சட்ட விரோத குடியேறிகள் தொடர்பில் இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே புதிய ஒப்பந்தம்

சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதனை தடுப்பதற்கு இலங்கையும், அவுஸ்திரேலியாவும் விசேட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
 
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித்திற்கும், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

aust-sri1சட்டவிரோத ஆட்கடத்தல்கள் காரணமாக இரு நாடுகளும் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 
சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோருவரை தடுத்து நிறுத்த இரு நாடுகளும் எதிர்காலத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுத்து நிறுத்த நீண்டகாலத் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும், இது குறித்து விரிவாக ஆராய தம்முடன் இலங்கை விஜயம் செய்துள்ள இரண்டு உயரதிகாரிகள் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் மற்றும் இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இரு நாட்டு வெளிவிவாகர அமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஏற்கனவே அவுஸ்திரேலிய மற்றும் ஐக்கிய நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவன் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் அவுஸ்திரேலியாவில் தடை செய்யப்படவில்லை என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.