புலம்பெயர் தமிழீழமே ஒன்று சேருங்கள்

நாங்கள் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமை குறித்து கடுமையாக தெரிவித்துவருவதன் காரணம் இன்று தமிழினத்துக்கு சார்பாக சர்வதேசத்தில் உருவாகிவரும் சூழலை நாம் பிரிந்து நிற்பதனால் இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்தினாலாகும்.

0904tamillondon23ES_415x297“நாடு கடந்த தமிழீழம் “என்ற தீர்வுப்பொதியுடன் நமது புலம்பெயர் புத்திஜீவிகள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சில புலம்பெயர் நாடுகளில் உள்ள நமது உறவுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாதிப்பினை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் புலம்பெயர் நாடுகளில் மட்டுமன்றி தமிழீழ மக்களிடமும் பரவிக்கிடப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

இந்த நிலையினை மாற்றவேண்டிய பொறுப்பு ஒவ்வாறு தமிழின உணர்வாளர்களிடமும் இருக்கவேண்டும் என்பதே எங்களது தலையாய எதிர்பார்ப்பாகவுள்ளது.

இன்று தமிழீழத்தில் தமிழர்களை இல்லாதொழிக்கும் பாரிய நடவடிக்கையில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்கள அரசு பாரிய சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்ள திட்டமிட்டு நடைமுறைப்படுத்திவருகின்றது.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுத்தலைவருமான இரா.சம்பந்தன் இலங்கையில் இருந்துவெளிவரும் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் “தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் மீண்டும் ஒரு கிளர்ச்சியேற்படுவதை தடுத்து நிறுத்தமுடியாது போகும்”என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தினை நமது உறவுகள் ஏதோ அரசியல் கருத்து என எடுத்துக்கொள்ளவேண்டாம் என்பதே எங்களது வன்மையான கருத்தாகும். இன்று வடகிழக்கில் பரவலான சிங்கள குடியேற்றங்கள் நன்கு திட்டமிட்ட முறையில் சிறப்பாகமேற்கொள்ளப்பட்டுவருது தொடர்பில் சில இடங்களின் தகவல்கள் வெளிவருகின்ற போதிலும் பல இடங்களின் தகவல்கள் வெளிவருவதில்லை.காரணம் அவை இராணுவமுகாம்களால் சூழப்பட்டு உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் குடியேற்றங்கள் செய்யப்படுகின்றன.

மட்டக்களப்பு – அம்பாறை – திருகோணமலை – முல்லைத்தீவு எல்லைப்பகுதியில் பரவலான சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் கிளிநொச்சி நகர்ப்பகுதியிலும் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறான நிலையில் புலம்பெயர் மக்கள் பிரிந்து நிற்பது நொந்து நூலாகிப்போயுள்ள தமிழ் மக்களின் மனதை மேலும் நோகடிக்கசெய்யும் என்பதுடன் தமிழர்களுக்கு தீர்வுத்திட்டம் ஒன்றை வழங்கவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் ஆர்வத்தை குறைக்கும் என்பதும் உண்மையாகும்.

நம்மிடம் பல்வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று நம்மிடம் இருக்கவேண்டிய பெரிய ஆயுதம் ஒற்றுமையாகும்.

இதில் ஒரு சிறு தவறு ஏற்பட்டால் கூட தமிழீத்தில் உள்ள தமிழர்களை காக்க எவராலும் முடியாத நிலையே ஏற்படும் என்பதை ஒவ்வொறு புலம்பெயர் மக்களும் உணரவேண்டும்.
நாம் பட்ட கஸ்டங்கள் எல்லாம் மாற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை இன்னும் சிறிதுகாலம் ஒற்றுமையை வெளிபடுத்துவதன் மூலம் நாம் உணர்ந்துகொள்ளலாம் என்பது எங்களது அசையாத நம்பிக்கையாகும்.

அதற்கு முன்பாக புலம்பெயர் மக்கள் ஒற்றுமையினை வெளிப்படுத்தும் பாரிய நிகழ்வொன்றை செய்யவேண்டும்.எமது மண்ணில் விதைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் தினத்தில் அதனை நிகழ்த்தவேண்டும்.

அந்த நிகழ்வில் தமிழீழம் தொடர்பிலும் நாடுகடந்த தமிழீழம் தொடர்பிலும் மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு தமது இன்றைய நிலை தொடர்பில் தெளிவான விளக்கத்தை கொடுத்து அந்த மாவீரர்களின் கல்லறைகளில் ஒற்றுமையினை உறுதிப்படுத்தி சபதம் எடுக்கவேண்டும்.

அதற்காக மாற்றுக்கருத்துக்கருத்துகளை கொண்டவர்கள் இந்தவேளையில் ஒருங்கிணையவேண்டும் என்பதே எங்களது இன்றை அத்தியாவசிய தேவையாகவுள்ளது.இதனை செய்ய எமது இளம் இரத்த உறவுகளான புலம்பெயர் “இளையோர் அமைப்புகள்”ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

ஏனென்றால் கடந்த காலங்களில் புலம்பெயர் நாடுகளில் சிறப்பான போராட்டங்களை உணர்வுபூர்வமாக நிகழ்த்திவந்ததில் இந்த “இளையோர் அமைப்புகள்”சிறப்பாக செயற்பட்டன என்பதனால் அவர்களிடம் இந்த கோரிக்கையினை விடுக்கின்றோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.