தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத் தயார் – மனோ கணேசன்

தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வுத் திட்டங்களை முன்வைத்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதில் சிக்கல் எதுவுமில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ManoGaneshan5நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்கப்பட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு, நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த சுதந்திரத்தை ஏனைய இனங்களுடன் இணைந்து தமிழ் மக்களும் அனுபவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
மருதானை எல்பினிஸ்டன் அரங்கில் இன்று மாலை நடைபெற்ற மாகாண தமிழ் இலக்கிய விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
சகல இன மக்களின் நலன்களுக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு தமிழ் சமூகம் ஆதரவளிக்க வேண்டுமென மாகாண கலாச்சார அமைச்சர் உபாலி கொடிகார குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.