ராஜபக்ச சகோதரர்கள் என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா

அரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.
 
கொழும்பில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டை பொன்சேகா முன்வைத்துள்ளார்.

SL_sarath_fonsekaமுதலில் எனது பாதுகாப்புக்கான படையினர் எண்ணிக்கையை அவர்கள் (பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் செயலாளர்) 25ஆகக் குறைத்தார்கள். நான் எதிர்த்தேன். பின்னர் அதனை 60 காலாட்படையினராக அதிகரித்தார்கள். அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்புப் படையினரை ஒதுக்கி இருக்கிறார்கள். அவர்கள் என் கைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அனைவரும் புதியவர்கள். அவர்கள் படுகொலை செய்யும் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். என்று தெரிவித்திருக்கிறார் பொன்சேகா.

அவரது உயிருக்கான ஆபத்து விடுதலைப் புலிகளிடம் இருந்து மட்டும்தானா? என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

இல்லை. இங்கே குற்றவாளிகள் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும்கூட என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களால் அது முடியவும்கூடும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
 
அவர் மேலும் கூறியுள்ளதாவது, எனக்கு இருக்கக்கூடிய மிகப் பயங்கரமானதும் பாரதூரமானதுமான உயிர் அச்சுறுத்தல் குறித்துக் கவனத்தில் எடுக்கும்படி அரச தலைவரிடம் நான் வேண்டுகோள் வைத்தேன். தரைப்படையில் இரண்டாம் நிலைத் தளபதியாக இருப்பவருக்குக்கூட என்னைவிட அதிக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால், அரச தலைவரின் பதில் நீங்கள் இப்போது ஒரு பொதுமகன் என்பதுதான் என விளக்கினார்.

அவரை (அரச தலைவர்) அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைவிட மேலான ஒரு குடிமகன் இல்லையா நான்?” என்று கேள்வி எழுப்பினார் பொன்சேகா. அப்போது அவரது குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது.
 
தான் வாடகை வீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சும் அதன் செயலாளரும் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.