தமிழ் பெண்களுடன் தகாத முறையில் நடப்பவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

கிழக்கில் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடைந்திருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், அங்கு குடும்பத் தலைவர்களும் அங்கத்தவர்களும் வெள்ளை வேனிலும், மோட்டார் சைக்கிளிலும் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ளும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன.

tnaஇந்த அசிங்கமான நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. துரைரெட்ணசிங்கம் நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்,

சீருடையில் வருபவர்களால் கைதுசெய்யப்பட்டால் அவ்வாறு கைதுசெய்யப்படுவோர் வீடு திரும்புவர் என்று நம்பிக்கை கொள்ள முடியும். ஆனால், கிழக்கில் அந்த நிலை இல்லை. வருபவர்கள் உண்மையான புலனாய்வுத்துறையினரா அல்லது பணம் பறிப்பவர்களா என்பதை இனங்காண முடியாதுள்ளவர்களாக கிழக்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கான 750 மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே துரைரெட்ணசிங்கம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வவுனியா முகாம்களில் இருந்த மூன்று இலட்சம் மக்களில் அரைவாசிப் பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். பலர் சொந்த இல்லங்களிலும் இன்னும் பல உறவினர்களின் வீடுகளுக்கும், மேலும் சிலர் பொது இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்,

இதன்மூலம் மழையின் பாதிப்புக்களில் இருந்து அந்த மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஓரளவு ஆறுதல் கொள்ள முடிகின்றது. எனினும் முகாம்களில் வாழ்கின்ற மக்கள் சிறை வாழ்க்கை வாழக்கூடாது என்றும் கௌரவமான வாழ்க்கையொன்றே தமக்குத் தேவையானது என்றுமே விரும்புகின்றனர். நிவாரணக் கிராமங்கள் மற்றும் மீள்குடியேற்றப் பிரதேசங்களுக்கு எமது கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் சென்று ஆராய்ந்து வந்துள்ளனர்.

இதனூடாக அங்குள்ள சாதக பாதக நிலைமைகளை எமக்கு அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது, இருந்தும் இங்கிருக்கின்ற வேதனையான விடயம் என்னவென்றால் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னரும் புலனாய்வுத்துறையினர் என்ற பெயரால் குடும்பத் தலைவர்கள் கைதுசெய்யப்படுவதுதான்.யாரால் கைது செய்யப்படுகின்றனர்? எங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்று தெரியாது. இது குறித்த தகவல்களும் அறிவிக்கப்படுவதில்லை. கைதுகள் இடம்பெறும் போது அது குறித்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள மீள்குடியேற்றப் பணிகளில் திருப்தி கொள்ள முடியாதிருக்கின்றது.

கிழக்கு மாகாண மீள்குடிற்றக் குறைபாடுகள் தொடர்பில் நாம் பலமுறை இந்த சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம். எமது குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் உட்பட சகோதர உறுப்பினர்களும் இவ்விடயம் தொடர்பில் சபையில் தெரிவித்துள்ளனர்.அந்த சந்தர்ப்பங்களில் உரிய அமைச்சர்கள் சபையில் இருப்பதில்லை. ஆனால், கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்தில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் தமக்குத் தெரியாது என்றும், அது குறித்து தமக்கு அறிவிக்கவில்லை என்றும் தகவல்துறை அமைச்சர் கூறுகின்றார்,

அமைச்சர்களின் நிலைப்பாடுகளை நோக்கும்போது, எமது மக்களுக்கான தேவைகள் தொடர்பில் அக்கறையீனம் காட்டப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலைமையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். கிழக்கில் ஒரு சீரான மீள்குடியேற்றம் இல்லை. அங்கு குடியேற்றப்பட்டவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ் அரிசி, சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய நான்கு வகையான பொருட்கள் மாத்திரமே விநியோகிக்கப்படுகின்றன. ஏனைய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி வாய்ப்புகள் அவர்களிடம் இல்லை. தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான சூழல் இல்லை. அவல வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களில் பலர் கைதுசெய்யப்படுகின்றனர். கைது செய்யப்படுவோரை விடுவித்துக் கொள்வதில் பணம் பறிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. இன்று புலிகளின் பெயரைப் பாவித்தே கைதுகள் இடம்பெற்று வருகின்றன.,

விரும்பியோ, விரும்பாமலே அந்த மக்கள் புலிகளின் பிரதேசங்களில் வாழக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. இதனை அரசாங்கம் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.