கே.பி. சித்திரவதை தொடர்பான எங்கள் செய்தி பொய்யானால் அவரை பார்வையிட எங்களை அனுபதிப்பீர்களா? – இலங்கை அரசாங்கத்துக்கு “லங்கா கார்டியன்” சவால்

கேபி சித்திரவதைக்குள்ளாக்கப்படவில்லை எனவும் அவர் பனாகொட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்ததை லங்கா கார்டியன் மறுத்திருக்கிறது. தமது செய்தி துல்லியமானது என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

SLG-Newகே.பி பனாகொடை முகாமில் வைத்து சித்திரவதை செய்யப்படுவதாக அண்மையில் எமது இணையத்தளத்தில் வந்த தலைப்புச் செய்தியொன்றை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மறுத்துள்ளதாக  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
கே.பி பனாகொட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவுமில்லை அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவுமில்லை என்ற தலைப்பில் வெளியான அச்செய்தியில் முன்னாள் விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரும் புலிகளின் ஆயதத் தரகருமான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக புலிகளின் ஆதரவு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை இராணுவம் மறுக்கிறது என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
 
இலங்கையின் ஊடகங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இக்காலகட்டத்தில் சிறிலங்கா கார்டியனின் பாதுகாப்பு செய்தியாளர் கேபியின் நிலைமை குறித்த இந்தத் தகவலை வெளிப்படுத்தி உள்ளார். பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் ஊடாகவே பலத்த சிரமத்தின் மத்தியில் அவர் இத்தகவலைப் பெற்றுள்ளார்.
 
எனினும் இராணுவப் பேச்சாளர் தனது வழமையான பாணியில் இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதச் சட்டங்களை அரணாகப் பாவித்து இதனை மறுத்துள்ளார்.
 
இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார அச்செய்தியை வெளியிட்ட எமது ஊடகத்தை புலிகளுக்குச் சார்பான ஊடகம் என்று முத்திரை குத்தி விடுகிறார்.  அரசாங்கத்தை அம்பலப்படுத்தும் இவ்வாறான  செய்திகள் வெளிவரும் போது அவ்ஊடகங்களை புலிசார்பு ஊடகம் என முத்திரை குத்தி விடுவதனூடாக அவற்றைத் தண்டிக்க முனைகிறார்.
 
சிறிலங்கா கார்டியன் ஒரு சுதந்திரமான ஊடகம் என்றும் இலங்கையில் அரச இயந்திரம் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் அச்சமின்றி உண்மையைப் பேசி வருகிறது என்பதையும் இராணுவப் பேச்சாளருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
 
வன்முறைக்கலாசாரத்தை மாற்றுவதற்காகவும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டிலுள்ள எல்லா மக்களும் சமாதானமாகவும் கௌரவமாகவும் வாழவழிவகுக்கும் சூழலை உருவாக்கவுமே நாம் முனைகிறோம்.
 
அதேபோல் எமது பாதுகாப்புச் செய்தியாளர் புலிகளுடைய ஆளோ அல்லது அரசாங்கத்தினுடைய ஏஜென்டோ அல்ல என்பதைம் இவ்விடத்தில் உறுதிப்படுத்தவும் சுட்டிக்காட்டவும் விரும்புகிறோம்.
 
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் ஒரு விடயத்தையும் கேட்க விரும்புகிறோம். விடுதலைப் புலி உறுப்பினர்கள் உட்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதோடு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிடவும் அவர்கள் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்னரான மற்றும் பின்னரான நிலைமைகளை அறிந்து அறிக்கையிடவும் வழியேற்படுத்தித் தர முடியுமா?
 
எங்களுடைய கோரிக்கைக்கு எதிராக புலியெதிர்ப்புக் கவசத்தையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் பிரிகேடியர் பயன்படுத்த மாட்டார் என நம்புகிறோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.