யாருக்கு வெட்கமில்லை மனோகணேசனுக்கா பொன்சேக்காவிற்கா – விமல் வீரவன்ச

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவினை தெரிவிக்கும் வகையிலும், தேர்தலுக்கு ஆதரவினை திரட்டும் வகையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக இணைந்து இன்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியுள்ளனர்.

vimalஇந்த மாநாட்டின் போது, பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவேண்டும் எனவும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும் எனவும் கோஷமிட்டதுடன், பயங்கரவாதத்தை தோற்கடித்த முன்னாள் இராணுவத் தளபதியை தெய்வத்திற்கு நிகாராக மதித்து வந்த ஆளும் கட்சியின் உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச உட்பட பலர் இன்று அவரை ஒரு கேவலமான மனிதனாக சித்தரித்தனர்.
 
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, இலங்கை சோஷலிக் கட்சியைச் சேர்ந்த டியூ குணசேகர, மக்கள் ஐக்கிய முன்னணியின் திணேஸ் குணவர்தன, மலையக மக்கள் முன்னணியின் சார்பில் அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், மற்றும் அமைச்சர்களான மிலிந்த மொறகொட, மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவை வெற்றிபெறச் செய்வதாகவும், இதற்கு நாட்டு மக்கள் தமக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
இந்த செய்தியாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 2 வருடங்கள் எஞ்சியுள்ள நிலையில் மக்களின் ஆணைக்கேற்ப மக்களின் தீர்மானமொன்றை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி வழங்கிய இந்த சந்தர்ப்பம் இலங்iயில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதற்கு ஒரு சான்று எனவும் குறிப்பிட்டார்.
 
அத்துடன் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த சவாலுக்கு அமைவாகவே முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
அதுமாத்திரமின்றி இதுவரைகாலமும் இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களின் போது இலங்கையில் அமைதியான சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவித்த அவர், தற்போதைய தேர்தலோ அமைதியான சூழலில் நடைபெறவுள்ளதாகவும், இதற்கு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷவே காரணம் எனவும் கூறினார்.
 
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேக்கா போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அவர், ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவையின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவரை மஹிந்த வரலாறு காணாத அளவில் பாரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கொள்வார் எனவும் அவரின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதாக தமிழ் மக்கள் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில், சமாதான ஓப்பந்தம் என்ற போர்வையில் இந்த நாட்டின் மூன்றில் இரண்டு பங்கினை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியவர் ரணில் விக்கிரமசிங்க  என்றும் அவர் யுத்தத்துக்கு சார்பானவரா?  யுத்தத்துக்கு குழிதோண்டிய தலைவர் எனவும் வர்ணித்தார்.
 
பிரபாகரனுக்கு மகுடத்தை சூட்டிய இவ்வாறான தேசத்துரோகியால்  சரத் பொன்சேக்காவுடன் ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்ய முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
அத்துடன் பொங்குதழிழ் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமிழீழம் மலர பிரபாகரனுடன் சேர்ந்து பாடுபட்ட பிரபாகரனின் ஆதரவளரான மனோ கணேசனும் சரத் பொன்சேக்காவும் எவ்வாறு ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்யப்போகின்றார்கள் என்று அவர் கேள்வி எழுப்பிய அவர், இதில் யாருக்கு வெட்கமில்லை மனோகணேசனுக்கா பொன்சேக்காவிற்கா? என்றும் கேட்டார்
 
இங்கு மேலும் கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச விக்கிரமசிங்க, மனோ கணேசன், மங்கள, ஹக்கீம் போன்ற தேசத்துரோக சக்திகள் காணப்படும் இந்த துரோகக்கூட்டணிக்குள்  தேசத்தின் வீரராக நாட்டு மக்களால் போற்றப்பட்ட ஒருவர் இந்த தேசத்துரோக வலையில்   சிக்கியுள்ளமை தொடர்பில் தான் கவலையடைவதாகவும்,  வேதனையடைவதாகவும் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.