முக்கியமெனக் குறித்த 2 விடயங்களில் காத்திரமான கலந்துரையாடல்தானும் இன்றி முடிவுற்ற சூரிச் கூட்டம்!

சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரான சூரிச்சின் ஒதுக்குப் புறமான ஓர் இடத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்றைத் தோற்றுவிப் பதற்கான கூட்டம் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டிருந்த இரண்டு முக்கியவிடயங்கள் குறித்து காத்திரமான கலந்துரையாடல் தானும் இன்றி முடிவுற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

Murugian_MKM_1தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான கூட்டம் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடுவதே நிகழ்ச்சிநிரலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்ததாம். அதற்கென அரைநாள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அது குறித்து காத்திரமான கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் தெரிவித்தார் என்று தகவல்கள் கொழும்பில் கசிந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பே இன்னும் வெளிவராத நிலையில் அது குறித்து இங்கு விவாதிப்பதால் பயனில்லை என்று ஒரு சாராரும் கூட்டத்தின் பிரதான நோக்கம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு என்று தெரிவித்து விட்டு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய்வது அர்த்தமற்றது என்று ஆட்சேபம் தெரிவித்து அடுத்த சாராரும் இதனைப் புறக்கணித்தனர்.

ஆராயப்பட குறிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் விடயம் தேவையற்றது எனக்கூறி, அந்த விடயம் நிகழ்ச்சிநிரலில் இருந்து நீக்கப்பட்டது. கிழித்து எறியப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவித்தது. அரசியலுக்கு அப்பால், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து ஆராய்ந்து நீதியான, ஒரு முடிவுக்கு வந்து அது குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என்பது கூட்டத்தில் இரண்டாவது முக்கிய நிகழ்ச்சியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும் அது குறித்த கலந்துரையாடல் தொடங்கிய சிறிது நேரத்தில், அகதி முகாம்களில் உள்ளவர்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரசு அனுமதி அளித்திருப்பதும், மற்றும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் பஸில் ராஜபக்ஷ வெளியிட்ட அறிவிப்புக் குறித்து அமைச்சர் பெ.சந்திரசேகரன் கூட்டத்தில் தெரியப்படுத்தினார். அத்தோடு தமிழ்மக்களின் குடியேற்றம் குறித்த விடயமும் தொப்பென கைவிடப்பட்டதாக நேற்று இரவு இங்கு கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பத்மநாபா அணியில் அங்கம் வகித்த எஸ்.வரதகுமார் என்பவரே ஏற்பாடு செய்திருந்தார். அவர் தமிழர் தகவல் மையம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனக் கலவரத்தைத் தொடர்ந்து வரதகுமார் இந்தியா சென்று காலத்துக்குக் காலம் அந்நாட்டு அரசுகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார். இதேவேளை, சூரிச் கூட்டத்தில் பங்கு பற்றிய ஒவ்வொருவருக்கும் பயண மற்றும் செலவுக்கென 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 26 பேர் பங்கு பற்றினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம், பி.சந்திரசேகரன், பேரியல் அஸ்ரப், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், மனோகணேசன், த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி, ரி.சிறிதரன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அவற்றில் அடங்குவர்.

இதற்கிடையே கலந்துரையாடலில் பங்கு பற்றிய அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தம்மால் நான்கு “ஸ்ரார்” ஹோட்டலில் தங்க முடியாது என்று தெரிவித்து சூரிச் நகருக்குச் சென்று ஐந்து “ஸ்ரார்” ஹோட்டலிலே தங்கினார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த மேலதிக செலவையும் கூட்டத்தை நடத்திய ஏற்பாட்டாளர்களே வழங்கினர்.

இந்தளவுக்கு பெருந்தொகைப்பணம் தமிழர் தகவல் மையத்துக்கு எங்கிருந்து கிடைத்தது  என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டம் இந்தியாவின் அனுசரணையுடனேயே நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகைய கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் முன்னின்று செயற்பட்டதாகவும் இந்தியா முழு விரும்பம் இன்றியே அதற்கு ஒத்துழைப்பு நல்கியதாகவும் மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.