விடுதலைப் புலிகளின் கரும்புலி ஒருவர் கைது என்கிறது திவயின

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது என்பதை வெளிக்காட்டும் நோக்கில் கொழும்பு நகரில் பாரிய குண்டு வெடிப்பை நிகழ்த்தவிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என திவயின குறிப்பிட்டுள்ளது.

question-mark3aவிசேட காவல்துறைக் குழுவொன்றினால் கைதுசெய்யப்பட்ட இந்த நபரிடமிருந்து அதிசக்திவாய்ந்த வெடிகுண்டு உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சில தினங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட ஆனந்த வர்ணன் என்ற இந்த சந்தேக நபர், மலேசியாவிலுள்ள விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலரால் வழிநடத்தப்பட்டுள்ளார் எனவும்  மலேசியாவிலுள்ள விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் வவுனியாவிலுள்ள வங்கியொன்றில் சந்தேக நபரின் கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளனர் எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.
 
குண்டு வெடிப்பு நிகழ்த்துவற்கான செலவுகளுக்காக சில தினங்களுக்கு முன்னர் சந்தேக நபரின் வங்கிக் கணக்கிற்கு இவர்கள் 30 ஆயிரம் ரூபா பணத்தை அனுப்பி வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வவுனியாவில் வசித்துவரும் நபர் ஒருவர் டெட்டனேட்டர்களைக் கொள்வனவு செய்வதற்கு முயற்சித்து வருவதாக வேவுபார்க்கும் நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த விடுதலைப் புலிகளின் முக்கிஸ்தரைத் தாம் கைதுசெய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் எனவும்   கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மலேசியாவிலுள்ள விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலர், தமக்கு குண்டு வெடிப்பை மேற்கொள்வதற்கான செலவீனங்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார் எனவும் திவயினவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 குண்டை வெடிக்கச் செய்யும் கருவியை வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கொள்வனவு செய்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர், மிக நீண்டகாலமாக விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டுவருவதுடன் இவர், குண்டுகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள நிப்போன் விடுதிக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு, புறக்கோட்டையில் இராணுவ பேருந்து ஒன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல், கொட்டாஞ்சேனை காவல்துறையின் பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டச் சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் இந்த நபருக்கு தொடர்பிருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
கொழும்பில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட இரத்னம் மாஸ்டர் என்பவருக்கு அடுத்த நிலையில் இயங்கிவந்த இந்தச் சந்தேக நபர், முகத்துவாரம், இப்பாவத்த பிரதேசத்தில் மூன்று மாடி வீட்டில் வெடி குண்டுக் களஞ்சியத்தை நடத்திவந்தவர் எனவும் விசாரணகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என திவயின தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.