இலங்கையின் விசாரணைக் குழுவை சர்வதேச சமூகம் நம்ப வேண்டாம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை பற்றி ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

hrw-700315இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் அரசின் தீவிர விசுவாசிகள். அவர்கள் சுயாதீன அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் திராணியற்றவர்கள் என்று சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் கடுமையாகச்சாடியுள்ளது.

குறிப்பிட்ட குழுவினர் விமர்சனத்துடன் கூடிய அறிக்கையொன்றை முன்வைப்பார்கள் எனக் கனவு கூடக் காணமுடியாது. தேசிய விசாரணையொன்றை மேற்கொள்வதாகத் தன்னிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொய் சொல்லியுள்ளார் என்பதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தற்போதாவது உணரவேண்டும் என்றும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கருத்து வெளியிட்டுள்ளது.

“சிறிலங்கா கார்டியன்” இணையத்தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இதனைக் கூறியுள்ள சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குநர் பிரட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

சர்வதேச சமூகம், பல சூழ்நிலைகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளத்தயாராகயிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. காஸாவில் இடம்பெற்ற மோதலின் போது, இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக கோல்ட்ஸ்டோன் என்பவரின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளும் கினியாவில ஆயுதப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விசாரணைகளும் இதனைப் புலப்படுத்தும் இரு உதாரணங்களாகும்.

ஆசியாவில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ படுகொலை தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. முதல் விசாரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணைப்படியும், ஏனையவை பான் கீ  மூனின் விருப்புடனும் இடம்பெறுகின்றன. விமர்ச்சிக்கக் கனவு கூட காணதவர்கள் இலங்கையைப் பொறுத்தவரை அரசு கவலையளிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளது. யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யத் தயாரில்லை என்பதை அரசு வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் யுத்தக்குற்ற அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காகக் குழுவொன்றை இலங்கை அரசு நியமித்துள்ளது. இக்குழுவில் உள்ளவர்கள் அரசின் விசுவாசிகள். சுயாதீனமான அல்லது அரசை விமர்சிக்கும் அறிக்கையொன்றை வெளியிடுவது குறித்துக் கனவு கூடக் காணாதவர்கள்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை. கடந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளே இதனைப் புலப்படுத்தியுள்ளன.

அது போலியான நடவடிக்கை. தற்போதைய இக்கட்டிலிருந்து தப்பிக்க முயலும் செயற்பாடு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசு தேசிய விசாரணைகளை மேற்கொள்ளும் என உறுதியளித்த வேளை தனக்குப் பொய் சொன்னார் என்பதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ  மூன் தற்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

தவறு செய்தவர்களைத் தண்டிப்பதன் மூலமே, இலங்கையில் நீண்டகாலமாகக் காணப்படும் நீதியின் பிடியிலிருந்து விதிவிலக்களிக்கப்படும் நடைமுறைக்கு முடிவு காணமுடியும். இலங்கை அரசு தனது மக்களைப் பாதுகாக்கக்கூடாது என எவரும் சொல்லவில்லை. அவர்களுக்கு அதற்கான கடப்பாடு உள்ளது. எமது அறிக்கைகள் அனைத்திலும் இடம்பெயர்ந்த மக்களை விசாரணை செய்யவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் தடுத்து வைக்கவும் அரசுக்குள்ள உரிமையை வலியுறுத்தியுள்ளோம்.

அனைவரையும் தடுத்து வைக்கும் உரிமையை சர்வதேசச் சட்டம் இலங்கை அரசுக்கு வழங்கவில்லை. அரசு இவ்வாறான நடவடிக்கைகளின் போது உள்ளூர் சட்டங்களையும் சர்வதேச சட்டங்களையும் பின்பற்ற வேண்டுமென்பதே எமது வேண்டுகோள். இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில்  சில குற்றவாளிகள் உள்ளனர் என அரசு கருதுவதால் அந்த மக்கள் அனைவரையும் தடுத்து வைக்கும் உரிமையை சர்வதேச சட்டம் அரசுக்கு வழங்கவில்லை.

இது சட்டவிரோதமானது; தார்மீக நெறிகளுக்கு அப்பாற்பட்டது. எதிர்மறையான விளைவுகளை உண்டுபண்ணக் கூடியது. தமிழ் மக்கள் மத்தியில் சீற்றத்தையும், கசப்புணர்வையும் ஏற்படுத்தக்கூடிய வேறு கொள்கை இதைத் தவிர இருக்க முடியாது. சமூகங்களின் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இந்த விடயம் கையாளப்பட்டுள்ளது. விசாரணை செய்வது என்பது நிச்சயமாக அனுமதிக்கப்பட்ட விடயம் என்றாலும் இதன்போது அடிப்படைத் தராதரங்களைப் பின்பற்றவேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நீதித்துறையை நாடுவதற்கும் சட்ட ஆலோசனை பெறுவதற்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்  என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.