலை காரணமாக கலங்கிப் போய் இருக்கும் அரசு, உத்தேச ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்தும் எத்தனத்தில் இருந்து பின்வாங்கக் கூடும். அப்படி நடந்தால் அது கூட எமக்கு வெற்றி தான் என்றார் ரணில்.

நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை அடியோடு ஒழித்தல், வன்னி அகதிகளின் மீள் குடியமர்வும், புனர்வாழ்வும், லஞ்சம்  ஊழல்  முறை கேடுகள் போன்றவை இல்லாத ஆட்சிமுறையை உருவாக்குதல், அவசர காலச் சட்டத்தை நீக்கி எதேட்சாதிகாரப் பிடியைத் தளர்த்தி வழமை நிலையை உருவாக்குதல், அமைதித் தீர்வை ஏற்படுத்தி சமாதானத்தை நிலை நாட்டுதல்  ஆகிய விடயங்களை முன்நிறுத்தி ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கும் திட்டத்தைத் தாம் முழுவதுமாக ஆதரிக்கின்றார் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மிக மிக முக்கியமான விடயம் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.