இலங்கை மீது அழுத்தம் கொடுக்க மன்மோகன் சிங்கை வலியுறுத்துங்கள்: ஒபாமாவுக்கு மன்னிப்புச் சபை கடிதம்

தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை 6 மாதங்களிற்குள் விடுவிப்பதாக இலங்கை அரசு தனக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமாறு இந்தியா அந்த நாட்டினை அழுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்துமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் அனைத்துலக மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Amnestyinternationalஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நாளை அவர் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசுகிறார்.

இந்தச் சந்திப்பில் தீவிரவாதம், காலநிலை மாற்றம், பொருளாதார மந்த நிலை மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் என்பன குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாட உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் வாசிங்டன் வந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவரிடம் மனித உரிமைகள் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மன்னிப்புச் சபையின் சார்பில் அதன் அமெரிக்கக் கிளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லாறி கொக்ஸ் ஒபாமாவுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்தக் கடிதத்திலேயே அவர் இலங்கை விவகாரம் குறித்தும் வலியுறுத்தி உள்ளார்.

போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை ஆறு மாதங்களுக்குள் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிப்பதாக இலங்கை அரசு இந்தியாவிற்கு உறுதி அளித்திருந்தது.

ஆனால், ஆறு மாதங்கள் முடிவடைந்து விட்டன. எனினும் பல பத்தாயிரக் கணக்கான மக்கள் இன்னும் ராணுவத்தினரால் நடத்தப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தனது உறுதிமொழியை நிறைவேற்றும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நீங்கள் (ஒபாமா) கேட்க வேண்டும்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பட்டிருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் சிறுவர்கள் உட்பட 12,000க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கும், சட்ட ஆலோசனைகள் அவர்கள் பெறுவதற்கும் கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த மனித உரிமை விகாரங்கள் குறித்து இந்தியாவிடம் கருத்துக் கூறுவதற்குக் கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிடாதீர்கள் என்று அதிபராகிய உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் எனத் தனது கடிதத்தில் லாறி கொக்ஸ் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.