ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் முன்னால் நான்கு வழிகள் இருக்கின்றன ‐ மனோ கணேசன்

எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியாகலாம். இந்நிலையில் நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் முன்னால் நான்கு வழிகள் இருகின்றன. ஒன்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்களிப்பது, இரண்டு, எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிப்பது, மூன்று, தமிழ் மக்களின் சார்பாக பொது வேட்பாளரை நியமித்து வாக்களிப்பது, நான்கு, தேர்தலில் வாக்களிக்காமல் பகீஸ்கரிப்பது அல்லது வாக்குச்சீட்டை பழுதாக்குவது.

ManoGaneshan5இந்த நான்கு வழிகளில் எந்த வழியில் செல்வது என்பதை தமிழ் மக்கள் சிந்தித்து தீர்மானிக்க வேண்டிய வரலாற்று வேளை வெகுவிரைவாக வந்துகொண்டிக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ  மேலும் கூறியுள்ளதாவது,  பாரிய போர் ஓய்ந்துவிட்டது. ஆனால் போருடன் சேர்த்து தேசிய இனப்பிரச்சினையையும் புதைத்துவிட்டதாக அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கின்றது. போர் தோன்றுவதற்கான அரசியல் காரணங்களுக்கு அரசியல் தீர்வை காணும் வரலாற்று சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் தவறவிட்டு விட்டது.
 
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சிந்தித்து திட்டவட்டமான முடிவெடுக்கவேண்டிய நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். இந்த வரலாற்று வேளையை தவறவிட்டு மீண்டுமொரு இருண்ட காலத்திற்குள் தமிழர்களாகிய நாங்கள் மாத்திரம் பயணிக்க முடியாது.
 
எம்மால் இந்நாட்டிலே ஜனாதிபதியாகி அலரிமாளிகைக்கு செல்ல முடியாது. எமக்கு பாராளுமன்றம் வரை மாத்திரமே செல்ல முடியும். இந்நிலையில் இன்று பாராளுமன்றம் பலவீனப்படுத்தப்பட்டு அலரிமாளிகை அரண்மனையாக மாற்றப்பட்டுள்ளது.
 
இந்நாட்டிலே உத்தியோகப்பூர்வமற்ற மன்னராட்சி முறைமையை நடைமுறையாக்குவதற்கு இடந்தரபோகின்றோமா, என நாம் முடிவெடுக்க வேண்டும்.
 
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலே தமிழ் மக்களின் தரப்பு நியாயங்களையும், நிலைப்பாடுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற தேசிய விவாதத்தை நமது கட்சியே இந்நாட்டில் ஆரம்பித்து வைத்தது.
 
எமது கருத்து வெளியிடப்பட்டதன் பிறகே பெரும்பான்மை கட்சிகளும், ஊடகங்களும் தமிழ் மக்கள் பற்றி அக்கறை கொள்ள தொடங்கியுள்ளன. இது இன்றைய வரலாறு.
 
தற்போது இதன் தொடர்ச்சியாக அடுத்தக்கட்டம் வந்துள்ளது. இதுதான் உத்தேச ஜனாதிபதி தேர்தலாகும். தமிழ் மக்களிடம் உங்களது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் தேர்தலில் வாக்களியுங்கள் அல்லது வாக்களியாமல் விடுங்கள் என்று சொல்லி எனது பொறுப்பை நான் ஒருபோதும் தட்டடிக்கழிக்கபோவதில்லை.
 
 மக்களுக்கு தலைமைத்தாங்கும் தகைமை எங்களுக்கு இருக்கின்றது. மக்களே இந்த தகைமையை வழங்கியுள்ளார்கள். எனவே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுமானால் அதுதொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் முடிவை நாங்கள் அறிவிப்போம்.
 
மக்களுக்கு தலைமைத்தாங்கி உரிய வழியை துணிச்சலுடன் காட்டும் வரலாற்று பொறுப்பை நாம் நிறைவேற்றியே தீருவோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.