தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் அரசபயங்கரவாதம் தாண்டவமாடுகின்றது ‐ திருமாவளவன்

தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் அரசபயங்கரவாதம் தாண்டவமாடுகின்றது. இதனை மீண்டும் ஒருமுறை அரசபயங்கரவாதிகள் நிரூபித்துள்ளனர். 13.11.2008 புதிய மகசீன் சிறைச்சாலையில் சிறைக்காவலர்களும் சிங்களக்கைதிகளுமாக சேர்ந்து தமிழ்அரசியற் கைதிகளை தாக்கிய சம்பவம் 1983 வெலிக்கடைப் படுகொலையை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது. இந்நிலைமை தமிழ் கைதிகளின் உறவுகளை பெரிதும் பயத்திற்குள்ளாக்கியுள்ளது.

thiruma_130609news0011983ம் ஆண்டு யூலை மாதம் 25,27ம் திகதிகளில் 53 தமிழ்க் கைதிகள் சிங்களக் காடையர்களினால் கொடூரமாக கொல்லப்பட்டதும், 1977ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ந் திகதி 3 கைதிகள் களுத்துறைச் சிறையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதும், 2000ம் ஆண்டு இதே களுத்துறைச் சிறையில் ஜனவரி 6,7ந்திகதிகளில் சிறைக் காவலர்களின் ஒத்தாசையுடன் சிங்களக் கைதிகள் தமிழ்க் கைதிகளை வெட்டி துவம்சம் செய்தனர். வேடிக்கையான விடயம் என்னவென்றால் 2000 ஆண்டு களுத்துறையில் நடந்த சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தற்போது மகசீனில் நடந்த சம்பவத்திலும் பங்குபற்றியிருப்பதே.
 
புதிய மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியற் கைதிகளுக்கென G H I இது என்ற மூன்று பிரிவுகள்(வாட்டுக்கள்) உள்ளன. G H இல் 45‐50 தமிழ் அரசியற் கைதிகளும் J இல் 92 தமிழ் அரசியற் கைதிகளும் E பிரிவில் இருவரும்  A C D இல் முறையே ஒவ்வொருவரும் உள்ளனர். G H பிரிவுகளிலுள்ளவர்கள் 4‐16 வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள். இவர்களுக்கு தாங்கள் இருக்குமிடத்தின் நான்கு பக்க சுவரைத் தவிர வேறொன்றும் தெரியாது. J வாட் அவ்வாறில்லை. இவர்களினிடத்தைச் சுற்றி சிங்களக் கைதிகளின் வாட்டுக்களுமிருக்கின்றன.
 
எப்போதும் J இலுள்ள தமிழ் அரசியற் கைதிகளுடன் சிங்கள கைதிகள் மெல்லிய முறுகல் நிலையுடனே இருந்துவந்தனர். இதனை எப்போதும் சிறை அதிகாரிகள் பயன்படுத்தி தமிழ்க்கைதிகளை பயமுறுத்தி வந்திருக்கின்றனர். இதன் ஒரு வெளிப்பாடாகவே இந்த சம்பவமும் இடம் பெற்றுள்ளது.

சிறைச்சாலை நிர்வாகத்துடன் தொடர்புகொள்வதற்கென ஓவ்வொரு வாட்டிலிருந்தும் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பர். அவரே தங்களுடைய வாட் தொடர்பான சகல விடயங்களையும் சிறைச்சாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வாட்டிலுள்ள மற்றவர்களுக்கு சொல்லுவார். இவரை காம்பிரப் பாட்டி என்று அழைப்பார்கள்.

காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு உணவு எடுப்பதற்கு பத்துநிமிட இடவெளிவிட்டு மீண்டும் வாட் பூட்டப்படும். பின்னர் காலை 8.30 மணிக்கு திறந்து விடுவார்கள். அதன்பின்னர் மதிய சாப்பாட்டின் பின்னர் பூட்டி, பி.ப 3.00 மணிக்கு திறந்து, மீண்டும் பி.ப 5.30 க்கு பூட்டிவிடுவார்கள். ஓவ்வொரு தடவையும் பூட்டித்திறக்கும்போது கணக்கெடுத்துக் கொள்வார்கள். இரவு 8.30 – 9.00 மணிக்குள் திரும்பவும் ஒருதடவை கணக்கொடுப்பார்கள். தேவையேற்படின் நள்ளிரவு ஒரு மணிக்கும் வந்து கணக்கெடுப்பார்கள். இது சிறை நிருவாகத்தின் நாளாந்த பொதுவான செயற்பாடாகும்.
 

சம்பவதினமும், வழமையான நிகழ்வான காலை 8.30 மணிக்கு  J வாட்டைத் திறப்பதற்கு சிறைகாவலர் ஒருவர் வந்திருக்கின்றார். அவர் வந்தவுடன் காம்பிராப்பாட்டி எங்கே என்று கேட்டுள்ளார். அவர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார் என்றவுடன், எத்தனைபேர் உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். ஒருத்தருக்கும் சரியான கணக்கைச் சொல்லத்தெரியவி;லலை. உண்மையில் அந்தக் கணக்கை எடுப்பதுதான் வந்த சிறைக்காவலரின் தொழில். ஆனால் வேண்டுமென்றே அவர் அவ்வாறு கேட்டுவிட்டு சரியான பதிலை யாரும் சொல்லாததால் மிகவும் மோசமான தூசணவார்த்தைகளால் பேசியுள்ளார். அப்போது அங்குள்ளவர்கள் நீங்கள் இப்படிப் பேசுவது நல்லமில்லை நாங்களும் மனிதர்கள்தான் என்று வாக்குவாதப்பட்டுள்ளனர். இந்தவேளையில் வாட்டிலுள்ள டென்சன் என்பவர் வாக்குவாதப்பட்ட இருபகுதியினரையும் சமாதானப்படுத்தியுள்ளார். அதன்பின் கணக்கெடுத்து வாட்டை திறந்துவிட்ட சிறைக்காவலர் உங்களுக்கு செய்துகாட்டுறன் வேலை என்று கூறிச் சென்றுள்ளார்.
 
சிறிது நேரத்தில் C வாட்டிலுள்ள 100க்கும் மேற்பட் சிங்களக்கைதிகள் கொட்டி என்று கத்திக்கொண்டு ஓடிவந்து கல்லெறியத்தொடங்கியுள்ளார்கள். அதேநேரத்தில் தங்களுடைய கையிலகப்பட்டவர்களைத் தாக்கியும் சறத்தை உரிந்தும் கொட்டி தெரியுது பாருங்கோடா என்று கூறியுள்ளார்கள். இதில் கோபி, சின்னமகன், தவா, செல்வா உட்பட பலர் காயங்களுக்குள்ளானார்கள். உடனடியாக  J வாட்டிலுள்ள அனைவரும் உள்ளுக்குள் வந்து கதவைச் சாத்தி உள்பக்கத்தினால் கம்பியும் போட்டுள்ளார்கள். இருந்தும் சிங்களக் கைதிகள் கதவைத் தள்ளி உதைத்துக் கேவலமான வார்த்தைகளால் பேசியுள்ளார்கள். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் இந்நிலைமை தொடர்ந்திருக்கின்றது. சிறைக்காவலர்கள் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றார்கள்.
 
அதன் பின்னர் பிரதான சிறை அதிகாரியும், சிறைக்காவலர்களும் வந்து கதவைத் திறக்கும்படி கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் திறக்கவில்லை. பயமில்லாமல் திறவுங்கள் நாங்கள் நிற்கின்றோம் என்று பிரதான் சிறை அதிகாரி கூறியுள்ளார். அதன் பின் கதவைத் திறந்துள்ளார்கள். நிஷாந்தன், சர்வானந்தன், டென்ஷன், நிக்ஷன் என பெயர்களை குறிப்பிட்டு கூப்பிட்டுள்ளார். அவர்கள் வெளியே வந்தவுடன் சிறைக்காவலர்களும் சிங்களக்கைதிகளுமாகச் சேர்ந்து தாக்கியுள்ளார்கள். அவர்கள் பலமாக சத்தம் போட்டுக் கத்தியதைத் தொடர்ந்து குறிப்பிட்டவர்களை RC அறைக்குள் கொண்டுபோய் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுற்றி நின்று அவர்களை தாக்கியுள்ளார்கள். அதன் பின் SP இருக்கும் இடத்துக்கு கொண்டு போய் அவருடை அறைக்கு பக்கத்திலுள்ள அறையில் வைத்து தாக்கிவிட்டு தனியறையில் பூட்டி வைத்துள்ளார்கள்.
 
இதற்கிடையில் வாட்டிலுள்ள மற்றவர்கள் வெளியிடங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்கள். நடந்த சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக SP க்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணமிருந்திருக்கின்றது. இதனால் கோபமடைந்த அதிகாரிகள் தகவல் போன மூலத்தை கண்டுபிடிப்பதற்காக 11.00 மணியளவில் வாட்டை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியுள்ளார்கள்.

தமிழ் அரசியற் கைதிகளைப் பார்ப்பதற்கு  ICRC யைத் தவிர வேறு எவருக்கும் சிறைச்சாலை நிருவாகத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை. தினமும் தங்களுடைய பிள்ளைகளை, சகோதரங்களைப் பார்ப்பதற்கு வருபவர்கள் காலையிலே வந்துபார்த்து விடுவார்கள். ஆனால் அவ்வாறு வந்தவர்களை பிற்பகல் 5.30 மணிக்கு பின்பே பார்வையிடுவதற்கு சிறைச்சாலை நிருவாகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிள்ளைகளுகென கொண்டுவந்திருந்த உணவுகள் சாப்பிட முடியாத நிலையிலிருந்ததையிட்டு உறவினர்கள் பெரிதும் கவலையடைந்திருந்தார்கள்.
 
இதன் பின்னர் சிறைச்சாலை அணையாளர் அலுவலகத்திலிருந்து வந்தவர்கள் தாக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர். அன்றிரவு 11.00 மணிவரையும் நடைபெற்றது. தங்களுடைய நிருவாகத்துக்கு பிரச்சினை ஏற்படாதவாறு வாக்குமூலம் கொடுங்க வேண்டும் என்று சிறைச்சாலை அதிகாரிகளினால் பயமுறுத்தப்பட்டனர்.

இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு எங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரையும் நாங்கள் உணவை பகிஷ்கரிக்கப் போகின்றோம் என்ற நிலைப்பாட்டில் து வாட்டிலுள்ளவர்கள் 92 கைதிகளும் ஒருமித்த முடிவுடன் இருக்கின்றனர். சிறைச்சாலை ஆணையகத்திடம் இருந்து வந்தவர்களிடமும், ICRC யிடமும் இந்த கோரிக்கையை தெரிவித்திருந்தனர்.

14.11.2008 காலை து வாட்டுக்குச் சென்ற அதிகாரிகள் உங்களை வேறு இடத்துக்கு மாற்றப்போகின்றோம் என்று கூறிச் சென்றுள்ளார்கள். இப்போது இக்கைதிகள் தங்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இது இவ்வாறிருக்க இங்குள்ள 92 கைதிகளையும் வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான முயற்சியில் சிறை நிருவாகம் ஈடுபட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.