இலங்கை அரச இனவாதிகளால் யாழ்ப்பணத்தில் இருந்து இயங்கும் பத்திரிகைகளுக்கு கொலை அச்சுறுத்தல்

கறுப்பு தலைக்கவசமணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் யாழ். தினக்குரல், உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் கடிதங்களைக் கையளித்துச் சென்றுள்ளனர்.

warninhசெவ்வாய் மாலை ஏழு மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. பயங்கரவாதிகள் தொடர்பான செய்திகளைப் பிரசுரித்து யாழ்.குடாநாட்டு மக்களை தடுமாற்றத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்றும் அதனை மீறி நடப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் அச்சுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழர்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு என்ற பெயரிலான அக்கடிதத்தில் 2002இல் எடுக்கப்பட்ட பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் போன்றோருடைய படங்களை இந்திய ஊடகங்கள் பிரசுரிப்பதை இங்குள்ள ஊடகங்களும் செய்யுமானால் அவற்றிற்கெதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உண்மைச் செய்திகளைப் பிரசுரிக்காமல் தவறான தகவல்களைத் தொடர்ந்து பிரசுரித்து இப்பத்திரிகைகள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவதாகவும் அக்கடிதம் குற்றம் சாட்டியுள்ளது.
 
தொடர்ந்தும் நாம் எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பி வைக்கப் போவதில்லை என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர்களிடையே அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. கடந்த காலங்களில் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதும், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும்  பத்திரிகைகள் எரிக்கப்பட்டதும் நடைபெற்றிருக்கிறது. அது நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பு என்றதன் பெயராலேயே நடைபெற்றிருக்கிறது.
 
ஆனால் இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட எவரும் கைது செய்யப்படவும் இல்லை. தண்டனைக்குள்ளாக்கப்படவும் இல்லை. பயங்கரவாதிகளைப் பாராட்டி புலம் பெயர்ந்த ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை இங்கு மீள் பிரசுரம் செய்து மக்களின் சுய நம்பிக்கையை சிதறடிக்க வேண்டாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இங்குள்ள தினசரிகளில் பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுத்து வெளியாகும் செய்திகளை நாம் தொடர்ச்சியாக அவதானித்துக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பல எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன. 

எங்களுடைய  அச்சுறுத்தல் புறக்கணிக்கப்பட்டு வருவதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. யாழ்ப்பாணத் தினசரிகள் ஏனைய தினசரிகளில் வெளியாகும் செய்திகளையே பிரசுரிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.