பொன்சேகா ஒரு பயந்தாங்கொள்ளி – இலங்கை அரசு: சபாஷ் சரியான போட்டி!

எனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று கூறும் பொன்சேகா, கிளிநொச்சிக்குப் போகவே பயந்து கொண்டிருந்ததாகவும் , அவரை அதிபர் ராஜபக்சதான் தைரியப்படுத்தி அழைத்துச் சென்றதாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

generalமுள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை நிகழ்த்துவதில் போட்டிபோட்டு செயல்பட்ட முன்னாள் இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவும், அதிபர் ராஜபக்சவும் தற்போது எதிரிகளாக வரிந்துக்கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

வரவிருக்கும் அதிபர் தேர்தலில் ராஜ பக்சவுக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டுள்ள பொன்சேகா, ” எனது ராணுவ வாழ்க்கையில் ஒரு தோல்வியையும் சந்தித்தவன் இல்லை ; பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன் ” என்று அண்மையில் மிகுந்த ஆணவத்துடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது எதிரியாகிவிட்ட பொன்சேகாவை மட்டம்தட்டும் வகையில் அவர் ஒரு பயந்தாங்குளி என்பது போன்று, தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் மூலம் செய்தி வெளியிட வைத்துள்ளார் ராஜபக்ச.

” ஈழப் போர் முடிந்ததும், அதிபர் ராஜபக்ச கிளிநொச்சி போக விரும்பினார்.அதை ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவிடமும் தெரிவித்தார்.

அனால் அந்த யோசனையை விட்டு விடுமாறு அதிபரிடம் கூறிய பொன்சேகா, கிளிநொச்சிக்கு அதிபருடன் வர பயந்தார்.போர் இன்னும் நடக்கிறது என்றும் கூறினார்.தனது பயத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் ராஜபக்சதான் பொன்சேகாவுக்கு தைரியம் கூறினார்.பயப்பட வேண்டாம். தைரியமாக என்னுடன் வாருங்கள் என்று கோரினார். இதையடுத்து வேறு வழியில்லாமல், தனது மனதில் இருந்த அச்சத்தை முழுமையாக விடாமல் அவர் அதிபருடன் செல்ல ஒப்புக் கொண்டார்.

அதன் பின்னர் போர் பாதித்த பகுதிக்கு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்தார் அதிபர் ராஜபக்ச. கடும் போர் நடந்து கொண்டிருந்தபோது போர்க்களத்திற்குச் சென்ற முதல் உலக அதிபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

அதேபோல மாவிலாறு சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது போரை அறிவித்தார் ராஜபக்ச. அப்போது பொன்சேகா களத்திலேயே இல்லை.விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிக்கி அவர் மருத்துவமனையில் இருந்தார்.

மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் நாட்களிலும் கூட போர் முனைக்கு அவர் ஒருமுறை கூட சென்றதில்லை.கொழும்பில் உட்கார்ந்து கொண்டு உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

நான் ஒருபோதும் தோல்வியைச் சந்தித்ததில்லை என்று கூறும் பொன்சேகாவின் தலைமையில்தான் இலங்கை ராணுவத்திற்கு முகமலை பகுதியில் 3 முறை தோல்வி கிடைத்தது.கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் உயிரிழந்தனர் ” என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் பொன்சேகாவை கடுமையாக கிண்டலடித்து குறை கூறியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.