சரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மீறல் மனு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது – கோதபாய

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்தென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

raja-kothaசரத் பொன்சேகாவிற்கு ஏற்கனவே போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உத்தியோகபூர்வ இல்லத்தில் சில காலம் தங்கியிருப்பதற்காகவும், பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வதற்காகவும் ஜெனரல் சரத் பொன்சோக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
 
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, இராணுவப் படைத் தளபதி ஜயகத் ஜயசூரிய, காவல்துறை மா அதிபர், பதில் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி, ஜனாதிபதி செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
தேவைக்கு ஏற்றவாறு ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
 
சரத் பொன்சேகா விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து நீதிமன்றத்தின் உதவியை நாடுவது நியாயமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, 600 படைவீரர்களும், பத்து வாகனங்களும், இரண்டு குண்டு துளைக்காத வாகனங்களும் தேவை என ஜெனரல் சரத் பொன்சேகா கோரியுள்ளார்.
 
600 படைவீரர்களைக் கொண்ட தமது பாதுகாப்பை 25 படைவீரர்கள் வரை குறைக்கப்பட்டதாகவும், பின்னர் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அது 70 படைவீரர்கள் வரை உயர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாதுகாப்பு அமைச்சு தமக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.