4 நிபந்தனைகளுக்கு முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேக இணக்கம்

அகதி முகாம்களிலுள்ள மக்களை விரைவில் மீள்குடியேற்றி அவர்களுக்கான ஒரு சிறந்த அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுத்தல் உட்பட 4 நிபந்தனைகளுக்கு முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேக்க இணங்கியுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

generalஇதனால் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற குழுத்தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க குறிப்பிட்டார்.
 
இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வேட்பாளர் அரசாங்கத்திற்கு எதிரான பொது வேட்பாளரே தவிர அவர், ஐக்கிய தேசியக் கட்சியையோ, ஜே.வி.பியையோ சார்ந்தவர் அல்ல எனவும் குறிப்பிட்டார்.
 
இவர் எந்த கட்சியும் சாராத பொது வேட்பாளர் எனவும் அவர் குறிப்பிட்டார். இவரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பொதுவேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.
இன்று இடம்பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.டி லால்காந்த, விஜித ஹேரத், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
இந்த செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர், 2005 ம் ஆண்டு தாம் இந்த அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமையினால் இன்று இந்த நாட்டில் ஜனாநாயகம் சீரழிந்துள்ளதுடன், ஊழல் மோசடி என்பன புற்று நோய் போல் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
பிரபாகரன் என்ற ஏகாதிபத்தியத்தை இல்லாதொழிக்க 2005 ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்த தாங்கள், மஹிந்த ராஜபக்ஷவின் ஜனநாயக ஏகாதிபத்தியத்தை இல்லாதொழிக்க இன்று சரத்பொன்சேக்கவுடன் இணைந்துள்ளதாகவும் கூறினார்.
 
அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளரின் சின்னம் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும், விரைவில் ஒரு இராசியான சின்னம் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.