பேராதனை பல்கலைக்கழக மாணவியின் கைதுக்கு ஜே.வி.பி. கடும் கண்டனம் “கிளிநொச்சியில் பிறந்தது குற்றமா?”

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவியின் கைது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜே.வி.பி, பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றதற்காக அந்த மாணவி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளாரென்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தங்கப்பதக்கம் பெற்றதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியது.

jvp-logoபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மீள்குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. எம்.பி.யான சுனில் ஹந்துன்நெத்தியே இவ்வாறு வலியுறுத்தினார்.

கிளிநொச்சி, கல்மடுப் பகுதியைச் சேர்ந்தவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட கலைப்பீட மாணவியுமான இராசையா துவாரகா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த மாணவி சிறந்த விளையாட்டு வீராங்கனை. ஓட்டப் போட்டியில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த விளையாட்டுப் போட்டியில் அவர் பங்குபெறவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பயங்கரவாத தடுப்புப் பிரிவில் வைத்து இம்மாணவி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் கிளிநொச்சியில் வாழ்ந்த காலத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் வெற்றிபெற்றார். இதன்போது பிரபாகரனின் கையொப்பமுடனான சான்றிதழ் ஒன்று இவருக்கு வழங்கப்பட்டது தொடர்பாகவே விசாரணையில் கேட்கப்படுவதாக அறிகின்றோம். இது ஒரு அநீதியான விடயம்.

அகில இலங்கை ரீதியில் வெற்றி பெற்றதற்காக பிரபாகரனின் கையெழுத்துடனான சான்றிதழைப் பெற்ற இந்த மாணவி அப்போது பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்ஷவின் கைகளினால் நேரடியாகவே தங்கப்பதக்கம் பெற்றவர். பிரபாகரனின் கையெழுத்துடனான சான்றிதழைப் பெற்றதற்காக அம்மாணவியிடம் விசாரணை நடத்தப்படுமானால் பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்ஷவிடம் தங்கப்பதக்கம் பெற்றது தொடர்பிலும் விசாரிக்க வேண்டும்.

இம்மாணவி கிளிநொச்சியில் பிறந்தது குற்றமா? அல்லது பிரபாகரனின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தது குற்றமா? அப்படியானால் பிரபாகரனுக்கு அடுத்த தலைவராகவிருந்த கருணா இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராகவும் அமைச்சராகவும் உள்ளாரே? இந்தக் கருணா எத்தனை இளம் பெண்களை பலாத்காரமாக இயக்கத்துக்கு இணைத்துள்ளார். இன்னொருவர் முதலமைச்சராகவுள்ளார். இவர்கள் எல்லாம் எப்படி குற்றமற்றவர்களானார்கள்?

கருணா இன்று அனுருத்த ரத்வத்தைக்கு கைலாகு கொடுத்து சிரித்து உரையாடுகின்றார். ஆனால், கிளிநொச்சியில் பிறந்ததற்காகவும் பிரபாகரனின் ஆட்சியின் கீழ் இருந்ததற்காவும் ஒரு சிறந்த மாணவி, சிறந்த வீராங்கனை இன்று பயங்கரவாத தடுப்புப் பிரிவில் வைத்து விசாரிக்கப்படுகின்றார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூட இந்த மாணவி தொடர்பில் நற்சான்றிதழ் வழங்குகின்றனர். இந்த மாணவியின் திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டாமல் கைதுசெய்து தடுத்துவைக்கின்றனர்.

ஏன் இவ்வாறான தவறைச் செய்கின்றீர்கள்? புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு மீண்டும் தவறான முன்னுதாரணத்தைக் கொடுத்துவிடக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளை இனியாவது கைவிட வேண்டியது அவசியம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.