புலிகளுக்கு தகவல் வழங்கியதாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தகவல்களை வழங்கி உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியதுடன் மாதாந்தம் ஊதியத்தைப் பெற்றுவந்ததாகக் கூறப்படும் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

handcuff1கொழும்பிற்கு அருகிலுள்ள பிரதேசமொன்றில் வசித்துவரும் இந்த சிங்கள இனத்தவரான இராணுவ மேஜர், தான் பணியாற்றிய காலத்தில் மாத்திரமல்லாது ஓய்வுபெற்ற பின்னரும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
15 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தில் பணியாற்றிய இவர், இராணுவப் புலனாய்வுப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். இவர், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மற்றும் தென் பகுதியிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த தகவல்களை புலிகளுக்கு வழங்கியுள்ளதுடன் இதற்காக மாதாந்தம் லட்சக் கணக்கில் பணத்தைப் பெற்றுவந்திருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
 
இந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி குறித்து கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
விடுதலைப் புலிகளினால் கொழுமபு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ அதிகாரிகளின் கொலைகளுடன் இவர் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.