ஈழம் அமையும் வரை போர் ஓயாது: வைகோ

தனி தமிழ் ஈழம் அமையும் வரை இலங்கையில் போர் ஓயாது என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, இலங்கையில் தமிழ் இளைஞர்களை சிங்கள வெறியர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். விடுதலைப்புலிகளின் 50 ஆண்டு கால போராட்டத்தை மத்திய அரசு சிங்களர்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் வழங்கி வீழ்த்தி விட்டது.

Vaiko9விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறும் இலங்கை அரசு இன்னும் அப்பாவி தமிழர்களை முள் வேலிக்குள் அடைத்து சித்திரவதை செய்வது ஏன்?

இலங்கை பிரச்சினைக்காக முத்துக்குமார் உள்பட 14 பேர் தமிழகத்தில் தீக்குளித்தனர். ஆனால் அவர்களின் தியாகத்தை போலீசார் பல்வேறு பிரச்சினைகளை கூறி கொச்சைப்படுத்தினார்கள். அந்த தியாகிகளின் தீக்குளிப்பு நிச்சயம் வீண்போகாது. அதே போல் இலங்கை தமிழர்களின் உயிர் தியாகமும் வீண் போகாது. இலங்கையில் இன்னும் போர் முடியவில்லை. தனி தமிழ் ஈழம் அமையும் வரை அங்கு போர் ஓயாது. பிரபாகரன் மீண்டும் வந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்வார்.

இலங்கை அரசு செய்த இனப்படுகொலைகளாலும், போர்குற்றங்களாலும், ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளன. ஆனால் இதை தவிர்க்கவே இந்தியாவில் இருந்து எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டு, அங்கு தமிழர்கள் நலமாக உள்ளார்கள் என இலங்கை சர்வதேச நாடுகளை நம்ப வைத்துள்ளனர். இதற்காகத்தான் இங்கிருந்து எம்.பி க்கள் குழு சென்று வந்தது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.