ஒரு நேரடி சாட்சி: போரினால் துரத்தப்பட்ட வன்னி மக்களின் மீள்குடியமர்வு

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் சிலவற்றுக்குச் செல்லும் அரிய சந்தர்ப்பம் கடந்த வாரம் எங்களில் சிலருக்குக் கிடைத்தது.
 
வெளியாட்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்வது மிக மிகக் கடினம். வவுனியாவில் உள்ள “மெனிக் பாம்” [Menik Farm ](மாணிக்கம் பண்ணை) முகாம்களுக்கும் என்னால் செல்ல முடிந்தது.

நாங்கள் வவுனியாவை அடைந்த போது “குடிபெயர்வுக்கான அனைத்துலக அமைப்பு” – ஐ.ஓ.எம். [International Organization for Migration – IOM] சின்னம் பொறித்த வாகனங்கள் (பாரவூர்திகள், பேரூந்துகள்) நீண்ட வரிசையில் நிற்பது கண்ணுக்குத் தட்டுப்பட்டது. முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியமரும் கிராமங்களுக்கோ, வவுனியா நகரசபை மைதானத்திற்கோ அல்லது மேலதிக விசாரணைகளுக்காக மற்றொரு முகாமுக்கோ மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒரேயொரு அரச சார்பற்ற நிறுவனம் ஐ.ஓ.எம்.
 
சனிக்கிழமை 10.30 மணியளவில் நாங்கள் வவுனியாவை அடைந்தோம். கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. மெனிக் பாம் முகாமில் இருந்து மீளக்குடியமர்வதற்காக அழைத்து வரப்பட்டிருந்த மக்கள் நகரசபை மைதானத்தில் பார்வையாளர் பகுதியில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்து இருந்ததைப் பார்த்தோம்.

கருக்குளம் பாடசாலைக்கு அருகில் மாணவர்கள்

கருக்குளம் பாடசாலைக்கு அருகில் மாணவர்கள்

ஆனால், அந்த மக்கள் சிறிலங்கா படையினரால் மிக இறுக்கமான காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களைச் சந்தித்துப் பேசுவது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. சில காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டு வவுனியாவில் தமது உறவினர்களுடன் தங்கி இருந்த தமிழ் மக்களை மட்டுமே எம்மால் சந்தித்துப் பேச முடிந்தது.
 
முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் 13 பேரை நான் சந்தித்தேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள் அனைவருமே தமது குடும்பத்தில் ஒருவரை அண்மைய போரின் போது இழந்திருந்தனர் அல்லது அதற்குப் பின்னரான பல்வேறு களையெடுப்பு [Screening] நடவடிக்கைகளில் தொலைத்துவிட்டிருந்தனர்.
 
அவர்களில் இரு பெண்களால் மட்டுமே தமது உறவினர்கள் காணாமல் போனமை குறித்து அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவிடம் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடிந்திருந்தது.
 
ஒரு பெண், முன்னாள் போராளியான தனது சகோதரியை பம்மைமடு புனர்வாழ்வு முகாமில் கடைசியாக ஒரு தடவை பார்த்திருக்கிறார். இரண்டாவது தடவையாக அவர் அங்கு சென்ற போது அவரது சகோதரி மாற்றப்பட்டு விட்டார் என்றே அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முகாமின் பொறுப்பதிகாரி அது பற்றிய விபரங்கள் எதனையும் அந்தப் பெண்ணுக்குத் தரவில்லை.
 
மற்றொரு பெண்ணின் கணவர், அவர்கள் “மெனிக் பாம்” நான்காவது மண்டலத்தில் இருந்த போது பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஏற்கனவே மூன்று குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண்ணோ இப்போது ஐந்த மாதக் கர்ப்பிணியாக இருக்கின்றார்.
 
எங்களுடனான கலந்துரையாடலின் போது தனது சொந்த ஊரான கிளிநொச்சியிலுள்ள வட்டக்கச்சிக்குச் சென்றுவிடுவதற்கு தனக்கிருக்கும் விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். ஆனால், தனது சுய விருப்பத்தின் பேரில் வெளியேறி ஏற்கனவே வவுனியாவில் உறவினர்கள் வீட்டுக்கு வந்து விட்டதனால் அரசின் மீள்குடியமர்வுத் திட்டத்தின் கீழ் தான் மீண்டும் தனது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ என்று அவர் அஞ்சுகிறார். ஏனெனில் அரசின் மீள் குடியேற்றத் திட்டத்திற்கு “மெனிக் பாம்” கூடாரங்களில் உள்ளவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.
 
மக்கள் மீள் குடீயேற்றப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியில் மக்களுக்குச் சாதகமானதாக இருக்கும் ஒரு விடயத்தை நான் பார்த்தேன். அங்கு வீடுகள் இன்னும் நின்று கொண்டிருக்கின்றன என்பது தான் அது. முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில் இருந்து தமது சொந்த வீடுகளுக்குத் தாம் திரும்பி இருப்பதை மீளக்குடியமர்த்தப்பட்ட பெரும்பாலானவர்கள் வரவேற்றனர். எப்படி இருந்தாலும் – அவர்களின் நடமாட்ட சுதந்திரம் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

மன்னார் பெருநிலப் பரப்பின் வடக்கே, உயிலங்குளம் வீதியில், சேதமடைந்துள்ள ஓர் ஆலயம்

மன்னார் பெருநிலப் பரப்பின் வடக்கே, உயிலங்குளம் வீதியில், சேதமடைந்துள்ள ஓர் ஆலயம்

“மெனிக் பாம்” முகாம்களில் இருந்து மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் நடமாட்டம் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
 
நாங்கள் துணுக்காய்குச் சென்ற போது அங்கு 1,200 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருந்தன. அவர்களுக்கு 5,000 ரூபா பணமும் சில மாதங்களுக்குத் தேவையான உலர் உணவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் வங்கிக் கணக்கில் மாவட்டச் செயலகத்தால் 20,000 ரூபா பின்னர் வைப்பிலிடப்படும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
 
சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பி இருப்பவர்களுக்கான அரச உதவிகள் பற்றி நாங்கள் மேலும் விசாரித்த போது, எங்களுக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.
 
அவர்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா பண உதவி அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதரகத்தின் [United Nations High Commissioner for Refugees – UNHCR] புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழேயே வழங்கப்படுகிறது. ஆனால் அது சிறிலங்கா அரசின் மீள்குடியமர்வு அமைச்சின் ஊடாகக் கொடுக்கப்படுகிறது. அதே போல – உலக உணவுத் திட்டத்தினால் [World Food Program] வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்கள் சிறிலங்கா அரச மாவட்ட செயலகங்கள் ஊடாகக் கொடுக்கப்படுகின்றது.
 
2001ஆம் ஆண்டு போர் ஓய்வு ஏற்பட்டிருந்த போது நிக்கொட் (மீள் அபிவிருத்திக்கான வடக்கு-கிழக்கு சமூக நிறுவனம்) அமைப்பு மீளக்குடியமர்ந்தவர்களுக்கு வழங்க நிர்ணயித்த 25,000 ரூபா தொகையே 8 வருடங்கள் கழித்து இப்போது மீளக்குடியமர்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆசிய அபிவிருத்தி வங்கி-யினால் நிக்கொட் திட்டம் அப்போது செயற்படுத்தப்பட்டது. [Resettlement incentive by the North East Community Organization for Restoration Development (NECORD) program funded by Asian Development Bank].
 
நாங்கள் சேகரித்த தகவல் படி, மீளக்குடியமர்ந்த மக்களுக்கு மாவட்ட அரச அலுவலகங்கள் மூலம் கொடுக்கப்படும் உதவிகள் அனைத்தும் ஐ.நா. அமைப்புக்கள் மூலமாக அல்லது ஐ.ஓ.எம். [International Organization for Migration – IOM] மூலமாக மட்டுமே வழங்கப்பட்டவையாகும்.
 
இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு மன்னாரில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று எங்களுக்குக் கூறப்பட்டது. அவ்வாறான உதவிகளைச் செய்ய வேண்டுமானால் அதற்கு சிறிலங்கா அரச தலைவரின் வடக்கு புனர்வாழ்வுக்கான விசேட செயற்குழுவின் சிறப்பு அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். எப்படி இருப்பினும் “மெனிக் முகாம்” மண்டலங்களில் சில உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதை நாங்கள் அவதானித்தோம்.
 
தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பாத வரைக்கும் தடுப்பு முகாம்களில் இருந்து தாம் வெளியேறப் போவதில்லை என்று “மெனிக் முகாம்” மண்டலங்கள் 4, 6 மற்றும் 7-இல் நாங்கள் சந்தித்த மக்கள் தெரிவித்தனர். ஏனெனில் தமது உறவினர்களுடன் வாழ்வதற்காக வெளியேறிச் சென்றவர்கள் படும் துன்பங்கள் குறித்த பல செய்திகளை அவர்கள் கேள்விப்படுகின்றனர்.

அடம்பன் பகுதியில் சேதமடைந்துள்ள ஒரு பாடசாலை

அடம்பன் பகுதியில் சேதமடைந்துள்ள ஒரு பாடசாலை

நான் இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் “மெனிக் பாம்” கூடாரங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இந்தத் தடவை, கண்காணிப்புப் பலமாக இருந்த போதும், அந்த மக்கள் எங்களை தீரத்துடன் எதிர்கொண்டார்கள் என்று சொல்ல முடியும். அதிலும் பெரும்பாலும் பெண்கள் தமது கதைகளை எம்முடன் துணிந்து பகிர்ந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
 
அவர்கள் மீண்டும் மீண்டும் எம்மிடம் சொல்வதெல்லாம், தாங்கள் மற்றொரு இடைத்தங்கல் முகாமில் அடைக்கப்படாமல் சொந்த இடங்களுக்குச் சென்று சேரவேண்டும் என்பது தான்.
 
முகாம்களில் இருந்து விசாரணைக்கு என கூட்டிச் செல்லப்பட்டவர்கள் (பெரும்பாலும் இளைய வயதினர்) திரும்பி வரவேயில்லை என்பது தொடர்பாகப் பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவ்வாறு காணாமல் போனவர்களின் பெயர் விபரங்களை அங்கிருந்த பெண்கள் சிலர் எங்களிடம் எழுதிக் கொடுத்ததுடன், சிறிலங்கா அரசு சொல்வதைப் போல – அவர்கள் எல்லோரும் உண்மையிலேயே “புனர்வாழ்வு நிலைய”ங்களில் வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்து அறியுமாறும் எங்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர். அத்தகைய 14 “புனர்வாழ்வு நிலையங்கள்” இருப்பதாகத் தாம் அறிவதாகவும் அவர்கள் கூறினர்.
 
ஆனால், அந்தப் பெண்கள் குழு கொடுத்த பட்டியலை வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம் என்று உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதி ஒருவர் எங்களுக்குச் சொன்னார். அப்படி அதை நாம் எடுத்துச் சென்றால் முகாமை விட்டு வெளியேறும் இடத்திலுள்ள படையினரின் சோதனைச் சாவடியில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அவர் விளக்கினார்.
 
காணாமல் போனவர்கள் மற்றும் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து அனைத்துலக அமைப்புக்களிடம் நான் விசாரித்தேன். கடந்த யூலை மாதத்தில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க [International Commiittee of Red Cross – ICRC] “பிரதிநிதிகள் கூட “மெனிக் பாம்” மற்றும் “புனர்வாழ்வு நிலையங்களுக்கு” செல்ல முடியவில்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது.
 
நாங்கள் மன்னாருக்குச் சென்றபோது அங்கு மிகப் பிரத்தியேகமான பாதுகாப்பு நடைமுறை இருந்ததை நான் உணர்ந்தேன். வடக்கு- கிழக்கில் நான் கடந்த 12 வருடங்களாகப் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இதற்கு முன்னர் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைக் கெடுபிடிகளை நான் எங்கும் பார்த்ததில்லை.
 
நாங்கள் மன்னார் தீவில் எமது தொடர்பாளர்களைச் சென்றடைந்த போது, அங்குள்ள அரச அதிகாரிகள் எவரும் எங்களுடன் பேசமாட்டார்கள் எனக் கூறப்பட்டது. சிறிலங்கா படைகளின் மன்னார் கட்டளை அதிகாரிக்கும் பொது நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட ஒரு பதற்ற நிலையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டிருந்தது.
 
மன்னார் அரச அதிபரால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு (ஐ.நா. உட்பட) அனுப்பி வைக்கப்பட்ட யூலை 28 திகதி இடப்பட்ட அறிக்கை எங்களுக்கும் கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையின் சாரம், “வடக்கில் எந்தவொரு புனர்வாழ்வு மற்றும் உதவிப் பணிகளிலும் ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவனங்களாயினும் அதற்கு (சிறிலங்கா) அரச தலைவரின் “வடக்கு புனர்வாழ்வுக்கான சிறப்புக் குழு”வின் அனுமதியைப் பெற வேண்டும். தற்போது மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்தி, மீள்குடியமர்வு தொடர்பான வேலைத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முறையான அனுமதி பெறப்படவேண்டும். அத்துடன் அனுமதி மற்றும் திட்டம் அது தொடர்பான அறிக்கை என்பன அரச அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்” என்பதாகும்.
 
இந்த விதிமுறையை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமைக்கு சில உள்நோக்கங்கள் இருப்பதாக எமக்குச் சொல்லப்பட்டது. அத்துடன், மன்னாரில் மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கும் படை அதிகாரி – பொது நிர்வாக அதிகாரிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்கள் என்று கூறி அவர்களை எச்சரிக்கையும் செய்துள்ளார்.
 
அரச சார்பற்ற பிரதிநிதிகளை நாம் அங்கு சந்தித்த போது இந்த விளையாட்டு பெரிய பிரச்சினையாக இருந்தது. அவர்கள் முழுமையான தடுமாற்றத்தில் இருந்தார்கள் என்பது தெரிந்தது. அடிப்படை வசதிகள் தேவையாக இருக்கின்ற மீளக்குடியமர்ந்த மக்களுக்குத் தம்மால் எந்த உதவிகளையும் செய்ய முடியாத நிலை இருப்பதை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

மக்களுக்கு உதவி செய்வதற்கான வளங்கள் இருக்கின்ற போதும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குறிப்பாக – உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவி செய்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளன.

எம்மிடம் வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் “நாங்கள் மெனிக் முகாமில் இருந்த போது எங்களுக்கு சப்பிடுவதற்காவது ஏதாவது யாராவது கொடுத்தனர்; ஆனால் இங்கு நாம் பட்டினி கிடக்கிறோம்” என்று சொன்னார். எவ்வளவு காலத்திற்குத்தான் தமது உறவினர்கள் தமக்குச் சாப்பாடு போடுவார்கள் என்றும் ஏன் யாருமே தங்களுக்கு உதவுவதில்லை என்றும் அவர் எங்களிடம் கேள்வி எழுப்பினார்.

அடம்பன் வீதியில், மரத்திற்குக் கீழே, மீள் குடியேறியோரின் ஓரு குடிசை

அடம்பன் வீதியில், மரத்திற்குக் கீழே, மீள் குடியேறியோரின் ஓரு குடிசை

நாங்கள் முசலி (மன்னார் பெருநிலப் பரப்பின் தென்பகுதி) மற்றும் அடம்பன் (மன்னார் பெருநிலப்பரப்பின் வடபகுதி) ஆகிய இடங்களுக்கும் சென்றிருந்தோம். இப்பகுதிகளிலும் மீள்குடியமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
 
ஐ.ஓ.எம். வழங்கியிருந்த தற்காலிக கூடாரங்களைப் போட்டுக் கொண்டு அவர்கள் தமது வாழ்க்கையை ஆரம்பித்திருப்பதைப் பார்க்க முடிந்தது. தடிகளை வெட்டி நட்டு 16 X 12 சதுரஅடிக் கூடாரங்களை அவர்கள் எழுப்பி இருக்கிறார்கள். இந்தத் தற்காலிகக் கூடாரங்களின் கீழே எந்தச் சுவர்களும் கிடையாது. சேலை, பனையோலை, பழைய துணிகள் என்பவற்றைக் கொண்டு மக்கள் மறைப்புக்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
 
முசலி மீள்குடியமர்வு கடந்த ஏப்ரல் மாதமே உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டுவிட்டது. மக்கள் யூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அவர்கள் இந்த தற்காலிக கொட்டகைகளில்தான் வாழ்கிறார்கள். தனியான கழிப்பிட வசதிகளோ மறைவான குளியலறைகளோ இல்லாத காரணத்தால், பாம்பு மற்றும் யானைகளால் தாக்கப்படுகின்ற நிலைமையிலும் இரவு நேரங்களில் காட்டுப்பகுதிக்கு இயற்கைக் கடன் கழிக்கச் செல்ல வேண்டி இருப்பதாகப் பெண்கள் முறையிடுகிறார்கள்.
 
இந்தக் கிராமங்களுக்கு இடையில் – சிறிலங்கா படையினர் குடியிருப்பதற்குக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கள் மட்டுமே அங்கு நிலையான உறுதியான கட்டங்களாக உள்ளன.

சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கு பல மைல் தூரம் நடக்க வேண்டியவர்களாக உள்ளனர். பார்வைக்கு எட்டிய தூரம் வரை எந்த ஒரு மருத்துவமனையையும் எம்மால் பார்க்க முடியவில்லை. நாங்கள் பயணித்த கிராமத்தில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் செல்லக்கூடிய முருங்கன் வைத்தியசாலைக்கே மக்கள் செல்ல வேண்டி இருப்பதாக எமக்குச் சொல்லப்பட்டது.

வீதி மிக மோசமான உள்ளது. பள்ளமும் குழியும் சேறுமாக அந்த வீதி தொடர்கிறது. ஒரு கட்டத்தில் – நாம் எமது முச்சக்கர வாகனத்தை விட்டுவிட்டு நடந்தே சென்றோம்.  ஏப்ரல் மாதத்தில் மாதிரி மீள்குடியமர்வு செவிரியாபுரத்தில் தொடங்கப்பட்டபோதே இந்த வீதிப் புனரமைப்பும் தொடங்கப்பட்டது.
 
நாம் மன்னாருக்குத் திரும்பி வரும் வழியில், கள்ளிமோட்டை முகாமில் வைத்து இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அங்கே முகாமுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்துகளுடன் தொடர்புடைய சிலருடன் பேசும் போது நாம் கேள்விப்பட்டவை அச்சுறுத்தலானவையாக இருந்தன. பொது மக்கள் உடையில் இருக்கும் தமிழ் பேசும் நபர்களே மக்களை சோதனை செய்து வருகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம்.
 
அந்தப் பேரூந்துகளிலும் பார ஊர்திகளிலும் ஐ.ஓ.எம். [International Organization for Migration – IOM] சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதால் அந்த அமைப்பைச் சேர்ந்த யாராவது அங்கு இருக்கின்றார்களா என விசாரித்தோம். ஒரு நமுட்டுச் சிரிப்புடன் “இல்லை” என்ற பதில் வந்தது. பின்னர் இளம் பெண் ஒருவர் பேரூந்துக்குத் திரும்பச் செல்ல முடியாது தடுக்கப்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம். ஏனையவர்கள், அவரையும் தங்களுடன் சேர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
 
ஒரு இளைஞர் எம்மிடம் வந்து “ஐ.ஓ.எம். அதிகாரிகள் ஏன் இங்கு இல்லை என்பது இப்போது தெரிந்திருக்குமே!” என்று கூறிவிட்டுச் சென்றார். இந்தக் கதையை நான் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதி ஒருவரிடம் விபரித்த போது – “மீளக்குடியமர அனுப்பப்படும் மக்கள் பல்வேறு நிலையங்களில் மீண்டும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அந்தச் சமயங்களில் அவர்களில் சிலர் கடத்தப்படுகிறார்கள் அல்லது கைது செய்யப்படுகிறார்கள்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.
 
நிறையக் குடும்பங்கள் தமது செயல்திறன் நிறைந்த ஆண் அல்லது பெண் உறுப்பினரை போரின் போது இழந்து விட்டிருக்கின்றன; அல்லது, அவர்கள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பல குடும்பங்கள் பெண்கள், குழந்தைகள், வயது மூத்தவர்கள் என்ற வட்டத்திற்குள் மட்டும் சுருங்கி இருப்பதை நாங்கள் நேரில் கண்டோம்.
 
எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக – விரும்பத்தக்கதாக – மீளக்குடியமரும் இந்த மக்களின் நிலை இருக்கவில்லை. எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி  – முறையான குடியிருப்பு இடங்கள், மருத்துவமனைகள், போக்குவரத்து வசதிகள், பாடசாலைகள், குடி தண்ணீர் ஏற்பாடுகள், எல்லாவற்றுக்கும் மேலாக வருமானத்திற்கான வாய்ப்புகள், அதற்கும் மேலாக நடமாட்டச் சுதந்திரம் இன்றி இந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவது குறித்து எப்படி யாரும் மகிழ்ச்சி அடைய முடியும்?

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.