வணங்கா மண்’ கப்பல் நிவாரணப் பொருட்கள் இன்று மெனிக் முகாம்களில் விநியோகிக்கபட்டது

‘வணங்கா மண்’ கப்பல் மூலமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் சிக்கல்களுக்கு மத்தியில் கடந்த மாதம் வவுனியாவுக்கு வந்து சேர்ந்த நிவாரணப் பொருட்களின் விநியோகத்தை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் செவ்வாயன்று ஆரம்பித்துள்ளது.

Vanangaamanஇந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள், வேறு கப்பல் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட்டன. சுமார் இரண்டு மாதத் தாமதத்தின் பின்னர் கடந்த மாதம் 24 ஆம் திகதி இந்தப் பொருட்கள் 27 கொள்கலன்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைக் களஞ்சியத்திற்கு வந்து சேர்ந்தன என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பரப்புரை இணைப்பாளர் றுக்சான் ஒஸ்வெல்ட் தெரிவித்தார்.

அரிசி, மா, பருப்பு, சீனி, குழந்தைகளுக்கான பாலுணவு வகைகள், தகரத்தில் அடைக்கப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்கள் இந்த நிவாரணப் பொருட்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். விநியோகத்திற்கு வசதியாக வவுனியா களஞ்சியத்தில் இந்தப் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு முதல் தொகுதியாக மனிக்பாம் 4 ஆம் வலயத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால் குமார் தெரிவித்துள்ளார்.

முகாம்கள் மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும், அரசாங்கம் அனுமதிக்கும் இடங்களில் இந்தப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் நிமால் குமார் கூறினார்.இன்னும் இரண்டொரு வாரங்களில் இந்த நிவாரணப் பொருட்கள் இடம் பெயர்ந்த மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு விடும் என்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால் குமார் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.