தடுப்புமுகாம்களில் இலங்கை இனவாதப் படையினரால் இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு! திடுக்கிடவைக்கும் சம்பவங்கள்!!

வவுனியா வதைமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பெண்கள் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரால் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுவருவது தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்தக்கொடூரம் குறித்து எந்த தகவல்களும் வெளிவராதபோதும் கடந்த ஒக்டோபர் மாதம் இதுதொடர்பான மூன்று வழக்குகள் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததை அடுத்து விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

vilippu-nerudalவவுனியாவிலுள்ள வலயம்-2, வலயம்-3 முகாம்களிலேயே இவ்வாறான கொடூரங்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புமுகாமில் கைது செய்துசென்ற 14,15,16 வயது சிறுமிகள் படையினரால் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் கடந்த ஒக்டோபர் மாதம் வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது என்றும் 14 வயதான – மனநிலை பாதிக்கப்பட்ட – சிறுமி ஒருத்தியும் இவ்வாறு படையினரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் வெளியே பெயர் குறிப்பிடவிரும்பாதவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தடுப்புமுகாமில் இராணுவ புலனாய்வுபிரிவினரால் கைது செய்யப்பட்ட 17 வயது இளம்பெண் ஒருவர் விடுதலைப்புலிகள் இயக்க பெண்போராளி ஆவார். இவரை விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறப்பு தடுப்புமுகாமுக்கு மாற்றிவிடுவோம் என்று மிரட்டி, வவுனியாவிலுள்ள இன்னொரு தடுப்புமுகாமுக்கு கொண்டுசென்று பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட முகாமில் ஏற்கனவே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 17,19 வயது பெண்கள் காணப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கபட்டது.

கடந்த ஜூலை மாதம், காயமடைந்த பெண்போராளிகள் பதவியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா படையினர் பார்க்கக்கூடியதாக, அந்த பெண்போராளிகளை நிர்வாணமாக நிறுத்திவைத்து, நீர்ப்பாய்ச்சியால் நீரை விசிறியடித்து குளிப்பாட்டினார்கள் என்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் மூன்று இளம்பெண்களின் சடலங்கள் வாவியிலிருந்து மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டன. இந்த சடலங்களில், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்கான காயங்கள், நகப்பிராண்டல்கள் காணப்பட்டதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தடுப்புமுகாம்களில் இடம்பெறும் இந்த கொடூரங்கள் குறித்து பெயர்குறிப்பிட விரும்பாத பன்னாட்டு உதவுஅமைப்பு பிரதிநிதி ஒருவர் கூறுகையில் – இத்தகைய பாலியல் வல்லுறவு செயல்களில் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவில் இயங்கும் தமிழர்களும் ஈடுபடுவது அருவருவத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் பாலியல்வல்லுறவு எனப்படுவது அரச படையினரின் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.