விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தே நான் எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் – சரத் பொன்சேகா

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது தாம் நம்பிக்கை இழந்திருப்பதாக கூட்டுப்படைகளில் தலைமையதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.  இதனால் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக தொடர்ந்தும் பணியாற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு  ஜெனரல் சரத் பொன்சேக்கா பதவியிலிருந்து ஓய்வுபெறும் கடிதத்தை இன்று பிற்பகல் 1.30 அளவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பியிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

sarath12இலங்கை சென்றடைந்துள்ள மியன்மார் இராணுவ ஆட்சியாளரை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்று திரும்பிய பின்னரே சரத் பொன்சேக்க தமது ஓய்வுபெறும் கடிதத்தில் கையெழுத்திட்டு, அனுப்பியுள்ளார்.
 
இந்த கடிதத்தில் தாம் ஓய்வுப் பெறுவதற்கான அழுத்தங்களை ஏற்படுத்திய காரணங்களை விளக்கியுள்ள சரத் பொன்சேக்கா அரசியலில் ஈடுபடுவது குறித்து  எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ நிர்வாக செயற்பாடுகளில் அரசாங்க நிர்வாகத்திற்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் இடையில் சிறந்த நம்பதன்மை இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள சரத் பொன்சேக்கா, இராணுவத்தின் உயர் அதிகாரியான தனக்கும், ஜனாதிபதிக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமைகள் காரணமாக இராணுவத்திற்குள் ஒழுக்கம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
 
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பதவிக் காலம் முடிவடையும் முன்னர், 2009 டிசம்பர் 1ம் திகதி  அமுலுக்கு வரும் வகையில் தான் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கான அனுமதியை வழங்குமாறு சரத் பொன்சேக்கா தனது ஓய்வுக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். தான் ஓய்வுபெற்றாலும் விடுதலைப் புலிகள் அமைப்பினால் தனக்கு வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல் இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேக்கா, தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஜனாதிபதியினது மாத்திரமல்லாது அரசாங்கத்தினதும் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சரத் பொன்சேக்கா இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற எண்ணினால் இதற்குத் தடை ஏற்படுத்தப் போவதில்லையென நேற்று சரத் பொன்சேக்காவிடம் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, அவரது பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை அரசாங்கம் ஏற்பதாகவும் கூறியுள்ளார். இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கான கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள பொன்சேக்கா, 1970ம் ஆண்டு 5ம் திகதி இராணுவத்தில் இணைந்துகொண்டார். 1971ம் ஆண்டு ஜூன் 1ம் திகதி அதிகாரி நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2005 டிசம்பர் 6ம் திகதி இலங்கை இராணுவத்தின் 18வது தளபதியாக நியமிக்கப்பட்டார். இராணுவத் தளபதியாக பதவியேற்று மூன்று வருடமும் ஏழு மாதமும் பதவி வகித்த சரத் பொன்சேக்கா  விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்டிக்கும் முனைப்புகளை மேற்கொண்டதுடன் அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து இராணுவத் தளபதியாக இருந்த போதே அவர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.