அவுஸ்திரேலியா தமக்கு தந்த வாக்குறுதியை மீறியுள்ளதாக அடைத்துவைக்கப் பட்டுள்ள தமிழ் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

அவுஸ்திரேலியாவின் சுங்கப் பிரிவு கப்பலான ஓசனிக் வைக்கிங்கில் இருந்து இந்தோனேசியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் உள்ளடங்கியிருக்கும் 10 இலங்கைப் பெண்களும் அவர்களின் பிள்ளைகளும் தடுப்பு முகாமிலிருந்து எங்கேயும் செல்ல முடியாதவாறு தாங்கள் பூட்டிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

தமது விருப்பத்தின் பிரகாரம் தாங்கள் எங்கும் வெளியே செல்ல முடியாதெனவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு மாறாகத் தாங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தடுப்பு நிலையத்தின் இரும்புச் சட்டங்களுக்குப் பின்னால் இருந்தவாறு ராய்ட்டர் செய்திச் சேவைக்கு அந்தப் பெண்கள் கூறியுள்ளனர். அவர்கள் குழந்தைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.

பெண்களும் பிள்ளைகளும் விசேடமாகக் கவனிக்கப் படுவார்களெனவும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்காமல் முகாமிற்கு சமீபமாக அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆனால், அந்த இடம் தடுப்பு நிலையத்தை விட விசேடமானதாக இல்லையென்று அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்தோனேசியாவிலுள்ள நிருபர் கூறுகிறார்.

அங்குள்ள பெண்கள் அவுஸ்திரேலியாவிற்கே செல்ல விரும்புவதாகவும் அவர்கள் மிகவும் துன்பத்துடன் காணப்படுவதாகவும் அந்த நிருபர் கூறுகிறார். முட்கம்பி வேலி இல்லையே தவிர உணர்வு ரீதியாக அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தன்மையே காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் ஜன்னல் கம்பிகளினூடாகவே அவர்களைப் பார்க்க முடிகிறது. உள்ளே உள்ள நிலைமை சௌகரியமாக இருக்குமென்று நான் நம்பவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த புகலிடம் கோருவோரின் தங்குமிட வசதிகள் தொடர்பான விடயம் இந்தோனேசிய அதிகாரிகளைப் பொறுத்தது என்று அவுஸ்திரேலிய அரசு கூறுகிறது.

இந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உணர்வையே இந்தோனேசியா கொண்டுள்ளதாகத்தென்படுகின்றது என்று கூறிய அவர், அவுஸ்திரேலியாவானது தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வரை அவர்கள் இந்த நிலைமையிலேயே இருப்பார்களென்று நிருபர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் 52 வாரங்களுக்கு மட்டுமே வைக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் 10 வருடங்களுக்கு மேலாக இரும்புச் சட்டங்களுக்குப் பின்னால் இருந்த சிலரைத் தான் சந்தித்திருப்பதாக தோம்ஸன் என்ற நிருபர் கூறியுள்ளார்.

கப்பலிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டபோது தாங்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு அனுமதியளிப்பதாக அளித்த வாக்குறுதியை அந்நாடு நிறைவேற்றுகின்தென்ற சந்தோஷத்தில் புகலிடம் கோருவோர் காணப்பட்டதாகவும் அவர்களுடைய எதிர்பார்ப்பே இந்தோனேசியாவின் எதிர்பார்ப்பாக இருந்ததாகவும் டாக்டர் சுஜாத் மைககோ என்ற இந்தோனேசிய இராஜதந்திரி கூறியுள்ளார்.

ஆனால், இந்த புகலிடம் கோருவோர் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கான உத்தரவாதம் எதனையும் அவுஸ்திரேலிய அரசு வழங்கவில்லை என்றும் இந்த விவகாரம் யு.என்.எச்.சி.ஆரைப் பொறுத்ததென்றும் அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.