சூரிச்சில் தமிழ் பேசும் தலைவர்கள் மாநாடு; புதுக் கதையாக எழுமா?… பழைய பல்லவி தானா?

சுட்ட பிணம் கூட எழுந்து நடக்கலாம், ஏழு கடல் நீரும் வற்றிப்போகலாம், நீ சொல்வது எப்படி உண்மையாகலாம் என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உண்டு. இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்று கூடுகிறார்கள் என்ற பத்திரிகைச் செய்தியைப் பார்த்தவுடன் மேலே உள்ள பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வந்தன. கலண்டர் திகதியையும் பத்திரிகைத் திகதியையும் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஏப்ரல் முதலாம் திகதியோ என்று பத்திரிகைத் திகதியும் கலண்டர் திகதியும் ஒன்றாகவே இருந்தன. ஓ! அப்படியானால் சரி,நவம்பர் 19.

question-mark1aகடந்த காலங்களில் பல தடவைகள் தமிழ்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் தமிழ்த் தலைவர்களிடம் காணப்பட்ட சுயநல நோக்கம் காரணமாக இவர்களது கூட்டுகள் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. இப்பொழுது ஒரு லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதன் பின்னர் (சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கணிப்பீட்டின் பிரகாரம்) இப்போதைய  தமிழ்த்  தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு உயிர் வாழும் சுதந்திரம், உணவு அருந்தும் சுதந்திரம், உறங்கும் சுதந்திரம், விசில் அடித்தவுடன் “சடின் பிறேக்” போட்டு நிற்பாட்டும் சுதந்திரம், முகாமில் வாழ்ந்தாலும் தேசியக் கொடியை ஏற்றும் சுதந்திரம், வாக்களிக்கும் உரிமை போன்ற பல்வேறு உரிமைகளையும் (சுதந்திரத்தையும்) பெற்றுக்கொடுத்த பின்னர் தமிழ்த் தலைவர்கள் வெளிநாட்டிலாவது ஒன்று கூடுகிறார்கள்  எனறால் அது ஏதோ ஒரு வகையிலாவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விடயமே.

இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக  இருந்திருந்தால்  இலங்கை சுதந்திரமடைந்த போதே, தமிழர்களின் உரிமைகளையும் பிரித்தானியரிடமிருந்தே பெற்றிருக்கலாம். இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களைத்  தமது கைகளுக்குள் போட்டுக்கொண்டு, தமிழ்த் தலைமைகளை ஏமாற்றித் தமது காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றத் தொடங்கி விட்டனர்.

ஏமாந்த சோணகிரித்தனமாக தமிழ்த் தலைவர்கள் தமது கதிரைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பிழைப்பு அரசியலில் ஈடுபட்டனர். தமிழ்த் தலைவர்களில் ஒரு சாரார் கண்ணை மூடிக் கொண்டு சிங்களத் தலைமைகள் சொல்வதை நம்பி ஏமாந்தனர். இன்னொரு சாரார் கண்ணை மூடிக் கொண்டு சிங்களத்தலைமைகள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆயினும் ஆரம்பத்தில் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்னாளில் இணக்க அரசியலில் ஈடுபட்டதையும், இணக்க அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்னாளில் (பட்டுத் தெளிந்தபின்) தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தியதையுமே கடந்தகால இலங்கை வரலாறு காட்டுகிறது.

இதற்கு நல்ல உதாரணமாக ஜி.ஜி. பொன்னம்பலம், அடங்காத் தமிழன் என அழைக்கப்பட்ட கணிதப்பேராசிரியர் சுந்தரலிங்கம், வி.பி.என அழைக்கப்பட்ட வ.பொன்னம்பலம் ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். ஜி.ஜி.பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் சம பிரதிநிதித்துவக் கோரிக்கையை முன்வைத்தபோது அதனை டி.எஸ்.சேனநாயக்க அவர்கள், நடேசபிள்ளை, மகாதேவா போன்றோரின் துணையுடன் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முறியடித்தார். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கிய சோல்பரிப் பிரபுவின் நண்பரான பேராசிரியர் சுந்தரலிங்கத்தைத் தனது அமைச்சரவையில் இணைத்துக்கொண்டு தான் சிறுபான்மையினர் மீது எந்தவித பாகுபாடும் காட்டமாட்டேன் என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உறுதியளித்தார் டி.எஸ்.
டி.எஸ்.சேனநாயக்கா பிரதமராகப் பதவியேற்றதும் தனது செயலாளரிடம், “பாரும் இப்பொழுது பொன்னம்பலம் (ஜி.ஜி) வந்து சேர் என்று சொல்லி கை குலுக்கி விட்டுப் போவார்” என்று சொன்னார்.  டி.எஸ்.சேனநாயக்கா கூறியது போல் பொன்னம்பலமும் போய் பவ்வியமாக “சேர்” என்று கைகுலுக்கி விட்டுச் சென்றாராம்.

இலங்கை சுதந்திரமடைந்தவுடன் அமைச்சரவையில் இணைந்துகொண்டு ஜி.ஜி. கைத்தொழில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். டி.எஸ்.சேனநாயக்காவின் அரசியல் ஆலோசகராக விளங்கிய சுந்தரலிங்கம், டி.எஸ்ஸின் அழுத்தம் காரணமாக (சூடு கண்டபின்) தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தமிழ் ஈழக்கோரிக்கையை முன் வைத்தார். இதே போலவே 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை குடியரசின் அரசியல் யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்ட போது செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட வ.பொன்னம்பலம் ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இவற்றை விட தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும் தேர்தல் காலங்களில் மாறிமாறி ஐக்கிய தேசியக் கட்சியுடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து ஏமாந்தது தான் கடந்தகால இலங்கைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்கள்.

சிங்களத் தலைமைகள் திட்டமிட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றன  என்ற காரணத்தாலேயேதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது, ஒரு லட்சம் உயிர்களைப்பலியெடுத்த பின் புலிகளை அழித்து விட்டதாக தென்னிலங்கை மார் தட்டுகிறது. இப்போது வெள்ளம் கழுத்து வரை வந்து விட்டது. சேடம் இழுக்கும் சுதந்திரம் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கழுத்து வரை வந்த வெள்ளத்தை இடுப்பளவுக் கேனும் குறைக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டிய நிலையே இப்போது….! நிச்சயமாகக் குறைக்க முடியும். தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நாம் நிச்சயமாக எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். அதற்கான புறச்சூழல் இப்போது உருவாகியுள்ளது. தமிழ்த் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்களும் ஒன்று கூடியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தலைமைகளுடன் முஸ்லிம் தலைமைகளும் சேர்ந்தால் கழுத்து வரை வந்த வெள்ளத்திலிருந்து நீந்திப் புதிய அரசியல் வாழ்க்கையை ஆரம்பிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. காரணம் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வெளி அழுத் தங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மையினரின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத் தேவை. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை தமிழ் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்துவார்களா?

– ந.பரமேஸ்வரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.