குடாநாட்டில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு ஐ.நா. உதவ வேண்டும்

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகளில் கணிசமானோர் குடாநாட்டில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்க ளின் மறுவாழ்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவவேண்டும். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோம்ஸுடம் மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அவர் யாழ். அரச அதிபர் கே.கணேஷைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் நல்லெண்ணத்துக்கும் சமாதானத்துக்குமான குழு உறுப்பினர்களை யாழ். ஆயர் இல்லத்தில் சந்தித்து குடா நாட்டு நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்.

John Holmesஅவரிடம் குழுவினர் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு:

  1. ஏ9 பாதையூடாக பொதுமக்கள் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப் பட்ட போதும், மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குகிறார்கள், மக்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாகப் போக்குவரத்துச் செய்ய அனுமதிக்கப் படவேண்டும்.
  2. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து தற்சமயம் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளை வழங்க ஐ.நா. முன்வர வேண்டும்.
  3. குடாநாட்டில் வலி.வடக்கு உட்பட பல இடங்களில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த ஐ.நா. உதவ வேண்டும்.

இங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாக ஹோம்ஸ் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.