முகாம்களில் சுதந்திரமான நடமாட்டம் என்பது அரசின் போலியான நடவடிக்கை

சுதந்திரமான நடமாட்டம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு போலியானது. தேசியத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கு கைக்கொள்ளப்பட்டுள்ள காய் நகர்த்தலே இதுவாகும். முகாம்களுக்குள் சுதந்திரம் என்று கூறுகின்ற அரசாங்கம், அவர்கள் தமது சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கு ஏன் சுதந்திரம் வழங்க மறுக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

sureshநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எந்தத் தீர்மானத்திற்கும் வரவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். எது எப்படியிருப்பினும் இடம்பெயர்தலுக்கு வழிவகுத்த அரசாங்கம், மீள்குடியேற்றத்தையும் வாழ்வியல் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியதன் பின்னர் தேர்தலுக்கு செல்வதே சிறப்பானதாக அமையும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், சுதந்திர நடமாட்டம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகியவை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

தேர்தல்களில் வாக்களிப்பது என்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். இது அனைவருக்கும் பொதுவானது. ஆனாலும் வன்னித் தமிழ் மக்களை இடம்பெயர வைத்த அரசாங்கமே அவர்களது வாக்களிக்கும் உரிமையைப் பறித்துள்ளது. தமிழ் மக்கள் இடம்பெயரவில்லை. அவர்கள் அரசாங்கத்தினால் இடம்பெயர்க்கப்பட்டவர்கள். இடம்பெயர்க்கப்பட்ட மக்களை அகதிகளாக முகாம்களுக்கு முடக்கி வைத்திருந்த அரசாங்கம், தற்போது மீளக்குடியமர்த்துவதாகவும் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களுக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுவதெல்லாம் தேர்தல்களை மையமாகக் கொண்டவையாகவே கருத முடிகின்றது.

அவல நிலைக்குள்ளான எமது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு வழிவகுப்பதற்கு அரசாங்கத்திடம் உண்மையான அக்கறை எதுவும் இல்லை. அது இருந்திருந்தால் முகாம்களுக்குள் சுதந்திரம் என்று கூறுகின்ற அரசாங்கம், அவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கும் தமது தொழில்களை மேற்கொள்வதற்கும் தங்களது சுதந்திரமான வாழ்க்கையை உறுதி செய்து கொள்வதற்கும் ஏன் அனுமதி வழங்க முடியாதிருக்கின்றது. இது அரசாங்கத்தின் போலியான நடவடிக்கை.

நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கு அரசாங்கம் கைகொள்கின்ற மிகவும் கேவலமானதும் அப்பட்டமானதுமான செயற்பாடுகளே இவையாகும்.

இடம்பெயர்ந்தவர்கள் தமிழராக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் அனைரும் தங்களது சொந்த இடங்களில் உடனடியாக மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலியுறுத்தலாக அமைந்துள்ளது. அந்த மக்கள் அவர்களது சொந்த வீடுகளுக்கு செல்வதை அரசாங்கம் மறுக்கவும் கூடாது. அரசாங்கம் அறிவித்திருக்கின்ற சுதந்திரமான நடமாட்டம் என்பதன் பொருள் அவர்கள் தமது சொந்த வீடுகளுக்கு செல்வது தமது வாழ்வியல் தேவைகளை தாமே சுதந்திரமாக நிறைவு செய்து கொள்வதுமாகும். மாறாக முகாம்களுக்குள் சுதந்திரம் என்பது முழுமையானதாக ஆகிவிட முடியாது. இதனைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றன. வாக்களிக்கும் உரித்துடைய தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நன்றாக அறிவார்கள். கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாம் எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவில்லை. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாட்டில் இல்லாத காரணத்தால் அவர் நாடு திரும்பியதும் கட்சி கூடி ஆராயவுள்ளது. அதன் பின்னரே தீர்மானமொன்றுக்கு வரமுடியும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.