எமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசு

புலம் பெயர் தமிழர் போராட்டமும் அது எதிர்கொள்ளும் சவால்களும்

ஈழத்தமிழர் போராட்டம், புலம் பெயர் தமிழ்மக்களின் கரங்களுக்கு வந்தடைந்துள்ள நிலையில், அரசியல் மயப்படுத்தப்பட்ட தாயகம் நோக்கிய இந்த புனிதப் பணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து வருகின்ற இந்த முக்கிய காலப்பகுதியில் இதனை சிதைக்கும் பல நடவடிக்கைகளும் , சதிகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

BTFlogoஎமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசும் அதனோடு சேர்ந்தியங்குபவர்களும் பகீரதப் பிரயத்தனத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த ஆறுமாதத்துக்குள் எமது மன உறுதியை குலைப்பதற்கும் போராட்டத்தினை பலவீனப்படுத்துவதற்காகவும் யாரும் எதிர்பாராத அளவிலான ஒரு பாரிய சதி உருவாக்கப்படுகின்றது. மிகவும் அவதானமாக இலங்கை அரசியலை கவனித்து, சதிவலைக்குள் எமது விடுதலைப்போராட்டம் சிக்கிவிடாது பாதுகாப்பது, புலம்பெயர் மக்களது கடமையாகும்

இற்றைக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழீழம் அதன் இறையாண்மையை இழந்தது. தொடர்ந்து வந்த காலனித்துவ ஆட்சிகளுக்கு அடிமைகளாக தமிழினம் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் சிங்கள அரசினால் எமது தேசிய இறையாண்மை, சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்டது.
 
முப்பது வருட அறவழிப்போராட்டமும், முப்பது வருட ஆயுதப்போராட்டமும் மீண்டும் எமது தாயகத்தின் விடுதலைக்கும் அதன் மீதான நம்பிக்கைக்கும் அத்திவாரமிட்டது. ஆனால் இப்போது சர்வதேசத்தின் கூட்டுச் சதியினால் எமது தேசக்கட்டுமானம் சிதைக்கப்பட்டது மட்டுமல்லாமல் விடுதலை மீதான நம்பிக்கையையும் சிதைத்துள்ளது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நம்பிக்கைச் சிதைவின் வெளிப்பாடாகத்தான் பலர் பல தீர்வுத்திட்டங்களோடு செயற்பட ஆரம்பித்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான உயிர்த்தியாகத்தின் மூலம் கட்டப்பட்ட, காப்பாற்றப்பட்ட எமது தேசத்தின் இறையாண்மையை சமரசப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேவேளையில் எமது மக்களின் இன்றைய துயரைத் தீர்ப்பதற்க்கு பல தளங்க்களிலும் வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மறுப்பதற்க்கில்லை.

தாயகம், தேசியம், இறமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் விழுமியங்களோடு பணியாற்றும் அனைவரோடும் பிரித்தானிய தமிழர் பேரவை இணைந்து பணியாற்றி வருகின்றது. ஆனால் அதேவேளை தமிழ்த் தேசியத்தை பலவீனப் படுத்தும் தரப்பினரோடோ அல்லது தமிழ்த்தேசியத்தை சமரசப்படுத்தும் தரப்பினரோடோ பேரவை ஒரு பொழுதும் சேர்ந்தியங்காது என்பதனைத் மீண்டும் தொரிவித்துக் கொள்கின்றது.
பேரவை, பிரித்தானிய சட்டங்களுக்குட்பட்டு மிகவும் வெளிப்படையாக இயங்குகின்றது. எமது பிராந்திய கிளைகளின் ஊடாகவோ அல்லது தலைமையகத்துக்கோ தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
 
சமகாலத்தில் பேரவையின் சார்பாக பேசவல்லவர்கள் சர்வதேச ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் ஆகியவற்றில் கிரமமான முறையில் தோன்றி பேரவையின் செயற்பாடுகள் குறித்தான விளக்கங்கள் அளித்து வருகின்றனர். அத்தோடு ஊடக தர்மத்தோடு இயங்கும் சகல ஊடகங்களோடும் தமிழர் பேரவை செயற்படுகின்றது.
 
மக்கள் கட்டமைப்பை உருவாக்குதல் , இதுவே எமது அரசியல் வேலைத் திட்டத்தின் அடித்தளமாகும். தற்போது பேரவை, மக்கள் அனைவரையும் உள்வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது பேரவைக்கு ஓர் ஜனநாயக அடிப்படையிலான கட்டமைப்பை உருவாக்க உதவும். 
 
அத்தோடு மக்களே தமது பிரதிநிதிகளை  தெரிவு செய்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த இலக்குகளை முன்வைத்து பேரவையானது பல்வேறு செயல்த்திட்டங்களை முன்னெடுக்கின்றது.

அத்தோடு எம் முன்னே காத்திருக்கும் பாரிய வேலைத்திட்டத்திற்கான ஆட்பலம் மற்றும் அனைத்து  வளங்களையும் சீர் செய்ய உதவிடும். எம் அங்கத்தவர்கள் உங்கள் அனைவரினதும் வாசல் தேடி வருகின்றார்கள். எமது பணியில் நீங்களும் முழுமையாக இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
 
அத்தோடு பின்வரும் செயற்திட்டங்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கின்றது. திறப்பு போராட்டம், மனித உரிமை   கவுன்சிலுடனான   பரப்புரை , இலங்கைக்கான ஐரோப்பிய வரிச் சலுகைக்கு எதிரான போராட்டம் ,இலங்கை உற்பத்தியையும் இலங்கையில் முதலீடுகளையும் எதிர்த்துப் போராடுதல். போரால் பாதிக்கப்பட்டோர் பதிவு , போர்க்குற்றத்தை நிருபித்தல் , இனப்படுகொலையை வெளிக்கொணரல்.

எமது போராட்டம் சர்வதேச அங்கீகாரத்தை பெறவேண்டும். அதற்கு நாம் சர்வதேசத்தின் ஆட்சியாளர்கள் , கொள்கை வகுப்பாளர்கள் , சர்வதேச சமூகத்தினர் ஆகியோரின் மனங்களை வெல்லவேண்டும் . அதேவேளை ஈழத்தில் பெரும் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் இயல்பு நிலைவாழ்க்கைக்கு திரும்ப வேண்டும், இந்த இலக்குகளை அடைய வேண்டிய பெரும் பணி நம் முன்னே இருக்கின்றது இதற்க்காக தமிழ் தேசிய தளத்தில் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதேவேளையில் மக்களின்முன் வெளிப்படையாக அரசியல் பணிகளை முன்னெடுக்காது இரட்டைக்கொள்கையுடன் இயங்கும் அமைப்புக்கள், தனி நபர்களை மக்கள் உடனே இனங்கான வேண்டும் என பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

நன்றி
பிரித்தானியத் தமிழர் பேரவை

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.