தமிழ் மக்களினதும் போராளிகளினதும் பிணங்களின் மீது நடக்க முற்படும் கூட்டம்….?

கடந்தவாரம் இப்பத்தியிலே கிழக்கிலும் பின்பு வடக்கிலும் குறிப்பாக வன்னியிலும் பேரழிவை ஏற்படுத்திய அரசியல் இராணுவச் சூறாவளி இப்போது தெற்கு நோக்கி நகர்ந்து வந்துள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. நேரடியான இராணுவச் சூறாவளியா இல்லாவிடினும் அரசியல் சூறாவளியானது இராணுவத் தன்மை கலந்ததாக கொழும்பில் மையம் கொண்டுள்ளது.

may14thஅது உடனடியாக அகன்று செல்லும் என எதிர்வு கூறக் கூடியவாறு இல்லை என்பதையே இடம்பெற்று வரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

வடக்குக் கிழக்குப் போரில் ஒரே முகமாக முனைப்புக் காட்டி நின்ற பேரினவாத முதலாளித்துவ ஆளும்வர்க்க சக்திகளிடையே அரசியல் தேர்தல் போர் ஆரம்பித்திருக்கிறது. இது வெளிப்பார்வைக்குத் திடீரெனத் தோற்றம் பெற்ற நிகழ்வுகள் போன்று தோன்றலாம். ஆனால் இதற்கான உள்ளார்ந்த முரண்பாடுகள் போர்க் காலத்திலேயே உருவாக ஆரம்பித்திருந்தன. அவற்றின் வளர்ச்சியாகவே தற்போதைய சம்பவங்கள் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளது. இவை எதுவரை செல்லும் என எவரும் ஆரூடம் கூற முடியாதவாறு சிக்கல்கள் மிகுந்ததாக இருந்து வருகின்றன. புலிகள் இயக்கத்தைத் தோற்கடிக்கவும் அதன் தலைமையை அழிக்கவும் போர் உத்திகள் வகுத்த அதே சக்திகளிடையே ஒருவரை ஒருவர் எவ்வாறு ஓரம்கட்டலாம் என அரசியல் வியூகங்கள் அமைத்து வருகின்ற விநோத வேடிக்கைகளை கொழும்பு அரசியல் அரங்கில் காண முடிகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பதவிக் காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும்போதே ஏன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்கூட்டியே முன்வந்தார் என்ற கேள்வி அரசியல் ஆய்வாளர்களினால் சக்கை போட்டு ஆராயப்பட்டது. அதில் கிடைத்த பிரதான முடிவு முப்பது வருடப் போரை 5/19 இல் வெற்றிக்குக் கொண்டு வந்து புலிகள் இயக்கத்தை அழித்த வெற்றிக் கொண்டாட்ட மகிழ்ச்சி உணர்வுகளை மக்கள் மத்தியில் அமோக வாக்குகளாக மாற்றிக்கொள்வதற்கே ஜனாதிபதித் தேர்தலாகும். இத்தேர்தலை உரிய காலமான 2011 ஆம் ஆண்டு நவம்பர் வரை வைத்திருப்பது நடத்துவதென்பது ஆளும் தரப்பிற்குப் பாதகமாகவே அமைந்துவிடும் என்ற உள்ளார்ந்த அச்சம் இருந்து வந்ததன் காரணமாகவே போர்வெற்றி அலைகளிடையே தேர்தல் வெற்றிக்கணக்குப் பார்க்கப்பட்டது.

போர் முடிவடைந்து ஆறுமாதங்கள் வருமுன்னமே தெற்கில் பொருளாதார நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கோரிக்கைகளும் மேற்கிளம்பி வீதிகளில் வழிந்தோட ஆரம்பித்துவிட்டன. தொழிலாளர்கள், மாணவர்கள் கொழும்பு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் மூலம் தத்தமது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலைமையானது அடுத்த இரண்டு வருடங்களில் எத்தகை வளர்ச்சியைக் காணும் என்பதால் அதைக் கணக்கிட்டே முன் கூட்டியே ஜனாதிபதித் தேர்தலுக்கு முடிவாக்கப்பட்டது.

இவ்வாறான முடிவு இலகுவாக இருக்கும் என்ற நிலையிலே கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போன்று முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இராணுவச் சீருடையைக் கழற்ற முன்பே அரசியலுக்கு வரும் சமிக்ஞைகளைகாட்டத் தொடங்கிவிட்டார். அவரது அரசியல் பிரவேசத்திற்கு என்ன அவசியம் யார் காரணம் அதற்கான மறைபுலச் சூழல் எத்தகையது என்பது ஆராயப்பட வேண்டியதாகும். போர் முடிவுற்ற கையோடு அவசர அவசரமாக அவர் வகித்து வந்த இராணுவத் தளபதிப் பதவியில் இருந்து இறக்கப்பட்டு பாதுகாப்புப் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருப்பது அவருக்கு கௌரவக் குறைவாகவும் மன உளைச்சலாகவும் அமைந்திருந்தது. தான் பழிவாங்கப்பட்டதாகவும் வெவ்வேறு வழிகளில் அவமதிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மனக்குமுறல் கொண்டிருந்ததாகவே ஆங்காங்கே வெளிவந்த கசிவுச் செய்திகள் சுட்டிக்காட்டின. ஆதலால் அவர் தாமாகவே முன்வந்து தனது பதவியை இவ்வார முற்பகுதியில் இராஜிநாமா செய்தும் கொண்டார். அவரது பிரியாவிடை நிகழ்வுகள் ஏனோதானோ என்றே இடம்பெற்றன. இவையாவும் ஆளும் உச்ச நிலையாளர்களுக்கும் சரத் பொன்சேகாவிற்குமான இடைவெளியை அதிகரிக்க வைத்த நிகழ்வுகளாகும்.

கடந்த மூன்று வருடங்களாக மிக உச்சமாக முன்னெடுக்கப்பட்டு வந்த வடக்கு, கிழக்குப் போரிலே சரத் பொன்சேகா பிரதம இராணுவத் தளபதியாக இருந்துவந்தவர். இராணுவமும் ஏனைய படையணிகளின் போர் உத்திகளிலும் போர்முனைத் தாக்குதலுக்கும் வழிவகுத்தவர்களில் சரத் பொன்சேகாவிற்கு முதன்மையிடம் உண்டு. அத்தகைய போரே இறுதிக்கட்டங்களில் பேரவலங்களை உருவாக்கி மிகப் பாரிய உயிரழிவுகளை ஏற்படுத்தியது. தமிழ்மக்கள் வரலாறு காணாத உயிர் உடைமை அழிவுகளையும் முட்கம்பி முகாம்களையும் அனுபவிக்க வேண்டியதாயிற்று. இத்தனைக்கும் தலைமை தாங்கிய ஒரு அதியுயர் இராணுவத் தளபதி இப்போது திடீரென நாடு தழுவியதும் அதி உச்ச அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் பொது வேட்பாளராக நிற்பதற்கு முன் வந்திருப்பது ஆச்சரியமாகிறது.

இத்தகைய முடிவை சரத் பொன்சேகா தனிப்பட்ட அதிகார ஆசையால் எடுத்திருந்தால் அது ஒருவருக்குரிய சொந்தத் தெரிவு என்ற அளவில் வைத்துக்கொள்ளலாம். தலை நிறைந்த இராணுவச் சிந்தனையும் செயலும் கொண்ட ஒருவரை ஜனநாயகம் பேசும் ஐக்கிய தேசியக் கட்சியும் சோஷலிசம் கதைக்கும் ஜே.வி.பி.யும் பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கும் கீழ்த்தரமான அரசியல் இழிவை எங்கே கொண்டு சென்று முட்டிக்கொள்வது. ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த பதினாறு கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணிக்கு சரத் பொன்சேகாவைப் பொது வேட்பாளராக்கும் முயற்சிகள் ஏற்கனவே இடம்பெற்று வருபவையாகும். இந்த முன்னணியில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கரம் கோர்த்து நிற்கின்றன. ஆரம்பத்தில் உச்சச்சுதியில் மனோ கணேசன் சரத் பொன்சேகாவை தங்கள் பொது வேட்பாளராக ஏற்கமாட்டோம் என்றும் அப்படியானால் தாம் ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலகி விடுவோம் என்றும் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டார். ஆனால், சில நாட்களின் பின் சரத் பொன்சேகாவின் பிரதிநிதிகளுடன் பேசி சில நிபந்தனைகள் முன்வைத்திருப்பதாக அறிக்கை வெளிவந்தது.

இப்போது சரத் பொன்சேகா தேசிய ஐக்கிய முன்னணியின் பொது வேட்பாளராக நிற்கும் சந்தர்ப்பத்தில் அவரை ஆதரித்து நிற்பதற்கான நியாயங்களை வடிவமைப்பதில் மனோ கணேசன் ஈடுபட்டு வருகிறார். அவரது வழமையான பிரசாரத் தந்திரம் ஏற்கனவே யாவரும் அறிந்ததேயாகும். பொதுத் தேர்தலுக்கு முன்பு பேரினவாதிகளை எதிர்ப்போம் அவர்களுடன் கூட்டில்லை எனச் சுவரொட்டிப் பிரசாரம் செய்த அதே மனோ கணேசன் அதிக நாட்கள் செல்ல முன்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் பணப்பேரம் பேசிப்பட்டியலில் இடம் வாங்கித் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். பச்சை, சிகப்பு, கறுப்புக் கலர்களில் மேல் சட்டை அணிந்து ஒருமுறை மேல் மாகாணம் என்பார். மறுமுறை மலையகம் என்பார். இந்த யூ.என்.பி.யுடன் முறிக்கிறேன் என்பார் இது போன்ற பல அரசியல் ஸ்ரண்டுகள் கரணங்கள் போட்டுக்கொள்வார். இவை யாவற்றையும் மறைக்க ஒரு ஆர்ப்பாட்டம், தொடர் அறிக்கைகள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி நிலைப்பாடே பற்றியிருக்கக் கூடிய கயிறாகும். இவர் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றால் என்ற காரணம் கூறி நிற்பார் என்பதை அறிய மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றனர். அவ்வாறே முஸ்லிம் காங்கிரஸும் ரவூப் ஹக்கீமும் என்ன முடிவு செய்யப் போகிறார்கள் என்பதை முஸ்லிம் மக்களும் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படையில் இலங்கையின் நீண்ட பாரம்பரியம் மிக்க பேரினவாத முதலாளித்துவக் கட்சி என்பதை அரசியல் மலடர்கள் கண்டுகொள்வதில்லை. இத்தகையவர்கள் தான் அதன் முகவர்களாக தமிழ், முஸ்லிம் மலையக மக்கள் மத்தியில் நின்று பச்சைக்கொடி தூக்கி வந்திருக்கிறார்கள். இன்றும் ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் அதன் தொடர்ச்சியே இடம்பெறுகிறது. மறுபுறத்திலே அடுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேரினவாத முதலாளித்துவக் கட்சியாக நீடித்து வந்த வரலாற்றுப் போக்கைக் காணச் சில சலுகை அரசியல் நடத்தும் தமிழ், முஸ்லிம் மலையகத் தலைமைகள் குருட்டுத் தனமாகக் காண்பதில்லை.

ஆதலால் பேரினவாத முதலாளித்துவ சக்திகளிடையே நல்ல பேரினவாதிகள், கெட்ட பேரினவாதிகள் என யாரும் கிடையாது. அல்லது இவர்களை விட அவர்கள் பரவாயில்லை. அன்றி அவர்களை விட இவர்கள் பரவாயில்லை என்பதெல்லாம் சந்தர்ப்பவாத சுயநல அரசியலே அன்றி மக்களுக்கான அரசியல் அல்ல. இவற்றை எல்லாம் மக்கள் எவராகவும் எப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசியல் அறிவுத்தனத்துடனும் விவேகத்துடனும் நடந்துகொள்ளாதவரை இவர்களது உள்ளார்ந்தங்களையும் முகமூடிகளையும் கண்டுகொள்ள முடியாது.

மகிந்த ராஜபக்ஷ, ஜே.ஆர்.,பிரேமதாஸ, சந்திரிகா , ரணில் வழியில் வந்த பேரினவாத முதலாளித்துவவாதி என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. சரத் பொன்சேகா இராணுவ வழியில் வந்த பேரினவாதியாவார். அவர் இராணுவ உடையில் இருந்த போதே தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மோசமான பேரினவாதக் கருத்துகளை வெளியிட்டவர். அதனால் பல தரப்புகளிடமிருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. நடந்து முடிந்த போரின்போது வன்னியில் மக்கள் பட்ட பேரவலத் துன்பங்களும் இழப்புகளும் தொடரும் அவலங்களுக்கும் சரத் பொன்சேகா தான் பொறுப்பில்லை எனச் சத்தியம் செய்வாரா?

இத்தகைய ஒருவரைத் தத்தமது பொது வேட்பாளராக தத்தெடுத்துக்கொள்ள ஐக்கிய தேசிய முன்னணியும் ஜே.வி.பி.யும் ஒரே நிலைப்பாட்டில் நிற்பது இலங்கை அரசியலில் பேரினவாதமும் போர் வெறிச் சிந்தனையும் கைகோர்த்து நிற்பதையே எடுத்துக்காட்டுகிறது. இங்கே ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகம் பேசுகிறது. ஜே.வி.பி.சோஷலிசம் பற்றிப் பேசி வந்தது. அவை இரண்டும் சீருடை தரித்து வந்தவரின் இராணுவச் சிந்தனை கலந்த பேரினவாதத்துடன் சங்கமமாகின்றன. அப்பட்டமான இந்த அரசியல் வறுமைக்கும் பேரினவாத வெளிப்படைத் தன்மைக்கும் பிற்பாடும் ஐ.தே.கட்சியையும் ஜே.வி.பி.யையும் சுயமரியாதை உடைய எந்தவொரு கட்சியும் தமிழ் முஸ்லிம் மலையக மக்களும் நம்பவோ ஆதரிக்கவோ முடியுமா?

இது நிற்க. இன்று ஜனாதிபதித் தேர்தல் பற்றி எழுந்துள்ள போட்டி தனியே உள்நாட்டு அரசியல் அதிகார அரங்கில் மட்டும் விவாதிக்கப்பட்டுக் காய்கள் நகர்த்தும் விவகாரம் மட்டுமல்ல. கடந்த முப்பது வருட தேசிய இனப்பிரச்சினையிலும் அதன் காரணமான கொடிய போரிலும் அமெரிக்க, இந்திய மேலாதிக்க சக்திகள் மேற்கொண்டு வந்த தலையீடுகளின் தொடர்ச்சியையும் காண முடிகிறது. இந்தியா வடக்கு, கிழக்கு யுத்தத்தின் மகிந்த ஆட்சிக்கு சக்திமிக்க பக்க பலமாக இருந்து வந்தது. 5/19 வெற்றிக்கும் புலிகளின் தோல்விக்குப்பின் அதன் முழுப்பலாபலன்களையும் அரசியல் பொருளாதார இராணுவ அரங்குகளில் அனுபவிக்கவே இந்தியா திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. அதனால், அடுத்த ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ நீடிப்பதையே இந்தியா விரும்புகிறது. ஏனெனில், இலங்கை மீதான ஆதிக்கப் பிடிப் போட்டியில் இன்று இந்தியா அதிகதூரம் முன்னேறி நிற்கிறது. அமெரிக்க மேற்குலகம் எடுத்துவந்த ஒவ்வொன்றும் பின்தள்ளப்பட்டுவிட்டது.

இந்நிலையில், தனது நம்பிக்கைக்கு உரிய விசுவாசிகளான ஐக்கிய தேசியக் கட்சியை எப்படியும் அதிகாரத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் அமெரிக்க மேற்குலக சக்திகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. அதனை சாதிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்புல ஆலோசனைகளும் தேவையான வளங்களும் வழங்கி வருகின்றன. அதன் வெளிப்பாடே ஐக்கிய தேசிய முன்னணியின் வழிகாட்டலிலான தேசிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணிக் கட்சிகளின் தோற்றமாகும். மேலும், சரத் பொன்சேகா அமெரிக்காவில் “கிறீன்கார்ட் என்ற வதிவிட விசா பெற்ற ஒருவராவார். அது மட்டுமன்றி அமெரிக்க ஆளும் வர்க்க சக்திகள் சரத் பொன்சேகா மீது போர்க்குற்ற விசாரணை என்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டென்றும் பெரும் குரல்வைத்துப் பிரசாரம் நடத்திவந்தன. ஆனால், சரத் பொன்சேகாவின் அமெரிக்கப் பயணத்தின் போது அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. எல்லா விடயங்களிலும் கேள்வி எழுப்பி வந்த நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட “இன்ரசிற்றிப் பிரஸ் என்னும் ஊடகம் இவ்விடயத்தில் கொதித்தெழுந்தது போன்று காட்டிக்கொண்ட போதிலும் இறுதியில் மிகமிக அடக்கி வாசித்துக்கொண்டது. அமெரிக்க ஆளும் வர்க்க நிர்வாகிகள் சரத் பொன்சேகா மீது எவ்வித விசாரணையும் இன்றி முதுகில் தட்டிக்கொடுத்து சென்றுவா வென்றுவா என அனுப்பிவைத்த வேடிக்கையைத்தான் நமது தமிழ் ஊடக ஆய்வுக்காரர்கள் பரிதாபத்தோடு பார்த்து நின்றனர்.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஒரு தரப்பாகவும் ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகா ஜே.வி.பி.மறுதரப்பாகவும் காணப்படுகின்றன. இந்நிலை சில வேளைகளில் வாக்குகள் பிரிக்கும் காய்நகர்த்தல்களால் மூன்று தரப்பான போட்டியாகவும் மாறிக்கொள்ள வாய்ப்புண்டு.

எவ்வாறாயினும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் பின்னால் இந்தியா உறுதியாகவே உள்ளது. அதற்கு குறையாத உறுதியுடன் அமெரிக்க மேற்குலகம் ரணில் சரத் பொன்சேகாவிற்குப் பின்னால் இருந்து வருகிறது. இதன்மூலம் கடந்த முப்பது வருடப் போரின் போதெல்லாம் இருந்து வந்த இவ்விரு மேலாதிக்க சக்திகளினதும் ஆதிக்கப் போட்டி இப்போதும் தொடரவே செய்கிறது. அந்தப் போட்டியானது தெற்கில் கிளம்பியுள்ள அரசியல் சூறாவளிக்கு மேலும் வேகத்தைக் கொடுப்பதாகவே அமைந்து காணப்படுகின்றன.

இவற்றிடையே சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய முன்னணியும் ஜே.வி.பி.யும் பொது வேட்பாளராக ஏற்குமிடத்து தமிழ், முஸ்லிம் வாக்குகள் எவ்வாறு அமையும் என்ற அச்ச உணர்வும் அவ்வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தமிழ், முஸ்லிம் மலையக மக்களைத் தமது பக்கம் இழுக்க ஜனாதிபதி புதிய புதிய திரைகள் முன்னால் தோன்றியும் சில விடயங்களைச் செய்தும் வருகிறார். மீள்குடியேற்றம் ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. யாழ், வவுனியா, கொழும்பு போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டு பயண அனுமதி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஏதோ வாக்குகளுக்காகவேனும் செய்யப்படுபவை மக்களுக்கு நன்மைகளாக வருவதை யாரும் நிராகரிக்க முடியாது. அவை வெறும் சலுகைகள் மட்டுமே அன்றி உரிமைகள் அல்லவென்பது தான் அடிப்படையில் நோக்கப்பட வேண்டியவையாகும்.

இவையொருபுறமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரு தரப்பிலிருந்தும் வலைவீச்சு நடைபெற்றுவருகிறது. இரு தரப்பிற்கும் சைகையும் நெருக்கமும் காட்டுவதில் தமிழ்க் கூட்டமைப்பு பா.உறுப்பினர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அண்மையில் வவுனியா முகாம்களுக்கும் மல்லாவி மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் சென்று வர அரசாங்கம் அனுமதித்தது. அத்துடன், போக்குவரத்து வசதிகளும் கூட்டமைப்பு பா.உறுப்பினர்களுக்கு அளித்தது. அங்கு சென்று வந்தவர்கள் எல்லாம் சிறப்பாக இருப்பதாகக் கூறினர். மக்கள் சந்தோசமாக இருப்பதாகக் கூறித் தமது திருப்தியையும் தெரிவித்துக் கொண்டனர். நமது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வகையிலும் தமிழ் நாட்டுப் பாராளுமன்றக் குழுவினருக்கு குறைந்தவர்கள் அல்லர் என்பதை தமது அறிக்கைகளில் வெளிப்படுத்தினர். அதற்கு மேலால் ஒரு கூட்டமைப்பு பா. உறுப்பினர் ஜனாதிபதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து அலரிமாளிகையில் கட்டித் தழுவிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.

இதேவேளை, சுவிற்ஸர்லாந்து நகரான சூரிச்சில் இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் கூட்டமொன்று கூட்டப்பட்டு அதில் முஸ்லிம் கட்சிகளும் கலந்துகொள்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் கூட்டம் எதற்காக என்று கூறும் விபரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. இதுவரை அறிந்தவற்றிலிருந்து அமெரிக்க மேற்குலகச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிக்கச் செய்யும் முயற்சி என்றே பேசிக் கொள்ளப்படுகிறது. இக்கூட்டம் முதலில் லண்டனில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த போதும் பின்பு வெளிப்படையான மேற்கின் சாயம் விழுந்துவிடும் என்பதற்காகவே சூரிச்சிற்கு மாற்றப்பட்டது என்றும் 10 ஆயிரம் பவுண்ஸ் செலவில் இவ் ஐக்கிய கூட்டம் நடத்தப்படுகிறது என்றும் அறியமுடிகிறது. தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டம் உருவாக்கும் கூட்டமா? போலித்தனமான ஐக்கியத்தைக் காட்டி தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறும் கூட்டமா? மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு வரவிடாது சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க வைக்கும் கூட்டமா? அல்லது இனிமேல் இந்தியா பக்கம் சாய வேண்டாம். எங்களது அதாவது மேற்கின் விசுவாசிகளாகச் செயற்படுங்கள் என்பதற்கான கூட்டமா? யாவற்றுக்கும் ஒரு சில நாட்கள் பொறுத்திருப்போம். உண்மைகள் வெளிவரவே செய்யும்.

எவ்வாறாயினும், தமிழ் மக்களினதும் போராளிகளினதும் பிணங்களின் மீதும் மூன்று இலட்சம் மக்களின் அவலங்கள் மீதும் நடந்துகொண்டே பாராளுமன்றத்திற்கும் அதற்கு அப்பாலான பதவிகளுக்கும் தமிழ்க் கூட்டமைப்பு பயணிக்க நிற்கிறது. அதற்காக நரகத்திற்குச் சென்று திரும்பவும் தயாராகவே உள்ளனர். இதற்கு வயது முதிர்ந்த தலைவர்கள் தேவையில்லை என்றும் படித்த இளம் இரத்தங்கள் பாய்ச்ச வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. தமிழர் ஆதிக்க அரசியலைத் தொடர புதிய முகம்கள் தேவைதான். ஏனெனில் அவர்களாலேயே தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.