தேர்தல்களும் சந்திப்புகளும் சில எதிர்பார்ப்புகளும்

மடல்கள் வரைவதில் உலக சாதனை புரிந்திருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.

வழமையாக அவர் வரையும் மடல்களில் கவிதைகளில் சகோதர யுத்தம், டெசோ மாநாடு பற்றியதான விவகாரங்கள் நிரம்பி வழிந்தாலும் இறுதியாக வெளியிட்ட மடலில் புதியதொரு விடயம் இணைக்கப்பட்டிருந்தது.

slelection-lrg2005ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு எடுத்த தேர்தல் புறக்கணிப்பினால் 7 இலட்சம் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகும் நிலை ஏற்பட்டு விட்டதாக அம்மடலில் தனது கவலையை மௌன அழுகையாக பதிவு செய்துள்ளார்.

விளைவு இப்படி ஆகிவிட்டதேயென விளக்கமும் கருணாநிதியால் அளிக்கப்பட்டுள்ளது.

இவர் என்ன சொல்ல முற்படுகிறார் என்றால், இம்முறை தேர்தலைப் புறக்கணிக்காமல் தனது மத்திய ஆட்சியதிகார நண்பர்கள் விரும்பும் நபருக்கு வாக்களியுங்களென்று மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தை ஏற்றுக் கொள்ளாத இந்திய ஆய்வாளர்களின் கருத்து நிலையும் இதனையே புலப்படுத்துகிறது.

இவை தவிர, சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனக் கட்சிகளின் சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளதை அவதானிக்க வேண்டும். நல்லிணக்க அரசியலுக்கான அடித்தளமொன்று சூரிச்சில் இடப்படுவது போன்றதொரு தோற்றப்பாடு இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் அண்மிக்கும் இவ்வேளையில் இத்தகைய சந்திப்புகளின் பின்னணி எதுவாக இருக்குமென்பதை ஊகிப்பது கடினமானதல்ல.

இருப்பினும் புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமில்லாத இச்சந்திப்பு, புலம்பெயர் நாட்டில் ஏன் நிகழ்ந்தது என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதில் ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்ட அழிப்பிற்கு ஆதரவு வழங்கிய கட்சிகளும் விடுதலைப் புலிகளை ஏக தமிழ் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றம் சென்ற பெரும்பான்மையான தமிழ் பிரதிநிதிகளும் சந்திப்பது பலத்த எதிர்பார்ப்பினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ரி.எம்.வி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா), தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற வடக்கு  கிழக்கை மையப்படுத்திய கட்சிகளும் மலையக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற மலையக கட்சிகளும் கொழும்பில் இயங்கும் ஜனநாயக மக்கள் முன்னணியும் சில அரச தரப்பு அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனாலும் புதிய ஜனநாயகக் கட்சியும்   ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணியும் இச் சந்திப்பிற்கு அழைக்கப்பட வில்லை.

இப் பிரமாண்டமான சந்திப்பினை லண்டனில் இயங்கும் தமிழ் தகவல் மையம் ஒழுங்கு செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து எந்த அறிவிப்பினையும் அம் மையத்தினர், ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களின் பிரசன்னமற்று, மூடிய அறைக்குள் நிகழ்த்தப்பட்ட இச் சந்திப்பின் பின்னணியில் அயல்நாடும் அரச தரப்பும் இணைந்து செயற்பட்டதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

விரிந்த பார்வையில் இச் சந்திப்பானது, இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வுத் திட்டத்தை உருவாக்கப் போவதாகவும் முரண்பட்டு நின்று செயற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்ததால் வானில் விடிவெள்ளி தோன்ற ஆரம்பித்திருப்பதாகவும் சில உரையாடல்கள் உலவுகின்றன.

இந்திய மத்தியஸ்தத்தில் நிகழ்ந்த திம்பு பேச்சுவார்த்தையில் ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கங்கள், அஹிம்சைவாத கூட்டணி என்பன ஒரு தரப்பாகவும் மறுதரப்பில் இலங்கை அரசும் கலந்து கொண்டன.

உடன்பாடு எட்டப்படாத நிலையில் அப்பேச்சுவார்த்தை சிதைந்து போனது.

ஆனால் இச் சந்திப்பில் அரசோடு சேர்ந்தியங்கும் தமிழ்க் கட்சிகளும் எதிரணியில் இருக்கும் கூட்டமைப்பும் ஒரு பொதுமேடையில் அமர்ந்து இடைக்கால, நிரந்தரத் தீர்வு குறித்து பேசுகின்றன.

திம்புவின் வித்தியாசமான பரிமாணத்தில் சூரிச் காட்சியளிக்கிறது. இங்கு இரு தரப்பும் சிறுபான்மையினக் கட்சிகளாக இருப்பதால் எட்டப்படும் முடிவுகள் இரு பெரும் சிங்களக் கட்சிகளிடம் முன்வைக்கப்படலாமென்பதை உணரலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாரித்து வைத்திருக்கும் தீர்வுத் திட்டம் இச் சந்திப்பில் கலந்து கொள்ளும் ஏனைய கட்சிகளின் பார்வைக்கு முன் வைக்கப்பட்டிருக்குமாவென்று தெரியவில்லை.

ஒரு சுமுகமான உடன்பாடு இச் சந்திப்பில் எட்டப்படுமாயின் இதன் அடுத்த கட்ட நகர்வு எதை நோக்கி பயணிக்குமென்பதில் சந்திப்பை உருவாக்கியவர்களுக்கே வெளிச்சம்.

ஜனாதிபதித் தேர்தல் வரை, முன்பு நிகழ்ந்த அரசு புலிகள் பேச்சுவார்த்தை போன்று, ஜப்பான், தாய்லாந்து என வெளிநாடுகளில் இச் சந்திப்புகள் தொடரலாம்.

இதனால் தேசிய இன நல்லிணக்கம் உருவாகுவது போன்றதொரு தோற்றப்பாடு சர்வதேச சமூகத்தினரிடையே உருவாகும் வாய்ப்பினையும் இச் சந்திப்புகள் ஏற்படுத்தும். போர்க் குற்றம், இடம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பன இரண்டாவது படி நிலைக்குத் தள்ளப்படும் சாத்தியங்களும் இங்கு உருவாகும்.

ஒருவேளை வடக்கு  கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் சுய நிர்ணய உரிமையோடு கூடிய அதிகாரப் பகிர்வு என்கிற இறுதித் தீர்வினை இச் சந்திப்பாளர்கள், கொள்கை அடிப்படையில் உடன்படுவார்களாயின் இதனை தேர்தலை எதிர்கொள்ளும் ஆளும் தரப்பினரிடமும் பிரதான எதிர்க்கட்சியிடமும் முன் வைப்பார்கள்.

இதில் இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். கூட்டமைப்பினரால் இலங்கை அரசு, இந்தியா மற்றும் மேற்குலகிடம் முன்வைக்கவிருக்கும் தீர்வுப் பொதியானது, கொழும்பு அரசியல் தளத்தினுள் முடக்கப்படும் சாத்தியங்களே இச்சந்திப்பின் எதிர்விளைவாக அமையப் போகிறது.

அதேவேளை, அரசியலமைப்பில் பாரிய மாற்றங்களை உருவாக்காமல், சிங்கள தேசிய இறைமையை ஏற்றுக் கொள்ளும் தீர்வுத் திட்டங்களை தாயக, புலம்பெயர் தமிழ் மக்கள் அங்கீகரிப்பாளர்களாவென்று தெரியவில்லை.
நீண்ட இன ஒடுக்குமுறை வரலாறுகள், பேரினவாதத்தின் மீதான நம்பகத் தன்மையை, தமிழ் மக்களிடம் ஏற்படுத்தவில்லை.

பெரும்பான்மையான சிங்களக் கட்சிகளிடம் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் எதுவுமே இல்லையென்பதை, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அடிக்கடி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைக்கப் போகும். இறுதித் தீர்வினைப் பரிசீலிக்க, பெரும்பான்மையினருக்கு நீண்ட காலமெடுக்கும். தேர்தல் முடிந்த கையோடு இதை நிறைவேற்றுவோமென வாக்குறுதிகளும் வழங்கப்படலாம். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமை தாங்கிய சர்வகட்சியினரின் சந்திப்புகள் பல ஆண்டு சென்றும் இன்னமும் ஒரு தீர்வினை முன்வைக்க முடியாமல் தவிக்கிறது.

சர்வதேச அழுத்தங்களின் அதிகரிப்பும் சரத் பொன்சேகாவின் அரசியல் வருகையும் கூட்டுத் தீர்வினைப் பரிசீலனைக்கு எடுப்பது போன்ற நிலைப்பாட்டிற்கு அரசாங்கத்தை இட்டுச் செல்லும்.

ஆனாலும் மூன்றாவது சக்தி போன்று மங்கலாகத் தெரியும். இத் தீர்வுக் கூட்டுக்குள், ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த சிறுபான்மை தேசிய இன மக்களை எந்த அணிக்குள் இழுத்துச் செல்ல வேண்டுமென்கிற உத்திகளும் இப் பிரதிநிதிகளின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருக்கும்.

அதாவது, கூடுதலான நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் தவிர்க்க முடியாத தெரிவாகக் கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை எந்தப் பக்கத்திற்கு இழுத்துச் செல்வது என்பதில் பல இழுபறிகள், இச் சந்திப்பின் மறைமுக நிகழ்ச்சி நிரலாக, வருகை தந்திருக்கும் அரச மற்றும் ரணிலின் பிரதிநிதிகள் கொண்டிருப்பர்.

ஆகவே, இச் சந்திப்பின் தலைமைச் சக்தியாகவுள்ள கூட்டமைப்பினர் இங்கு தீர்வொன்று எட்டப்பட்டபின் அடுத்த நகர்வாக முன்னெடுக்கும் விடயங்களே, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகிறது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கிழித்தெறிந்த, டட்லி சேனாநாயக்க கிடப்பில் போட்ட தீர்வுத் திட்டங்களின் கதி, புதிய வரலாற்றில் மீண்டும் நிகழாதென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

கள யதார்த்தம் புரியாமல் புலம்பெயர் தமிழ் மக்கள், அரசியல் கோட்பாடுகளை முன் வைக்கிறார்களென்று சலிப்புறுபவர்கள், அதிலுள்ள நியாயத் தன்மைகளையும் வரலாற்றுப் பட்டறிவினையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் முடியும் வரை தான், அண்ணனும் தம்பியும் என்கிற “ஆறு கடக்கும் கதைகள்’ மீண்டும் நிகழாதென்பதற்கு சர்வதேசம் உத்தரவாதமளிக்குமா?

பொறுத்திருந்து பார்த்தாலும் ஆற்றைக் கடக்கும் வரை தான் இச் சந்திப்புக்கள் நிகழும். நம்பிக்கையே வாழ்க்கை என்பது நல்ல விடயந்தான். ஆனாலும் அவ நம்பிக்கையே வாழ்வாகிப் போன மனிதர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது கடினம் தான்.

– இதயச்சந்திரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.