ஈழத்தமிழர் மீதான சிறிலங்காவின் அடக்குமுறைக்கு நோர்வேயும் துணையாகின்றதா?

ஈரான், பர்மா மற்றும் சீனா போன்ற சிறிலங்காவின் நட்பு நாடுகளின் வரிசையில் நோர்வேயும் சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு துணை போவதாக நோர்வேஜிய பேராசிரியர் ஒருவர் எழுதியுள்ளார்.

சிறிலங்கா தொடர்பான நோர்வேயின் சமகால நிலைப்பாட்டினை முன்வைத்து ஒஸ்லோ பல்கலைக் கழக சமூக மானிடவியல் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதியுள்ள தனது கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.

oivind_20091121ஒய்வின்ட் புக்லறூட் இலங்கைத்தீவின் இன முரண்பாட்டு அரசியலை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நுணுக்கமாக அவதானித்து வருபவர். நோர்வேயின் Dagbladet முன்னணி நாளிதழில் கடந்த ஞாயிறு (15.11.09) எழுதிய ஆய்வுக்கட்டுரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

போருக்குப் பின்னான இன்றைய சமகாலத்தில் இலங்கைத் தீவு தொடர்பான அனைத்துலக கருத்துருவாக்கத்தில் நோர்வேயின் பிரசன்னம் முற்றுமுழுதாக அற்றுப் போய்விட்டதாக குறிப்பிடும் புக்லறூட், சிறிலங்கா அரசாங்கத்தை “திருப்திப்படுத்துவதில்” நோர்வே கவனம் செலுத்துவதாகவும் குறைகூறியுள்ளார்.

தடுப்பு முகாம்களிலுள்ள மக்களை சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் முறை தொடர்பான கடுமையான அனைத்துலக அழுத்தம் வெளிப்படும் இன்றைய புறநிலையிலும், சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களுக்காக பொருளாதார சலுகைகளை நிறுத்துவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வரும் நிலையிலும், போரின் இறுதிக்கட்டத்தில் தரப்புகளின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா கோரி வருகின்ற சூழலிலிலும் நோர்வே மௌனம் காத்து வருவதாகவும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

‘நோர்வேயும் சிறிலங்காவும்: அரை ஆண்டுக்குப் பின்’ எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் முழு மொழிபெயர்வு:

மே 17, 2009, நோர்வேஜிய மக்களில் பெரும்பான்மையானோர் sausage உடன் ஐஸ்கிறீம் அருந்திக் கொண்டிருந்த வேளையில் (மே 17 நோர்வேயின் சுதந்திர நாள்) ஆசியாவிலேயே அதிக காலநீட்சி கொண்டதும்; பாரிய இரத்தக்களரியை ஏற்படுத்தியதுமான இலங்கைத்தீவின் உள்நாட்டுப் போர் சடுதியாக மோசமான முறையில் முடிவுக்கு வந்தது.
 
நாட்டின் வடகிழக்கு நகரான முல்லைத்தீவு கடற்கரைகளுக்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் தமிழ் விடுதலை அமைப்பின் மீதமிருந்த தலைவர்களும் குண்டுமழையில் பலியாகினர். பலியானவர்களில் பலர் விடுதலைப் போராளிகளின் ஆதரவாளர்களும் குடும்ப உறுப்பினர்களுமாவர். ஏனையோர் உயிர் அச்சத்திலிருந்தவர்களும், போரினால் உளப்பாதிப்புற்றவர்களும், விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுமாவர்.

போரின் இறுதி நாட்களில் நடந்தேறிய பல சம்பவங்கள் இன்னமும் தெளிவற்றவையாகவே உள்ளன. கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை எத்தனை?, விடுதலை அமைப்பின் தலைவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்?, போர் விதிமுறைகள் மற்றும் பொது மக்கள் மீதான அணுகுமுறைகளில் தரப்புகளால்; எவ்வகையான விதிகள் மீறப்பட்டன? என்பவை தொடர்பாக இதுவரை தெளிவின்மையே நிலவுகின்றது.
 
போரின் இறுதி மாதங்களில் குறைந்தது 20 000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிக பட்சமாக சிறிலங்கா அரசாங்கப்படைகள் “பாதுகாப்பு வலையங்கள்” எனத் தாமே பிரகடனப்படுத்திய பகுதிகளில் மேற்கொண்ட எறிகணை குண்டுவீச்சு தாக்குதல்கள் பற்றியும், விடுதலைப்புலிகளின் மூத்த அரசியல் தலைவர்கள் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாகவும் நம்பகமான சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. ஆனபோதும் சிறிலங்கா அரசாங்கம் இவற்றை மறுத்துள்ளது.

போரின் கடைசிக் கிழமைகளில் வெளியேறிய மக்களும், ஆயுதங்கள் மௌனிக்கப்படும் வரை உயிர்களைக் கையிலேந்தி நின்ற மக்களுமாக எல்லாமாக 280 000 – 300 000 வரையான மக்கள் வவுனியா நகருக்கு வெளியில் முட்கம்பி சுற்றிவளைப்பிற்குள், இராணுவ நிர்வாகத்தின் கீழ் பாரிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கூட, முகாம்களைவிட்டு வெளியேறவோ அன்றி குடும்பங்களுடன் மீள் இணைவு காணவோ வாய்ப்பற்ற சூழலிலேயே மக்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
செப்ரெம்பர் இறுதியில் ஒரு முகாமிலிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சிலர் இராணுவத்தால் சுடப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. முகாம்கள் மிக மோசமான நிலையிலுள்ளன. உணவு, குடிநீர் பற்றாக்குறையும் கழிப்பிட வசதிகள் மிக மோசமான நிலையிலும் உள்ளன. ஒருகட்டத்தில் வாராந்தம் 1400 பேர் இறந்ததாக பிரித்தானியாவின் “ரைம்ஸ் ஒன்லைன்” (TimesOnline)  நாளிதழ் ஜூலை 10ஆம் நாள் செய்தி வெளியிட்டிருந்தது.
 
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்திற்குரியவர்கள் புலிகளின் எதிரிகளான ஒட்டுக்குழுவினரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு, இரகசிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளளனர். கைதுசெய்யப்பட்ட இன்னும் சிலர் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. நாளொன்றுக்கு 40 பேர் முகாம்களிலிருந்து காணாமற்போவதாக முந்நாள் அமைச்சர் மங்கள சமரவீர செப்ரெம்பர் 22ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கைதுசெய்யப்பட்ட பெண்கள் இராணுவத்தினரால் திட்டமிட்ட பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. ஊடகவியலாளர்கள் முகாம்களுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் பொதுவான அரசியல் போக்கினையும், முகாம்களின் நிலைமைகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்தலாகாது என்ற முன்நிபந்தனைகளுடன் மனிதாபிமான உதவிநிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தினால், தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களுக்கு மீள அனுப்பி வைக்கவுள்ளதாக அரசாங்கம் தொடர்ச்சியாக உறுதியளித்து வருகின்றது. தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட தொகை மக்கள் “விடுவிக்கப்பட்டவர்களாக” அனைத்துலக ஊடகங்களுக்கு காட்டப்பட்டு, ஊடக படப்பிடிப்பு முடிந்த கையோடு மீண்டும் பேரூந்துகள் மூலம் தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒக்ரோபர் 25ஆம் நாள் சிறிலங்காவின் சண்டே ரைம்ஸ் தெரிவித்திருந்தது.
 
முன்னர் விடுவிக்கப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட கைதிகள், வேறு இரகசிய முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக சிறிலங்காவில் பணியில் ஈடுபட்டிருக்கும் நோர்வேஜிய உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கட்டுரையாளருடனான உரையாடல்களின் போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

2002 – 2008 காலப்பகுதியில் இலங்கைத் தீவின் சமாதான முன்னெடுப்பின் ஏற்பாட்டாளராகவிருந்த நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹைம், ஒரு தடவை என்ஆர்கோ (நோர்வே தேசிய ஊடகம்) ஊடகவியலாளர் Sverre Tom Radoy யிடம் வைக்கிங் காலத்திற்கு பின்னர் நோர்வே முக்கிய பங்கு வகித்த நாடு இலங்கைத் தீவு எனக் குறிப்பிட்டார்.

அவரின் (எரிக் சூல்ஹைம்) பங்களிப்புடன் பேச்சுவார்த்தைகளுக்கு இட்டுச்சென்ற போர் நிறுத்த உடன்படிக்கை செயலிழக்கச் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை எட்டும் இன்றைய புறநிலையில் அக்கூற்று பொய்த்துவிட்ட ஒன்றாகும். போர் முடிவுறும் தறுவாயில் மேற்குலக நாடுகள் – சரியாகச் சொல்வதானால் தமது ஆற்றாமையுடனும் தோற்றுப்போன நிலையிலும் மனித உயிர்களைக் காப்பதற்கான முயற்சிகளை எடுத்த போது நோர்வே ‘எலி’ போல் அமைதி காத்தது.
 
இன்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் முறை தொடர்பான கடுமையான அனைத்துலக அழுத்தம் வெளிப்படும் நிலையில், சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களுக்காக பொருளாதார சலுகைகளை நிறுத்துவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வரும் நிலையிலும், போரின் இறுதிக்கட்டத்தில் தரப்புகளின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா கோரி வருகின்ற சூழலிலும் – இலங்கைத்தீவின் நிலைமைகள் தொடர்பான கருத்துருவாக்கம் சார்ந்த அனைத்துலக செய்தி பிம்பத்தில் நோர்வேயின் பிரசன்னம் முற்றுமுழுதாக இல்லாதுள்ளது.

தமது செயற்பாட்டிற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதி பெற்ற ஐ.நா நிறுவனங்கள் ஊடாகவும், நோர்வேயின் தனியார் உதவி நிறுவனங்கள் ஊடாகவும் தடுப்பு முகாம்களுக்குரிய நிதிவளத்தினை வழங்குததிலேயே நோர்வே அதீத கவனம் செலுத்துகின்றது. நோர்வே அரசாங்க ஆவணங்களில் ஒரு இயற்கை அழிவின் விளைவுகளுக்கு ஒப்பாகவே இலங்கைத்தீவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை குறிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக கூறுவதாயின்: 2010ஆம் ஆண்டுக்கான நோர்வே வெளியுறவு அமைச்சக வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு ஆவணத்தில்; பக்கம் 69இல்  “இலங்கைத் தீவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகளை மேம்படுத்த நோர்வே முக்கியப்படுத்தப்பட்ட அளவில், மனிதாபிமான மற்றும் அரசியல் அடிப்படைகளில் ஈடுபாட்டினைப் பேணும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை யாதெனில்: ஐ.நா நிறுவனங்கள் மற்றும் ஏனைய சில நாடுகளுடன் நோர்வே தனது “மனிதாபிமானப் பணிகள்” என்ற பங்களிப்பு மூலம் பெரும் தொகுதி தமிழ் சிறுபான்மை மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும், இறந்துகொண்டிருக்கும் முகாம்களுக்கு நிதிமூலம் வழங்குகின்றது.

முகாம்களை நிர்வகிப்பதற்கான அடுத்த ஆண்டுக்கான செலுவுத்தொகையாக 225 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக கொடை வழங்குனர்களுக்கு தெரிவித்துள்ளது. அனைத்துலக நிதிமூலங்களை அள்ளும் நோக்கமே இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதற்கான குறிப்பிடத்தக்க காரணியாகும்.
 
போரினால் மக்கள் வெளியேற்றப்பட்டு வெறுமையாக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களில், இராணுவத்தளங்களையும், பௌத்த விகாரைகளையும் நிறுவுவதன் மூலம், சிறிலங்கா அரசாங்கம், பெருமெடுப்பில் சிங்கள இராணுவ-பெளத்த மத மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை முகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்படாமைக்கான இரண்டாவது காரணியாகும்.

எதிர்காலத்தில் மேற்கூறிய நோக்கத்திற்கான உட்கட்டுமான நிகழ்ச்சித் திட்டத்திற்கு நோர்வேயின் நிதிமூலம் பயன்படுத்தப்படுமாயின் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இருக்கப்போவதில்லை. நோர்வே வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கட்டுரையாளருடனான அதிகாரபூர்வமற்ற உரையாடல்களின் போது; விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இல்லாத இன்றைய சூழலில், சிறிலங்கா அரசாங்கத்தை “சாந்தப்படுத்துவதில், திருப்திப்படுத்துவதில்” நோர்வே கவனம் கொண்டிருப்பதாக கோடிட்டுக்காட்டப்பட்டது.

அதைச் செய்வதற்கான ஒரே வழி சிறிலங்காவின் நட்பு சக்திகளான ஈரான், பர்மா மற்றும் சீனா ஆகியவற்றுடன் இணைந்து சிறுபான்மை மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதே.

இது நடைமுறையில் எவ்வாறு நிகழ்கின்றது என்பதைக் கூற ஒரு சிறிய, ஆனால் உண்மையை எடுத்தியம்பும் எடுத்துக்காட்டினைக் கூறமுடியும்: நோர்வேயின் “Concerts Norway” க்கும் சேவலங்கா (Sewalanka) எனும் பௌத்த நிறுவனத்திற்குமிடையிலான கலாச்சார ஒருங்கிணைவு நிகழ்வினைக் குறிப்பிடலாம். இந்த கலாச்சார இணைவின் ஒரு அங்கமாக நவம்பர் 27, காலி நகரத்தில் இசைக்கொண்டாட்ட நிகழ்ச்சி நிகழ்த்தப்படவுள்ளது.

இலங்கைத்தீவினை அறிந்தவர்கள் நவம்பர் 27 சாதாரண தெரிவல்ல என்பதை அவதானிப்பர். நவம்பர் 27, தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்ந்த தமது மாவீரர்களை நினைவுகூரும் நாள். போர் நிகழ்ந்த காலங்களில் தமிழர்களின் தேசிய நாளாக அந்நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
 
இந்நாளில் நடாத்தப்படவுள்ள இசைக் கொண்டாட்டம், இந்த மாவீரர்கள் மீதான அரசாங்கத்தின் வெற்றியை பறைசாற்றவும், தமிழ் சிறுபான்மை மக்கள் மீது தொடரப்படும் அடக்குமுறையின் ஒரு பகுதியாகவுமே அமையவுள்ளது – நோர்வேஜிய மக்களின் வரிப்பணத்தில்…

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.