தப்புத்தாளம் போடும் சிவநாதன் கிஷோரும் நல்லதம்பி சிறிகாந்தாவும்!

பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் என்பார்கள். இப்போது புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன.
 
தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கொஞ்சக் காலமாக தமிழ்மக்களை வானிலிருந்து குண்டு போட்டும் தரையில் இருந்து செல் அடித்தும் மனிதப் படுகொலையை கச்சிதமா அரங்கேற்றின மகிந்த இராசபக்சேயின் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

tna-thurokiஇரண்டு நாள்களுக்கு முன் வன்னியில் உள்ள வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள மக்களை வெளியே விடுமாறு  மன்னிப்சபைசபை அறிக்கை மூலம் கேட்டது. கேட்பததோடு நில்லாமல் தெருவுக்கு இறங்கி போராடியது. 
 
ஆனால் கிஷோர் இராபச்சேயைக் கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கிறார். அவரது தமிழ்க் குருதி படிந்த கையைப் பிடித்துக் குலுக்குகிறார்.
 
இன்னொரு தமிழத் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் நல்லதம்பி சிறிகாந்தா அமைச்சர் பசில் இராசபக்சேக்கும் மீள்குடியேற்றம் மற்றும் இடர் நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருவருக்கும்  பாமாலை பாடி புகழ்மாலை சூட்டுகிறார். இந்த இரு அமைச்சர்களும் மீள்குடியேற்றத்தை மிகுந்த “அர்ப்பணிப்பு”  ஓ:டு செய்வதாக சான்றிதழ் வழங்குகிறார். சிறைவைக்கப்பட்டுள்ள எமது உறவுகளோ வதை முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி மழைவெள்ளத்தில் மிதக்கும் கூடாரங்களில் அரசு கொடுக்கும் அரிசியையும் மாவையும் சமைத்துச் சாப்பிட வழியில்லாது திண்டாடுகிறார்கள். மருத்துவ வசதியின்றி அல்லல்படுகிறார்கள். மீள்குடியமர்த்தப் பட்டோரில் பெரும்பாலோர் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள்.
 
இந்த அழகில் கிஷோரும் சிறிகந்தாவும் அரசையும் அமைச்சர்களையும் இந்திரன் சந்திரன் எனப் போற்றிப் பாடுவது அந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?
 
கடந்த கிழமை கனடிய தமிழ் வானொலிக்கு சிறிகாந்தா  கொடுத்த செவ்வியில் தான் ஒன்றும் அரசியலில் கற்றுக்குட்டி இல்லை என்றும் தான் 7 வயது தொட்டே அரசியலில் ஈடுபடத் தொடங்கியதாகவும் தனது பதினேழாவது வயதில் தீவிர அரசியலில் குதித்ததாகவும் தான் ஒரு சட்டத்தரணி என்றும் தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்றும் மிகவும் தலைக் கனத்தோடு சொன்னார். அவரது வார்த்தையில் ஆவணம் பளிச்சிட்டது என வானொலி நேயர்கள் சொன்னார்கள். 
 
சிறிகாந்தா தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் என்று எதை வைத்துச் சொல்கிறார் என்பது தெரியவில்லை. 2001 ஆம் ஆண்டு திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிட்டுத் தோற்றவர். மீண்டும் 2004 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அதே ரெலோ சார்பில் போட்டியிட்டுத் தோற்றவர். நடராசா ரவிராஜ் அரச கூலிப்படைகளால் கொல்லப்பட்டதன் காரணமாகவே அவரது வெற்றிடத்திற்கு தேசியப்பட்டியலில் இருந்து சிறிகாந்தா நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.
 
சட்டத்தரணியாக இருந்தாலும் சரி அரசியலைக் கரைத்துக் குடித்த அரம் போல் புத்திக் கூர்மையராக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி எதிரிகளோடு பின் வாசலால் சென்று கூடிக் குலாவி விருந்துண்டு  அற்ப சலுகைகளுக்காக அவர்களுக்கு சாமரம் வீசுபவர்கள் யாராக இருந்தாலும்  அவர்களால் தேசத்துக்குப் பயனில்லை. தேசியத்துக்கு பயனில்லை. அவர்கள் ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர். 
 
இதனை தப்புத்தாளம் போடும்  சிவநாதன் கிஷோரும் சிறிகாந்தாவும் புரிந்து கொள்ள வேண்டும். 
 
கட்டுப்பாட்டுக்குப் பெயர் போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படி ஒழுங்காகப் பட்டிக்குள் இருக்க மறுக்கும் கருப்பு ஆடுகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறோம். காரணம் உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கட்சிக்குள் இருப்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாக இருக்கும். அது மட்டுமல்ல உட்பகையை அது மெலிதாயிருக்கும் தொடக்க நிலையிலேயே களைந்துவிட வேண்டும். அங்ஙனமன்றி அது வலுத்தபின் பலர் கூடி வெட்டினாலும் வெட்டுவோரை அது வெட்டும். இந்த இருவரும் கடந்த காலங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு முரண்பட்டு வந்தவர்கள் என்பதனை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

padaipalikal

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.