திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யக் கோரி ஒபாமா கடிதம்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

obamaஇது குறித்து அலரி மாளிகையில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுவிக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். திஸ்ஸநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடகங்கள் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்படுகின்றன. குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததன் அடிப்படையில் திஸ்ஸநாயகத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து சட்டமா அதிபரிடம் நான் ஆலோசனை கோரியுள்ளேன்.

முன்னொரு போது என்மீது படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், நான் உரிய முறையில் சட்டத்தரணி மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலைப் பெற்றேன். எனக்கு எதிராக சாட்சியளித்தவர்கள் பொய் சாட்சி சொன்னமைக்காக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் திஸ்ஸ நாயகமும் தனது தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்ய முடியும். அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ளலாம். இதனை விடுத்து திஸ்ஸநாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது.

திஸ்ஸநாயகத்தை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மட்டுமே என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கோணவெல சுனிலுக்கு பிணை கொடுத்தது போல் நான் பிணை வழங்க முடியாது. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது நீதிமன்றத்தை அவமதித்தாக அமைந்துவிடும்” என்று கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.