இலங்கை இனவாதிகளால் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களின் மீது சனிக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், மீனவர்களின் விசைப்படகுகளை சேதப்படுத்தியதுடன் வலைகள் உள்ளிட்ட தளவாடப் பொருள்களை பறித்து கடலுக்குள் வீசி எறிந்தனர்.

ramesvaramகோட்டைப்பட்டினத்திலிருந்து 239 விசைப்படகுகளில் மீனவர்கள் சனிக்கிழமை காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அன்றிரவு கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஜ. ராஜ முஹம்மது, கே.எஸ். ஜகுபர், மா. ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமான விசைப் படகுகளில் ஏ. கருப்பையா (55), எஸ். சேகர் (46), எஸ். மனோகர் (55), கே. முருகேசன்(48), எஸ். நாராயணன் (56), குணசேகரன் (45), ந. குமார் (50), ம. தங்கதுரை (50), இ. நூர்தீன் (50) ஆகியோர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் ராஜாமுஹம்மதுவுக்கு சொந்தமான விசைப்படகு சேதம் அடைந்தது. தொடர்ந்து முன்னேறிய இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப் படகுகளைச் சுற்றி வளைத்தனர். பின்னர், தங்களது படகுகளிலிருந்து மீனவர்களின் படகுக்கு வந்த அவர்கள், மீனவர்களின் வலைகளை வெட்டி கடலில் வீசியெறிந்தனர். மேலும், துப்பாக்கி முனையில் மீனவர்களை மிரட்டி அனுப்பியுள்ளனர்.

ஏற்கெனவே, கடந்த திங்கள்கிழமை ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 18 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.