மாவீரர் தினத்தில் தனி ஈழம் அமைவதற்கு சூளுரை: டாக்டர் கிருஷ்ணசாமி

இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்காக போராடி உயிர் நீத்த மாவீரர்கள் தினத்தை நாளை புதிய தமிழகம் கட்சி மாவீரன் பிரபாகரன் தினமாக அனுசரிக்கும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

kirushnasamyஇதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ் இனத்திற்கென்று ஒரு தனிநாடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வந்த ஈழத் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்.

அந்த தியாகிகளை போற்றும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதியை மாவீரர் தினமாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அறிவித்து அனுசரித்து வந்தார்.

தமிழினத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்கிற பிரபாகரனின் லட்சியம் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் நிச்சயம் அந்த லட்சியம் நிறைவேறும். அதற்காக உலகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

நவம்பர் 27ஆம் தேதி பிரபாகரன் மக்களிடையே தோன்றி உரையாற்றுவார் என்று சில தகவல்கள் வருகின்றன. ஆனால் அது குறித்த உண்மையான தகவல்கள் தெரியவில்லை. ஆனாலும் மாவீரர் தினத்தை புதிய தமிழகம் கட்சி பிரபாகரன் தினமாக அனுசரித்து தனி தமிழீழத்தை பெறுவதற்கான சூளுரை ஏற்க முடிவு செய்துள்ளது.

இதன்படி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், ஒன்றியங்கள் மற்றும் கிராமப்பகுதிகளிலும் கூட பிரபாரகனின் படத்தை வைத்து இந்த மாவீரர் தினத்தை அனுசரிக்க வேண்டும். இதில் தமிழகத்தின் மக்கள் பெருமளவு பங்கேற்க வேண்டும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.