தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுதக் கப்பல்களை தகர்த்து எறிவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கியிருந்தது

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் யுத்தத்தின் போது பல சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகள் தொடர்பில் சிலர் கடும் விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்ற போதிலும், உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

srilanka-governmentசர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுதக் கப்பல்களை தகர்த்து எறிவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக ஜனாதிபதி முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
 
2007ம் ஆண்டில் இலங்கைக் கடற்படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் எட்டு ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும், இதில் நான்கு கப்பல்களை அழிப்பதற்கு வெளிநாட்டு சக்திகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாகவும் ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
 
யுத்த நடவடிக்கைகளின் போது அநேக நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பலத்த ஆதரவு காணப்பட்டதாகவும், தமது ஆட்சிக் காலத்தில் இந்த ஆதரவினை இல்லாதொழித்து யுத்தத்தை வெற்றி கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.